வியாழன், 26 நவம்பர், 2020

தினமலர் : 3வது அணி அமைக்க காங்., முயற்சி?

.dinamalar.com  :  ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, கவர்னரிடம், தி.மு.க., கடிதம் வழங்கிய விவகாரம், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது. 

தி.மு.க.,விடம், அதிக தொகுதிகளை கேட்டு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விடுத்துள்ள மிரட்டலை தொடர்ந்து, அக்கட்சியை, 'கழற்றி' விடுவதற்கு, தி.மு.க., மேலிடம் நேரம் பார்த்து வருகிறது. ராஜிவ் அதனால், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலர், மறைமுக பேச்சு நடத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது.                     இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகள், நேற்று முன்தினம் சந்தித்து, கடிதம் ஒன்றை வழங்கினர்.                            அதில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. கவர்னரிடம் வேறு சில விஷயங்களும் பேசியதாகவும், அது குறித்து வெளியே சொல்ல முடியாது எனவும், ஸ்டாலின் தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.



தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. ஸ்டாலின் போட்டியிட்ட, சென்னை, கொளத்துார் தொகுதி தேர்தல் வெற்றி வழக்கு, உச்ச நீதிமன்றத்திலும்; ௨ ஜி ஊழல் வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்திலும் உள்ளன.இந்நிலையில், கவர்னரை ஸ்டாலின் சந்தித்து பேசிய தகவல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கவர்னர் - ஸ்டாலின் சந்திப்பு மற்றும் பேரறிவாளன் உட்பட, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், தி.மு.க., காட்டுகிற ஆர்வம், காங்கிரசாரிடம் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:தங்க தமிழ்செல்வன் வாய்க்கு சர்க்கரை போட்டு விடாதீர்கள், ஸ்டாலின். வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக, தமிழக அரசியல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் பிரச்னையில், சசிகலாவின் கணவர், மறைந்த நடராஜனை விட, அதீத ஈடுபாட்டை ஸ்டாலின், இந்த நேரத்தில் காட்டுவது, சாமானியனுக்கும் சந்தேகத்தை வரவழைக்க தான் செய்யும்.அமித் ஷா வந்து சென்ற அடுத்த நாள், முதல்வர் சந்திப்பைக் கூட தவிர்த்து விட்டு, தி.மு.க.,வை அழைத்து கவர்னர் பேச, அந்த அரதப்பழசான காரணமாக இருக்கும்; நம்பிக்கை வரவில்லை. வேறு ஏதோ ஒன்றை சொல்லி, தி.மு.க., 'கார்னர்' செய்யப்படுகிறது.பிரசாந்த் கிஷோர் பின்னால் போன தி.மு.க., - கருணாநிதி இல்லாத தி.மு.க., - அரை தி.மு.க., தான்; தைரியமாய் கூப்பிட்டு, எதையோ காட்டி மிரட்டுகின்றனர்.காங்கிரஸ் இருந்தால், தி.மு.க., வெற்றி பெற்று விடும் என்பதால், வேறு ஏதோ ஒன்றை சொல்லி மிரட்டி, ராஜிவ் கொலைகாரர்களை விடுவிக்கச் சொன்னால், கதர்ச் சட்டைக்காரர்கள் கதறுவர் என, கணக்கு போட்டு, காய் நகர்த்துகிறது கவர்னர் பவனம்.

ஸ்டாலினுக்கு பழைய முகம் இல்லை. அவர் பேட்டி கொடுக்கும்போதே கட்டாயப்படுத்தி, சொல்ல வைக்கப்படும் அவஸ்தை, அவர் முகத்தில் வெளிப்படுகிறது.மனச்சாட்சி இருக்கும் எந்த மனிதனும், கொலைகாரர்களை விடுவிக்கச் சொல்ல மாட்டான். அந்த ஏழு பேராலும், உங்களுக்கு ஏழரை தான் வரப் போகிறது.ராஜிவ் உடன் இறந்தது, 17 பேர் தமிழர்கள்; நிரந்த ஊனமானது, 36 பேர்; நிற்கதியானது, 53 குடும்பம். இவர்கள் இலங்கை தமிழர்கள் அல்ல. இவர்களுக்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்ன? அறியத் துடிக்குது மனசு.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இது, ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், தி.மு.க.,வை மறைமுகமாக, தினேஷ் குண்டுராவ் மிரட்டியுள்ள பேட்டியும், தி.மு.க., மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

நுாறு தொகுதிகளில் காங்கிரசால் தான், தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அதனால், வெளிப்படையான, நேர்மையான பேச்சை, தி.மு.க.,விடம் இருந்து எதிர்பார்க்கிறோம். 'எந்தெந்த தொகுதிகளை பெறுவது குறித்து, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் தலைமையில், உயர்நிலை நிபுணர் குழு அமைத்துள்ளோம்' என, குண்டுராவ் கூறியுள்ளார்.

காங்கிரசில் நேற்று சேர்ந்த சசிகாந்த் செந்திலால், எப்படி காங்கிரஸ் வெற்றி தொகுதிகளை கண்டறிய முடியும்?   தினேஷ் குண்டுராவ் செயல்பாடு, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அதாவது, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அளித்த பேட்டியில், 'சில அணிகளில் உள்ள கட்சிகள், எங்களுடன் கூட்டணிக்கு வரும்' என்றார். எனவே, கமல் கூறியதுபோல், தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கழற்றி விடப்பட்டால், மக்கள் நீதி மையத்துடன் இணைந்து, மூன்றாவது அணி அமைப்பது குறித்த பேச்சு, இரு தரப்பிலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: