சனி, 28 நவம்பர், 2020

அமித் ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்-அதிமுகவின் பதில் என்ன?

minnambalam :“அதிமுகவில் சில நாட்களாகவே தலைமைக் கழக நிர்வாகிகளிடமும், மண்டலப் பொறுப்பாளர்களிடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக வருமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தென் மாவட்டத்தில் சில தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள், சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி. அப்படி என்ன முக்கியத்துவம் அந்த பட்டியலில்?
டிஜிட்டல் திண்ணை:   அமித் ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்-அதிமுகவின் பதில் என்ன?

நவம்பர் 21 ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமித் ஷா முன்னிலையில், ‘அதிமுக பாஜக கூட்டணி தொடரும்’என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச, அதன் பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ‘அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் அமித் ஷா இந்த நிகழ்வில் அரசியல் பேசினாலும் அதிமுக கூட்டணி பற்றி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அமித்ஷா தான் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்குத் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக அந்த ஹோட்டலுக்குச் சென்றனர். கொஞ்ச நேரத்தில் அமித் ஷாவின் அறைக்குள் சென்றனர்.

அமித் ஷாவின் அறையில் அவருடன் பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் இருந்திருக்கிறார். கூடவே அமித் ஷாவுக்காக தமிழ், இந்தி தெரிந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இருந்துள்ளார். அவர்களைத் தவிர எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இருந்துள்ளனர்.

அந்த சந்திப்பின் போது அமித் ஷாவிடம் பி.எல். சந்தோஷ் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி ஒருமுறை பார்த்த அமித் ஷா, அந்த பட்டியலை அப்படியே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

அந்தப் பட்டியலில் 50 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. ‘பாஜகவுக்கு நம் கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 35 தொகுதிகள் உறுதியாக வேண்டும். அதை இந்த 50 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். 15 தொகுதிகள் உங்கள் சாய்ஸுக்காக கொடுத்திருக்கிறோம்’என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார்.

அந்த 35 தொகுதிகளில் கொங்குமண்டலத்தில் 10 தொகுதிகள், கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தில் 6 தொகுதிகள், சென்னையில் 6 தொகுதிகள் உள்ளிட்ட தமிழகம் முழுதும் பரவலாக தொகுதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. கொங்குமண்டலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் 10 தொகுதிகளைக் கேட்கிறது பாஜக. கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களிலும் அந்தத் தொகுதிகள் வருகின்றன. கன்னியாகுமரி பொதுவாக பாஜக வலுவாக இருக்கும் பகுதி. இப்போது அந்த மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக, காங்கிரசே வெற்றிபெற்றுள்ளன. அவற்றில் சில தொகுதிகள் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை எதிர்பார்க்கிறது பாஜக. அதேபோல சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகள் பாஜகவின் பட்டியலில் இருக்கின்றன.

இப்படியாக 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தன் கையால் கொடுத்த அமித் ஷா, ‘இதில் இருந்து 35 தொகுதிகள் பாஜகவுக்கு வேண்டும். உங்கள் முடிவைச் சொல்லுங்கள், அதன் அடிப்படையில் அடுத்த கட்டம் பற்றி பேசலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அமித் ஷா கொடுத்த அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டுதான் அதிமுகவின் தலைமையில் இப்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுக்கு மிக சாதகமான தொகுதிகள் என்று அமைச்சர்கள் அடையாளம் கண்டு அதில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். அமித் ஷா பாஜகவுக்காக கேட்டவற்றில் அந்தத் தொகுதிகளின் பெயர்களும் உள்ளன. இதனால் ஒவ்வொரு மண்டலத்திலும் பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்று அதிமுக தலைமையில் தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.

35 தொகுதிகள் உறுதியாக வேண்டும் என்று அமித் ஷாவே நேருக்கு நேர் சொல்லிவிட்ட நிலையில்... அதைக் குறைக்க வாய்ப்புகள் குறைவுதான். அப்படியே குறைத்தாலும் பாஜகவுக்கு 30க்கு குறைந்து கொடுக்க முடியாது. பாஜகவுக்கு 30 என்றால், பாட்டாளி மக்கள் கட்சி 31 ஆவது கேட்கும். இவர்களை அடுத்து தேமுதிக இருக்கிறது. இப்படியென்றால் கூட்டணிகளுக்கே 75 இடங்கள் வரை போய்விட்டால் என்ன செய்வது என்ற கேள்விகளும் அதிமுகவுக்குள் எழுந்திருக்கின்றன.

சமீபத்தில் முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்த அதிமுக சீனியர்கள், ‘திமுக கூட்டணியில் காங்கிரசை எப்படி திமுக நடத்துகிறதோ அதேபோலத்தான் நாமும் பாஜகவை நடத்த வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில்தான் பாஜக போட்டியிட்டது. அதற்கு ஏற்பதான் இப்போதும் இடப் பகிர்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அதிமுகவில் தொகுதிக்காக பலர் முட்டி மோதுகிறார்கள். அவர்களை நாம் திருப்திப்படுத்தாவிட்டால் உட்கட்சி குழிபறிப்புகளை சந்திக்க நேரிடும்’என்று கூறியிருக்கிறார்கள்.

அமித் ஷாவின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு எடப்பாடியும், ஓ.பன்னீரும் விவாதித்துக் கொண்டிருப்பதே அதிமுக கூட்டணியின் தற்போதைய நிலை. அமித் ஷா பட்டியலுக்கு அதிமுகவின் பதில் என்ன என்பதைப் பொறுத்தே கூட்டணியின் உறுதிப்பாடும் இருக்கிறது”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: