சனி, 28 நவம்பர், 2020

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி .. விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

Image may contain: one or more people, text that says 'இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். எந்தத் தடைகளும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்துவிட்டனர். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest #ModiAgainstFarmers'

Jeyalakshmi C - tamil.oneindia.com : டெல்லி: விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த டெல்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என பல தடைகளை கடந்த விவசாயிகளுக்கு ஒருவழியாக டெல்லிக்குள் நுழைய அனுமதி கிடைத்துள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய  இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.




டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெல்லிக்கு வரும் சாலைகளில் அனைத்து எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. தங்களை தடுத்த காவல்துறையினர் மீது ஹரியானா பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதனையடுத்து வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முயற்சித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது. என்ன நடந்தாலும் சரி போராட்டத்தை கை விடப்போவதில்லை என்றும் டெல்லியில் நுழையாமல் திரும்ப மாட்டோம் என்றும் விவசாயிகள் உறுதியாக இருந்தனர்


பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கும் விவசாயிகள் சாலையோரம் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். டெல்லி எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்க விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார். இந்த நிலையில் விவசாயிகளின் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை ஒருவழியாக அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி காவல்துறை ஆணையர் தெரிவித்தார். விவசாயிகள் சட்டம் ஒழுங்கை பராமரித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்படுகின்றனர். 

இதற்கிடையே டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்து சிறைவைப்பதற்காக, 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கு காவல்துறை அனுமதி கேட்டது. இதனை அரசு நிராகரித்து விட்டது. தடியடிகளை தாங்கிய விவசாயிகளுக்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது.


கருத்துகள் இல்லை: