வியாழன், 26 நவம்பர், 2020

மரடோனாவின் 'கடவுளின் கை ..விளையாட்டு உலகின் மோசமான முன்னுதாரணம் மரடோனா?

Rishvin Ismath : விளையாட்டு உலகின் மோசமான முன்னுதாரணம் மரடோனா.
(நீதி, நியாயங்களுக்கு அப்பால் மரடோனாவின் பித்துப்பிடித்த ரசிகனான இருந்தால் இதனை வாசிக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. இந்தப் பதிவு பலருக்கு எரிச்சலை உண்டாக்கலாம், உணர்வுகளை, சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி உண்மையை நோக்குவது சிரமமானது, மதங்கள் என்று வரும்பொழுதும் பலபேர் தோற்றுப் போகும் இடமும் அதுதான்.)
மரணம் மட்டுமே ஒரு மனிதனை புனிதனாக்கி விடுவதில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதும் மிக முக்கியமானது. மரடோனா உலகில் அறியப்பட்டதெல்லாம் ஒரு உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரனாகவே, அதன் பின்னரே மற்றைய அறிமுகங்கள்.
கியூபாவின் காஸ்ட்ரோவுடனும், வெனிசுலாவின் சாவேஸ் உடனும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்ததற்காகவோ,சேகுவேராவின் படத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததற்காகவோ மட்டும் மரடோனாவை புனிதப் படுத்திவிட முடியாது, அப்படி செய்வது மதவெறிக்கு சற்றும் சளைக்காத தூய கம்யூனிஸ வெறியாக மட்டுமே அமையும். யூதர்களை பெரும் எண்ணிக்கையில் கொன்றான் என்ற ஒரே காரணத்திற்காக ஹிட்லரை ஒரு ஹீரோவாகப் பார்க்கும்படியாக இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு காலத்தில் எம்மை மாற்றியிருந்தன என்பதையும் ஞாபகப் படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
ஒரு விளையாட்டு வீரனாக மரடோனாவை கருதினால் உலகின் மிக மோசமான முன்னுதாரணம் என்றுதான் கூற வேண்டும். மரடோனாவை கொண்டாடுவதன் மூலம் ஏமாற்று, மோசடி, போதைப்பொருள் பாவனை, ஊக்கமருந்துப் பாவனை, மைதானத்தில் முறையற்ற நடத்தை ஆகியவற்றையும் அங்கீகரிக்க வேண்டி வருகின்றதே?
1986 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் காலிறுதியில் பந்தை கையால் குத்தி கோல் போட்டு இங்கிலாந்து அணியை தோற்கடித்துவிட்டு, அதனை 'கடவுளின் கை' என்று ஏமாற்றியது, 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் போட்டி ஆரம்பமாக முன்னர் மேற்கு ஜெர்மனியின் தேசிய கீதம் உத்தியோகபூர்வமாக இசைக்கப்பட்ட வேளையில் தொடராக தூசணத்தில் அர்ச்சித்துக்கொண்டு இருந்தமை, 1994 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் பொழுது ஊக்க மருந்து பாவித்தமை கண்டறியப்பட்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டமை என்பவற்றுடன் தொடரான போதைப்பொருள் பாவனை என்று மரடோனாவின் விளையாட்டு வாழ்க்கையில் கறுப்புப் பக்கங்கள் நிறையவே உள்ளன.
மரணம் கவலையானதுதான், ஆனால் மரடோனா உலகின் நேர்மையான, முன்னுதாரணமான விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கடைசி இடத்தில் கூட பதிய முடியாத பெயர். உலகின் மோசமான விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற வேண்டிய பெயர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் மரடோனாவின் 'கடவுளின் கை' குறித்து எழுதி இருந்ததில் சிறு பகுதி :
"கடவுளின் கை"
.**********************
 
 
கொலம்பியாவில் நடைபெறவேண்டிய 1986 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள், அந்த நாடு எதிர்கொண்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக மெஹிகோவில் நடைபெற்றன. போட்டிகளின் மூன்றாவது காலிறுதியில் டியகோ மரடோனா தலைமையிலான ஆர்ஜன்டினா அணி இங்கிலாந்து அணியை ஜூன் 22 ஆம் திகதி ஒரு லட்சத்து பதினையாயிரம் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த அஸ்டெகா அரங்கில் எதிர்கொண்டது. இரு அணிகளுமே Goal எதுவுமே பெறாத நிலையில் முதல் பாதி நிறைவு பெற்றது. (போட்டி ஜூன் 11 இல் நடைபெற்றதாக வீடியோவின் ஆரம்பத்தில் காட்டப்படுவது தவறாகும்.)
.
.
.
இரண்டாம் பாதியின் ஆறாவது நிமிடம் இங்கிலாந்து அணியின் தலைவரும் Goal காப்பாளருமான ஆறு அடி ஓரங்குலம் உயரமான பீட்டர் ஷில்டன் மேலே பாய்ந்து கைகளை நீட்டி தடுக்க வேண்டிய உயரத்தில் இருந்த பந்தை, பீட்டர் ஷில்டனை விடவும் 8 அங்குலங்கள் உயரம் குறைந்த மரடோனா இடது கையால் குத்தி போஸ்ட் இற்கு உள்ளே தள்ளிவிட்டு, தலையால் அடித்து Goal போட்டதாக போட்டியின் நடுவராக இருந்த துனிசிய நாட்டவர் அலி பின் நஸ்ஸரை ஏமாற்றினார். "I was waiting for my teammates to embrace me, and no one came... I told them, 'Come hug me, or the referee isn't going to allow it.'" என்று மரடோனா அந்த நொடிகளில் நடந்ததை கூறுகின்றார். இங்கிலாந்தின் வீரர் டெரி பென்விக் நடுவரிடம் கடுமையாக ஆட்சேபித்தும் எதுவும் நடக்கவில்லை. கையால் குத்திப் போட்ட Goal இன் உதவியுடன் 2 -1 என்று இங்கிலாந்தை காலிறுதியில் தோற்கடித்த ஆர்ஜன்டினா அப்படியே முன்னேறி இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை 3 - 2 என்று தோற்கடித்து உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
.
.
.
சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படக் கூடிய தவறொன்றை செய்து (உதைபந்தாட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது)
ஒருலட்சத்து பதினைய்யாயிராம் நேரடிப் பார்வையாளர்களின் முன்னிலையில் நடுவரை ஏமாற்றி மோசடியான முறையில் கையின் மூலம் Goal போட்ட மரடோனா, தான் செய்த மோசடிச் செயலுக்கு வைத்த பெயர் "கடவுளின் கை". இன்றளவும் உலகம் முழுவதும் அந்தப் பெயர்தான் பிரபலம். ( https://www.facebook.com/rishvin/videos/10217181081022269/ )
குறிப்பு : மரடோனா உதைப்பந்தாட்டத் திறமை இல்லாத ஒருவர் என்றோ, அவருக்கு விளையாடத் தெரியாது என்றோ இந்தப் பதிவு சொல்லவில்லை.

கருத்துகள் இல்லை: