ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

Mr. Seeman U2 Burtus ? மிக பெரிய வெறுப்பு அரசியலை விதைத்திருக்கிறார்.

Thangaraj Gandhi : U2_Brutus உண்மையில் இந்த பெயரை நாங்கள்
தேர்ந்தெடுத்ததற்கு சீமானும் ஒரு காரணம். அவர் மட்டுமே காரணம் அல்ல ஆனால் அவரும் ஒரு மிக முக்கிய காரணம். சீசருக்கு தனது நண்பன் புரூட்டஸ் துரோகம் இழைக்கும்போது தனது நண்பனை பார்த்து "நீயுமாடா?" என்று கேட்பது தான் இந்த வசனம் You Too Brutus ?

நாங்கள் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் அரசியல் பற்றிய கொள்கை புரிதலோ, தத்துவ புரிதலோ இல்லாமல் சராசரி இளைஞர்களை போல எந்த கவலையும் இன்றி தான் இருந்தோம். ஆனால் தினம் தினம் ஏதோ ஒரு வழியில் காதுகளுக்கு வரும் ஊழல் செய்திகள் மக்களை பற்றிய கவலையற்ற அரசியல் சண்டைகள் போன்ற செய்திகளை பார்த்து ஒரு மாற்று அரசியல் வராதா என்ற ஏக்கம் மட்டும் இருந்தது. 2009 ல் ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் போது தமிழ்நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. முக்கியமாக பள்ளி கல்லூரிகள் என அனைத்து தரப்பு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாங்கள் கருப்பு சட்டை அணிந்து தேர்வு எழுதிவிட்டு வந்தபோது பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினரால் அடித்து விரட்டப்பட்டோம். கருப்பு சட்டை அணிந்திருந்தோம் என்ற ஒரே காரணத்திற்க்காக.


தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டனர். பேருந்து, ரயிலில் துண்டு சீட்டு விநியோகித்தவர்கள் கூட தேடி தேடி கைது செய்யப்பட்டார்கள். பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இப்படியாக தமிழகத்தில் ஈழ இனப்படுகொலைக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் மீதும் எங்களுக்கு அதீத வெறுப்பு ஏற்பட்டது.

தமிழின படுகொலைக்கு பிறகு பல புதிய தமிழ்த்தேசிய அமைப்புகள் உருவாகின. அப்படி உருவான பெரும்பாலான அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் ஆதரவு மனநிலையிலேயே பயணித்தோம். அவற்றில் ஒன்றுதான் நாம் தமிழர் கட்சி. ஈழத்தமிழர்களின் வலியை, வேதனையை, கண்ணீரை பல்வேறு அமைப்புகளும் மக்களிடையே கொண்டு சேர்ந்தன. அதில் நாம்தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. ஆனால் தேர்தல் அரசியலில் போட்டியிட்டபோது, இந்த மண்ணில் என்ன அரசியலை வைக்க போகிறார்கள்? வெறுமனே தமிழ் என்று பேசினால் மட்டும் போதுமா? என்ன வளர்ச்சி திட்டங்கள் உள்ளன? என்ன கொள்கை என்று பல கேள்விகள் இருந்தன. நாம் தமிழர் வரைவு அறிக்கையில் அதுவும் தெளிவாக இருந்தன. ஒரு சில முரண்களை தவிர்த்து மற்ற அனைத்திற்கும் ஆதரவு மனநிலையே இருந்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில விசயங்கள் வர ஆரம்பித்தன. அது சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் நேர் எதிர் திசையில் கொண்டுபோய் நிறுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்,
பிறப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் பார்ப்பனிய தமிழர் வரையறை,
பெரியாரை எதிர்க்கவும் இல்லை ஏற்கவும் இல்லைன்னு சமாளிச்சிட்டு பெரியாரை எதிர்ப்பது,
சாதி ஒழியவேண்டும் என்று மேடைதோறும் முழங்கிவிட்டு உன் குடி என்ன ன்னு கேட்க்கும் தம்பிகளை வளர்த்துவிடுவது,
தமிழ் பிராமணர் ன்னு தானே சொல்றாங்க அப்போ தமிழர் தானே ன்னு ஊடகம் முன்பே சொல்லிவிட்டு சாதி அடிப்படியில் நாங்கள் தமிழர்களை வரையறுக்கவில்லை ன்னு அடிச்சி விடுவது,
முருகனை நாங்கள் முன்னோராகத்தான் பார்க்கிறோம் ன்னு சொல்லிட்டு நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை, இப்படி நாள்முழுக்க சொல்லிக்கொண்டே போகலாம். இதன் உச்சகட்டமாக நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவரையும் பார்த்து நீ தமிழன் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு ஒரு பெரிய பாசிச கூட்டத்தை உருவாக்கி மிக பெரிய வெறுப்பு அரசியலை விதைத்திருக்கிறார்.

இப்படி முதலில் நல்லவராக தெரிந்து பிறகு சுயரூபம் தெரிந்தவர்கள், முதுகில் குத்தியவர்களின் நீண்ட வரிசையில் கிட்டத்தட்ட கடைசியில் வந்தவர் தான் சீமான். அதன் பிறகும் பலரை பார்த்தாகிவிட்டது. இன்னும் பலரை பார்க்கவேண்டியும் உள்ளது.

இப்போது இதை சொல்ல காரணம் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சீமானை புரிந்துகொள்ள தொடங்கியபோது என்ன மனநிலையில் இருந்தோமோ அதே மனநிலையில் தான் இப்போது நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் கேள்வி Mr. Seeman U2 Burtus ?

-u2 Brutus-

கருத்துகள் இல்லை: