செவ்வாய், 24 நவம்பர், 2020

இஸ்லாத்தை விட்டு வெளியேறி “முன்னாள் முஸ்லிம்” அடையாளத்துடன் (Ex-Muslim) வாழ்பவர்கள் ..

Rishvin Ismath : · “இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் உன் முஸ்லிம் பெயரை மாற்று” முஸ்லிமாக பிறந்து, இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்தவர்கள் (மற்றும் இடையில் இஸ்லாத்தை ஏற்றவர்கள்) இஸ்லாத்தை விட்டு வெளியேறி “முன்னாள் முஸ்லிம்” (Ex-Muslim) அடையாளத்துடன் இஸ்லாம் குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும், இஸ்லாத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் அமைப்பு ரீதியாக இயங்குவதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை முன்னெப்பொழுதும் நிகழாத புதிய அதிர்ச்சி அனுபவம் ஆகும். இஸ்லாத்தை விட்டு வெளியேறி உயிர் தப்பியவர்கள் அண்மைக் காலம் வரை செய்ததெல்லாம் சத்தமில்லாமல் ஒரு ஓரமாக ஒதுங்கி வாழ்ந்தது அல்லது வேறு மதங்களை பின்பற்றி அம்மதங்களில் சங்கமமானது ஆகியவைதான். ஆனால் நிகழ்காலத்தில் இந்த நிலமை முற்றிலும் மாறிவிட்டது.
இஸ்லாத்தை கற்று அம்மதத்தின் பிழைகளை உணர்ந்து அதிலிருந்து விடுதலையாகி எந்த மதத்தையும் பின்பற்றாமல் “முன்னாள் முஸ்லிம்” அடையாளத்துடன் வாழ்பவர்கள் அதிகரித்துள்ளதுடன், அவர்கள் தங்களுக்கான அமைப்புக்களை உருவாக்கி உலகின் பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் செயற்பட்டு வருகின்றார்கள், மேலும் புதிய புதிய அமைப்புக்களையும் உருவாக்கி வருகின்றார்கள், 
அத்தகைய அமைப்பொன்று விரைவில் கேரளாவில் உதயமாக உள்ளது. முன்னாள் முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்த விமர்சனங்களை, கேள்விகளை முன்வைக்கும் பொழுது அவற்றிற்கு பதில் சொல்லாமல், “முதலில் உனது பெயரை மாற்று", "இஸ்லாத்தை விட்டு வெளியேறிய உனக்கெதற்கு முஸ்லிம் பெயர்” போன்ற அன்பான மிரட்டல்கள் முஸ்லிம்களால் அடிக்கடி விடுக்கப்படுவதுண்டு.
இது தொடர்பான ஒரு சுவாரசியமான சம்பவம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணையம் முன்னிலையில் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை குறுக்கு விசாரணை செய்வதற்காக சென்றிருந்த வேளை, ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் சட்டத்தரணிகளில் ஒருவரான ஷஹீட் முஹம்மது நூர்தீன் அவர்கள் தனக்கான நேரத்தில் “இஸ்லாத்தை விட்டு வெளியேறியதாக சொல்கின்றீர், அனால் உங்களது பெயர் முஸ்லிம் பெயர் அல்லவா?” என்றவிதமாக என்னிடம் கேள்வியொன்றை முன்வைத்தார். “சட்டத்தரணி அவர்கள் ‘முஸ்லிம் பெயர்’ என்பதன் மூலம் கருதுவது என்ன என்பதை விபரித்தால் எனது பெயர் முஸ்லிம் பெயரா இல்லையா என்பதை நான் அவருக்கு சொல்கின்றேன்” என்று அவருக்கு பதில் வழங்கினேன், ஆனால் அவரிடமிருந்து எந்த விளக்கமும் வந்திருக்கவில்லை. (குறித்த அமர்விற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தால் மட்டுமே இதனை பகிரங்கமாக குறிப்பிடக் கூடியதாக உள்ளது).
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதால் முன்னாள் முஸ்லிம்கள் பெயரை மாற்றவேண்டும் என்று கொக்கரிக்கும் முஸ்லிம்கள், நாற்பது வயதில் தன்னை நபியாக சுய பிரகடனம் செய்த பின்னாரும் முஹம்மது நபி அவர்கள் தனது ஜாஹிலியா (இஸ்லாத்திற்கு முற்பட்ட) கால பெயரான ‘முஹம்மது’ என்பதையே சுமந்துகொண்டு வாழ்ந்தாரே தவிர தனது பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள். முஹம்மது நபி மட்டுமல்ல, உமர், உஸ்மான், அபூசுபியான், முஆவியா, அலி, பாத்திமா, ஹிந்தா, கதீஜா, அப்பாஸ், பிலால், சல்மான், ஹம்ஸா போன்ற அனைத்து முக்கிய முதல் தலைமுறை புதிய முஸ்லிம்களும் (சஹாபாக்களும்) தங்களது ஜாஹிலியா (இஸ்லாத்திற்கு முற்பட்ட) கால பெயர்களையே சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள் என்பதையும் முஸ்லிம்கள் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
 
முஸ்லிம் பெயர்களாக அறிப்பட்ட பெயர்களில் இஸ்லாம் குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள், கேள்விகள் வரும் பொழுது அதனை முஸ்லிம்களால் எதிர்கொள்ள முடியாத நிலை வருகின்றது, அதுவே வேறு பெயர்களில் வந்தால் ‘கிறிஸ்தவ சதி, யூத சதி, இஸ்லாமோபோபிஸ்ட்’ போன்ற எதையாவது சொல்லிவிட்டு விமர்சனத்திற்கு, கேள்விக்கு உரிய பதில் சொல்லாமல் நகர்ந்துவிடலாம். (பதில் சொல்ல முடியாது என்பது வேறு விடயம்), ஆனால் குறித்த கேள்விகள் முஸ்லிம் பெயர்களாக அறிப்பட்ட பெயர்களில் வரும் பொழுது, சொல்வதற்கு முறையான பதிலும் இல்லாத நிலையில் இஸ்லாமியவாதிகள் ஆடித்தான் போகின்றார்கள்.
முஹம்மது நபியோ, அவருடன் வாழ்ந்தவர்களோ இஸ்லாத்திற்குள் வந்தபொழுது தமது சிலை வணங்கிக் கால பெயர்களையே மாற்றவில்லை என்னும் பொழுது, இஸ்லாத்தை விட்டு (உயிருடன்) வெளியேறி செல்பவர்களை நோக்கி ‘பெயரை மாற்று’ என்று கொக்கரிப்பதானது, அவர்களின் ஆக்கபூர்வ விமர்சனங்களுக்கு, சிந்தனையைத் தூண்டும் பதிவுகளுக்கு, இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல முடியாத இயலாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
-றிஷ்வின் இஸ்மத்
23.11.2020   allahvin.com

கருத்துகள் இல்லை: