வெள்ளி, 2 ஜூலை, 2010

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக குழப்பம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது.
அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்   நேற்று வியாழக்கிழமை   கடமையைப்    பொறுப்பேற்கவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், நேற்றுக்காலை யாழ்.கச்சேரிக்கு திருமதி சுகுமார் சென்றிருந்த போது கே.கணேஷின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது.   அரச அதிபர் கணேஷின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு யாழ்.கச்சேரியில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஆயினும் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கணேஷ் நேற்று தனது கடமைகளை மேற்கொண்டதாக யாழ்.கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயம் குறித்து அரச அதிபரிடம் நிருபர்கள் தொடர்புகொண்ட போது,     யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும்    6 மாத காலத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாகத் திருமதி சுகுமாரிடம் கேட்டபோது, யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நியமனக் கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு எனக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.
www.ilakkiyiainfo.com 

கருத்துகள் இல்லை: