புதன், 25 நவம்பர், 2020

கூட்டணிக்கு பிடி கொடுக்கலை..திமுக தோற்றால் நாங்க பொறுப்பு அல்ல... தமிழக ஓவைசி கட்சி : 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்.


Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக 2 மாதங்களாக பேசியும் திமுக பிடி கொடுக்காத நிலையில் 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்; 

தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தமிழக தலைவர் வகீல் அகமது கூறியுள்ளார். பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க முதலில் மஜ்லிஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த கூட்டணி முயற்சி பலன்தரவில்லை. இதனால் பீகாரில் ஓவைசி கட்சி தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.                                              ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் வாக்குகளையே மஜ்லிஸ் கட்சி பிரித்துவிட்டது; இதனால் ஆர்ஜேடி ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது                        இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி போட்டியிடுமா? என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மஜ்லிஸ் கட்சியின் தமிழக தலைவர் வகீல் அகமது கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது:




பிடி கொடுக்கலை-நாங்க பொறுப்பு இல்லை திமுகவுடனான கூட்டணி தொடர்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் 2 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்த பதிலும் தரப்படவில்லை. முஸ்லிம் இளைஞர்களிடையே எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது

சட்டசபை தேர்தலில் போட்டி கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாங்கள் போட்டியிடுவோம். 25 முதல் 30 தொகுதிகளில் மஜ்லிஸ் கட்சி போட்டியிடும். ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கான ஒரு அரசியல் தலைவரையே விரும்புகிறது. அப்படி இருக்கும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் தேசிய அளவிலான ஒரு தலைவரை உருவாக்கக் கூடாது?

ஏன் செய்யலை காங்? 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் இருந்தோம். இப்போது பாஜக, முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது. அதேபோல் அன்று காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை ஏன் வழங்கவில்லை? தமிழகத்தில் 10 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?

எங்களைப் பொறுத்தவரை பாஜக எங்கள் கண்ணுக்குத் தெரிந்த நேரடியான எதிரி. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எங்கள் முதுகில் குத்துகிறது. சிஏஏன், என்.ஆர்.சி, 370வது பிரிவு விவகாரங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது காங்கிரஸ் எங்களுக்காக மக்களை அணிதிரட்டவில்லை. இவ்வாறு வகீல் அகமது கூறினார்.

கருத்துகள் இல்லை: