புதன், 30 ஜூன், 2010

ஜெயலலிதா, ஸ்டாலின், கனிமொழிக்கு சொந்தமான சாராய ஆலை ???

சென்னை : கொடநாடு எஸ்ட்டேடில் 142 வருட கால மிகப் பழமையான தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணி குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியை நியமித்துள்ள முதல்வர் [^] கருணாநிதி [^], தனது மகன் ஸ்டாலின் [^], மகள் கனிமொழி ஆகியோர் நிறுவியுள்ள சாராய ஆலை குறித்தும் விசாரிக்க அதிகாரியை நியமிப்பாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக கொடநாட்டில் இருந்தபடி அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி, அதுகுறித்து விசாரித்து வந்த நேர்மையான சிபிஐ அதிகாரியை மாற்றி, விசாரணையை சீர்குலைத்த கருணாநிதி, கொடநாடு எஸ்டேட் குறித்து விசாரணை நடத்த அதிகாரியை நியமித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது களங்கம் ஏற்படுத்த முன்பு சிறுதாவூர் நிலம் தொடர்பாக ஆணையத்தை அமைத்து அதில் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல கொடநாடு எஸ்ட்டேட்டுக்குள் விதிகளை மீறி கட்டடம் கட்டப்படுவதாக கூறி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அதில் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கோர்ட் கூறியதும் வாயடைத்துப் போனார்.

அதன் பின்னர் உள்ளூர் திமுகவினரை வைத்து சாலைப் பிரச்சினையை எழுப்பினார். ஆனால் அது தனியார் சாலைதான் என்று கோர்ட் கூறியதும் இதிலும் கருணாநிதிக்கு மிஞ்சியது தோல்வியே.

2007ம் ஆண்டு முதல் நான் கொட நாடு எஸ்ட்டேடில் தங்க ஆரம்பித்த பின்னர் உள்ளூர் திமுகவினர், அமைச்சரவை வைத்து எனக்கு தொந்தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல அவதூறுப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார் கருணாநிதி. ஆனால் அனைத்திலும் அவருக்குத் தோல்விதான்.

இந்த நிலையில் கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தனக்கு வேண்டிய செய்தியாளரை வைத்து ஒருகேள்வி கேட்க வைத்து இப்போது எனக்கு எதிராக புதிய விஷமப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கொடநாடு எஸ்ட்டேடுக்குள் உள்ள மண் சுவரினால் ஆன 142 ஆண்டு கால பழைய தொழிற்சாலை விழும் நிலையில் உள்ளது. எனவே தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. சட்டத்திற்கு உட்பட்டும், முறையாக அனுமதி பெற்றும்தான் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் விசாரணை நடத்த அதிகாரியை நியமித்திருப்பது விஷமத்தனமானது, கடும் கண்டனத்துக்குரியது.

முதல்வர் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின், துணைவியின் மகள் கனிமொழி ஆகியோர் புத்தம் புதிய சாராய தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதாக செய்திகள் [^] வருகின்றன. அந்த ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலிரு்நது அதிகஅளவில் ஆர்டர்கள் தரப்படுகின்றன. இதுகுறித்து கருணாநிதி விசாரணை நடத்துவாரா.

போலி மருந்து, காலாவதி மருந்து வழக்கில் ஸ்டாலின் மருமகனுக்குத் தொடர்பு என செய்தி வருகிறது. இதுகுறித்து அவர் விசாரிப்பாரா.

பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் முரசொலி அலுவலகம் என கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரிப்பாரா.

அண்ணா அறிவாலயத்தின் முற்பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா அமைக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்தாரா கருணாநிதி.

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குப் பின்னால் உள்ள மாநாகராட்சிக்குச் சொந்தமான இடத்தை அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிப்பாரா.

கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பலருக்குச் சொந்தமான மாளிகைகளில் பெருமளவில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்தெல்லாம் கருணாநிதி விசாரிக்கத் தயாரா என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

காவிரி நீர் கோரி போராட்டம்:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பின்படி, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதன் காரணமாகவும், இதைத் தட்டிக் கேட்க திமுக அரசு தயங்குவதன் காரணமாகவும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

மேட்டூர் அணை தான் திறக்கப்படவில்லை, நிலத்தடி நீரை வைத்தாவது குறுவை சாகுபடி செய்யலாம் என்று நினைத்தால் அதிலும் தற்போது மண் விழுந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நிலவும் கடுமையான மின் வெட்டு காரணமாக நிலத்தடி நீரை வைத்து சாகுபடி செய்வது என்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், குறைவான மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார் பம்பு செட்டுகள் அடிக்கடி பழுதடைவதாகவும், பழுதடைந்த பம்பு செட்டுகளை சரி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் அடிப்படை வசதிகளோ இதை விட மோசமான நிலையில் இருக்கின்றன. பாதாள சாக்கடைத் திட்டம் என்று கூறி, நான்கு ஆண்டு காலமாக பாதாள குழிகளை தோண்டி, போக்குவரத்தைத் தடை செய்து, மக்களை பெருத்த இன்னலுக்கு நகராட்சி நிர்வாகம் ஆளாக்கி உள்ளது. இதன் காரணமாக மக்கள் தத்தம் பணியிடங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும், கை, கால்களை முறித்துக் கொள்ளக்கூடிய நிலை மாணவ- மாணவியருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடைத்திட்டத்திற்காக குழிகள் தோண்டப்படும் போது, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதன் காரணமாக, சாக்கடை நீருடன் கலந்த குடிநீரை மக்கள் குடிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

துப்புரவுப் பணிகள் அறவே மேற்கொள்ளப்படு வதில்லை. மொத்தத்தில் திருவாரூர் நகரத்தையே அசுத்தம் கவ்விக்கொண்டிருக்கிறது. பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் மக்களை நான்கு ஆண்டு காலமாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் நகராட்சி நிர்வாகம், இது போதாது என்று ஸ்ரீதியாகராஜர் ஆலயத்தின் நான்கு பிரதான வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கிறோம் என்ற பெயரில், அனைத்து சாலைகளிலும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், நகரின் மையப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த அரசு பொது மருத்துவமனையை, 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றி மக்களுக்கு மேலும் கூடுதல் துன்பத்தை திமுக அரசு அளித்துள்ளது.

இதைப்பற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையையும் திமுக அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.

எனவே, குறுவை சாகு படிக்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காத திமுக அரசைக் கண்டித்தும், திருவாரூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டிற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தராமல் நிர்வாகச் சீர்கேட்டை உருவாக்கியுள்ள திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 1ம் தேதி திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பனகல் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா

கருத்துகள் இல்லை: