வெள்ளி, 2 ஜூலை, 2010

தொண்டை அறுக்கப்பட்டு போலீசார் பலி : நக்சல்களின் அரக்க உணர்வு அம்பலம்

: சத்திஸ்கரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தொண்டை அறுக்கப்பட்டு, தலைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் நக்சலைட்களால் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, நக்சலைட்கள் கடும் தாக்குதல் நடத்தினர். உயரமான மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், போலீசாரை சுற்றி வளைத்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 29 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியானோரின் உடல்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாக ராய்ப்பூர் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, நக்சலைட்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள் இறந்தபின், உடல்களை சேதப்படுத்தியுள்ளனர். பலியான போலீசாரின் தொண்டைகளை, கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களால் கிழித்து, அறுத்துள்ளனர். பின், தலைகளையும் கல் போன்றவற்றை வைத்து நசுக்கி சேதப்படுத்தியுள்ளனர். சற்றும் மனிதாபிமானம் இன்றி, மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

நக்சலைட்கள் தாக்குதலில் காயமடைந்த வீரர் ஒருவர் கூறியதாவது: நக்சலைட்கள் மரங்களிலும், மலை உச்சிகளிலும் பதுங்கி இருந்துள்ளனர். இது தெரியாமல் நாங்கள் அவர்களிடம் சிக்கி விட்டோம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் தாக்குதல் நடத்தினர். நான்கு பக்கமும் இருந்து சுட்டதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 200க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் இந்த தாக்குதலில் பங்கேற்றனர். படுகாயமடைந்த சில வீரர்களை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்குள் என் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று பேர் பலி: சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று, மூன்று கிராம மக்களை கடத்திச் சென்ற நக்சலைட்கள், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, போலீசார் அங்கு விசாரணையை துவக்கியுள்ளனர்.

தொலைத்தொடர்பு கோபுரம் தகர்ப்பு: பீகார், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள சிரயு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், திடீரென துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நேற்று ஊடுருவினர். அங்கிருந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தின் இரண்டு கோபுரங்களை குண்டு வைத்து தகர்த்தனர். பின், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டவாறு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய நக்சலைட்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கயா ரயில்வே ஸ்டேஷனில் பீகார் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் நக்சலைட் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் என்பதும், பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இறுதி மரியாதை: சத்திஸ்கரில் இரண்டு நாட்களுக்கு முன் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீசார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் எட்டு பேர் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உடல்கள், சிறப்பு விமானம் மூலம் நேற்று புவனேஸ்வருக்கு கொண்டு வரப்பட்டன. முதல்வர் நவீன் பட்நாயக், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முழு அரசு மரியாதையுடன் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நக்சல் ஒழிப்பில் சென்னை பொன்னுசாமி: நக்சலைட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு பதவியில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நக்சலைட்களின் நடவடிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, அவர்களை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவில் சிறப்பு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளில் பொன்னுசாமி, நாதனேல் ஆகிய போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே, சத்திஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பணியாற்றுவர். இந்த பதவிகள் ஐ.ஜி., அளவிலானவை. பொன்னுசாமி, சென்னையில் டி.ஐ.ஜி., யாக பணியாற்றியவர். இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: