வியாழன், 26 நவம்பர், 2020

தங்கக்காசுகள் நகைக்கடையில் கிடைத்த துப்பு! – கலக்கத்தில் ஆளும் தரப்பு பிரீமியம் ஸ்டோரி

பூமிக்கடியில் புதையல்... தென்னை மரத்தில் தங்கக்காசுகள்...

vikatan : “மோகன்லால் கட்டாரியாவின் நிறுவனத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் நாங்களே எதிர்பாராத அளவுக்கு சுமார் ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 814 கிலோ தங்கம் பிடிபட்டது. சில ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் தங்க வியாபாரி களுடன் இந்தச் சோதனை நிற்கப்போவதில்லை… தமிழகத்தில் அரசியல் புள்ளிகள் பலருக்கும் ஸ்கெட்ச் போட்டிருக்கிறோம்” என்று கமுக்கமாகக் கண்களைச் சிமிட்டுகிறது வருமான வரித்துறை வட்டாரம். மும்பையைச் சேர்ந்த மோகன்லால் கட்டாரியாவுக்கு மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நகைக்கடைகள் இருக்கின்றன. அங்கிருந்து தங்கத்தைச் சென்னைக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரம் செய்து வந்திருக்கிறார். சென்னை செளகார் பேட்டையைத் தலைமையிடமாகக்கொண்டு மோகன்லால் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மோகன்லாலுக்குச் சொந்தமான 32 இடங்களில், நவம்பர் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் இரண்டு நாள்கள் நடந்த சோதனையில் மட்டும் கணக்கில் வராத 814 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் மலைக்கவைக்கும் தகவலைச் சொன்னார்கள். அத்துடன், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக் கின்றனவாம்!

இது குறித்து வருமான வரித்துறை தரப்பில் விசாரித்தோம். ‘‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிரபல ஜுவல்லரி ஒன்றில் சோதனை நடத்தினோம். அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்போதே மோகன்லால் ஜுவல்லரியிலும் சோதனை நடத்தினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதாரங்கள் சிக்கவில்லை. இதனால், பல மாதங்களாகவே பொறுமையாக அவர்களைக் கண்காணித்து இப்போது சோதனை நடத்தினோம். அதற்குரிய பலனும் கிடைத்திருக்கிறது.

நாங்கள் சென்னையில் நடத்திய சோதனையில் மட்டும் குடோனுக்குள் பதுக்கிவைத்திருந்த 814 கிலோ தங்கம் சிக்கியிருக்கிறது. தமிழகத்திலுள்ள முக்கிய நகைக்கடைகள் பலவற்றுக்கும் மொத்தமாகத் தங்கத்தை விநியோகம் செய்யும் பணியை மோகன்லால் ஜுவல்லரி செய்துவருகிறது. நாங்கள் நவம்பர் 10-ம் தேதி சோதனைக்குச் சென்றபோது, நவம்பர் 8-ம் தேதி வரை மோகன்லால் நிறுவனம் மேற்கொண்ட வணிக ஆவணங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. அந்த ஆவணங்களைப் பார்த்தால் தமிழகத்தில் புகழ்பெற்ற ஜுவல்லரிகள் பலவும் உரிய வரியைச் செலுத்தாமல் இவர்களிடம் கிலோக் கணக்கில் தங்கத்தைக் கட்டிகளாக வாங்கியது தெரியவந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் கிளை பரப்பியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தங்க நிறுவனத்துக்கு நகை விநியோகமும் இங்கிருந்துதான் நடந்திருக்கிறது. ஏற்கெனவே அந்த நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. இப்போது மோகன்லால் நிறுவனத்திலிருந்தும் அவர்கள் முறைகேடாகப் பல கோடி ரூபாய் மதிப்புக்குத் தங்கத்தை வாங்கிக்குவித்திருப்பது தெரியவந்திருக்கிறது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய நகைக்கடை ஒன்றும் இவர்களிடம் தங்கம் வாங்கியிருக்கிறது. அதற்கும் முறையான கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை.

இந்த நிறுவனத்தில் நாங்கள் நடத்திய சோதனைக்குப் பிறகு, பல நகைக்கடை நிறுவனங்களின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவர்களிடமும் விரைவில் சோதனைகள் தொடரும். மோகன்லால் நிறுவனத்தில் நாங்கள் சோதனை நடத்தியதற்குப் பின்னால் எந்த அரசியல் காரணங்களும் இல்லை. ஆனால், இந்தச் சோதனையில் பல அரசியல்வாதிகள் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதற்கான துப்பு கிடைத் திருக்கிறது’’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்கள்.

பூமிக்கடியில் புதையல்... தென்னை மரத்தில் தங்கக்காசுகள்...

அவர்களே தொடர்ந்து, ‘‘தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்தால், அது மத்திய அரசின் பார்வைக்கு எளிதாகச் சென்றுவிடுகிறது. அதனால், தங்களிடமுள்ள கணக்கில் வராத பணத்தையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக, தங்கமாக வாங்கி மாற்றிக்கொண்டார்கள். தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பலரே இப்படி கிலோக்கணக்கில் தங்கத்தை வாங்கிப் பதுக்கிவைத்திருக்கிறார்கள்.

மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர், அமைச்சர் உட்பட பல முக்கிய நபர்களுக்குக் கட்டிகளாகத் தங்கத்தை விநியோகம் செய்துவருகிறார். அவரை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். அந்த வியாபாரிக்கும், மோகன்லால் நிறுவனத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இப்படி அரசியல் புள்ளிகளுக்குத் தங்கத்தைக் கிலோக்கணக்கில் வாங்கிக் கொடுக்கவே தரகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய நபர்களின் வீடுகளிலும், தங்கள் தோட்டத்திலும் அமைச்சர்கள் பலர் தங்கத்தைப் புதைத்துவைத்திருக்கிறார்கள். தென்னந்தோப்பில், தென்னை மரத்தின் உச்சியில் ஒருவர் கிலோக்கணக்கில் தங்க நாணயங்களைப் பதுக்கிவைத்திருக்கிறார். சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறோம். விரைவில் வேட்டையைத் தொடங்குவோம்.

அதேபோல், கடந்த சில மாதங்களாகத் தனி நபர்கள் பலரும் மோகன்லால் நிறுவனத்திலிருந்து தங்கம் வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலையும் எடுத்திருக்கிறோம். பலருக்கு போலியான பில்களைப் போட்டும், சில வி.ஐ.பி-க்களுக்கு பில் இல்லாமலும் கிலோக் கணக்கில் தங்கத்தை வழங்கியிருக்கிறார்கள். அரசியல் வி.ஐ.பி-க்கள் சிலருக்கு நேரடியாக இவர்கள் தங்கத்தை வழங்காமல், நெருக்கமான சில தரகர்கள் மூலம் விற்றிருக்கிறார்கள். டிசம்பர் மாதம் தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி-க்கள் வரிசையாக வருமான வரித்துறையிடம் சிக்குவார்கள். எலிக்குவைத்த பொறியில் இப்போது பல திமிங்கிலங்கள் சிக்கியிருக்கின்றன’’ என்கிறார்கள்.

எல்லாம் சரி… பழைய ரெய்டெல்லாம் என்னாச்சுங்க ஆபிஸர்ஸ்?

விகடன்

கருத்துகள் இல்லை: