புதன், 30 ஜூன், 2010

கே.பி. நினைத்தால் கூட விடுதலை புலிகளின் நிதியினை இலங்கைக்குள் கொண்டு வர முடியாது

கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நினைத்தால் கூட விடுதலை புலிகளின் நிதியினை இலங்கைக்குள் கொண்டு வர முடியாது. எனவே சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவேனும் வன்னி மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். என்று மீளக்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூகர்த்தி முரளிதரன் தெரிவித்தார். சிறுபான்மை இன மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்தமை வரவேற்கத்தக்க விடயமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வன்னியில் காடுகளுக்குச் சென்று விறகு வெட்டக் கூட ஆண்களில்லாத அவல நிலை காணப்படுகிறது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது மக்கள் படும் துயரங்களை அரசியலாக்குவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சிறுபான்மை நலன்களுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
இதுவே காலத்தின் தேவை எனக் கூறி சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அத்துடன் சர்வதேச நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அரசாங்கத்தின் ஊடாக உதவிகளை வழங்க விரும்பாவிட்டாலும் நேரடியாகவேனும் உதவிகளை செய்ய வேண்டும். ஏனெனில் வன்னியில் மக்கள் அனைத்தையுமே இழந்தவர்களாக உள்ளனர். குமரன் பத்மநாதன் (கே.பி)  ஊடாக சர்வதேசத்தில் காணப்படும் விடுதலைப்புலிகளின் நிதிகளை பெற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். ஆனால் வன்னி மக்களுக்காக அவரெடுக்கும் முயற்சிகளை பாராட்ட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: