வியாழன், 26 நவம்பர், 2020

கரையைக் கடந்தது நிவர்: தொடரும் மழை!

minnampalam :வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயல் நிவர் கரையைக் கடந்ததாக இன்று காலை 5.20 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதீத கன மழை பெய்து வருகிறது. இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்குக் தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

அதன்பின் இரவு 11.30 முதல் கரையைக் கடக்கத் தொடங்கி, அதிகாலை 2.30 வரை நிவர் புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணி நேரத்தில் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்துள்ளது. வேலூர் நோக்கி நிவர் செல்லும் நிலையில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது.

புயல் கரையைக் கடந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “சாலையில் விழுந்த மரங்கள், மின் கம்பங்களைச் சரிசெய்வதற்கும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதுகாப்புடன் புயலைக் கடந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

காலை 4 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “அதி தீவிர புயலான நிவர் தற்போது தீவிர புயலாக வலுவிழந்து நிலப்பகுதியில் இருக்கிறது. இதையடுத்து, தொடர்ந்து இது 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழக்கும். இதன் காரணமாக வட தமிழகப் பகுதிகளில் மழையும், காற்றும் தொடரும். கரையைக் கடந்து தமிழகப் பகுதிகளில் தான் நிவர் உள்ளது” என்று கூறியுள்ளார்.

அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: