புதன், 30 ஜூன், 2010

ஓரணியில்(BJP,CPI,ADMK) பா.ஜ., - இடதுசாரி, அ.தி.மு.க.,: ஜூலை 5ல்"பாரத் பந்த்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., இடதுசாரி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அடுத்த மாதம் 5ம் தேதி நாடு தழுவிய "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

பெட்ரோலிய பொருட்களின் விலையை, மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. மேலும், பெட்ரோல் மீதான விலையை நிர்ணயிக்கும் தனது உரிமையில் இருந்தும் மத்திய அரசு விலகிக் கொண்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., சார்பில் ஏற்கனவே நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இடதுசாரி கட்சிகளும் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் "பந்த்' நடத்தியுள்ளன.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி, நாடு தழுவிய அளவிலான பிரமாண்ட போராட்டத்தை நடத்துவதற்கான முயற்சியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் களமிறங்கினார். பா.ஜ., - இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து பேச்சு நடத்தினார். இதுபோல் சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக்தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடனும் அவர் பேச்சு நடத்தினார். அவரின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5ம் தேதி நாடு தழுவிய அளவிலான "பந்த்' நடத்தப் போவதாக தே.ஜ., கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் தனித் தனியாக அழைப்பு விடுத்துள்ளன. மேலும், தெலுங்கு தேசம், அ.தி.மு.க., - சமாஜ்வாடி, மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அதே நாளில் "பந்த்' நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து சரத் யாதவ் கூறியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், விலை உயர்வு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. முதல் முறையாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத் தக்கது. எமர்ஜென்சிக்கு பின், எதிர்க்கட்சிகள் தற்போது தான் ஓரணியில் திரண்டுள்ளன. இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.

பா.ஜ., இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, நேர்மையற்ற செயல். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. விலை உயர்வை எதிர்த்து பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், வரும் 5ம் தேதி நாடு தழுவிய "பந்த்' நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூறுகையில்,"மதச்சார்பற்ற மற்ற கட்சிகளையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து அந்த கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்' என்றனர்.

இதற்கிடையே, இந்த போராட்டம் குறித்து மவுனம் காத்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இருந்தாலும், பகுஜன் சமாஜ், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இந்த "பந்த்'திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: