வியாழன், 1 ஜூலை, 2010

நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா முழு ஆதரவு-நேரில் சந்தித்து தெரிவித்தார்?

கர்நாடக போலீஸாருக்கு கடுக்காய் கொடுத்து விட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்தியானந்தாவை ரகசியமாக நேரில் சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட பின்னர் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் தலைமறைவாகி விட்டனர். ஒரு மாத கால தலைமறைவுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்போது நித்தியானந்தா ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

நித்தியானந்தா மீதான வழக்குகளில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியம் என்பதால் அவரையும் பிடிக்க போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் மாயாவி போல மாறி தலைமறைவாகவே இருக்கிறார் ரஞ்சிதா.

கேரளாவில் பதுங்கியுள்ளார், அமெரிக்காவுக்கு ஓடி விட்டார், டெல்லியில் இருக்கிறார் என்று பலப்பல செய்திகள் வந்தன. ஆனால் ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்பது நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரமத்தினருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ரகசியமாக சென்னைக்கு வந்து போனார் ரஞ்சிதா என்று ஒரு தகவல் வெளியானது. தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருப்பதற்காக தலையை பாப் கட் செய்து, ஜீன்ஸ், பேன்ட்டில் ரஞ்சிதா வந்து போனதாகவும் கூறப்படுகிறது.

சென்னைக்கு வந்த அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் அதிரடியாக பெங்களூர் சென்று நித்தியானந்தாவை சந்தித்துப் பேசி விட்டு கிளம்பியதாக புதிய செய்தி வந்துள்ளது.

மேலும் ரஞ்சிதா ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கும், அதேபோல நித்தியானந்தா ஒரு பேட்டியையும் கடந்த சில நாட்களுக்குள் அளித்திருந்தனர். இந்த பேட்டிகளை கொடுப்பதற்கு முன்பே இருவரும் சந்தித்து தத்தமது நிலைகளை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே இந்த பேட்டிகளை அளித்ததாகவும் தெரிகிறது.

மேலும் நித்தியானந்தாவை ரஞ்சிதா சந்தித்தபோது தனது முழு ஆதரவை அவருக்குத் தெரிவித்தாராம். அவருக்கு எதிராக தான் திரும்பப் போவதில்லை என்றும் ரஞ்சிதா கூறினாராம். இதையடுத்து நிம்மதி அடைந்த நித்தியானந்தா, ஒரு புத்தகம் எழுதுமாறும், அதில் தன்னைப் பற்றி பெருமையாக கூறுமாறும், ஆபாச சிடி குறித்துக் கூறி அதை மறுத்து எழுதுமாறும் அட்வைஸ் கொடுத்தாராம் நித்தியானந்தா.

இதையடுத்தே தான் புத்தகம் எழுதப் போவதாக தனது பேட்டியில் தெரிவித்தார் ரஞ்சிதா என்கிறார்கள்.

மொத்தத்தில் தலைமறைவாக இருந்து வந்த ரஞ்சிதாவுக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே தற்போது நெருக்கமான தொடர்பு உருவாகி விட்டதாகவும், தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருப்பதாகவும், தற்போது நித்தியானந்தாவின் ஆலோசனைப்படி ரஞ்சிதா நடக்க ஆரம்பித்துள்ளதாகவும், அவர் ஒருபோதும் நித்தியானந்தாகவுக்கு எதிராக திரும்ப மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

இவையெல்லாம் கர்நாடக சிஐடி போலீஸாருக்குத் தெரியாமல் இல்லை. கூட்டாக சேர்ந்து இருவரும் போட்டு வரும் நாடகத்தை அறிந்துள்ள அவர்கள், ரஞ்சிதாவை பொறி வைத்துப் பிடிக்க புதிய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.

அதேசமயம், நித்தியானந்தா விவகாரத்தில் சிஐடி போலீஸார் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: