சனி, 19 செப்டம்பர், 2020

ரெய்டு பயம்! - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்... மிஸ்டர் கழுகு.. விகடன்

vikatan :முகத்தில் மாஸ்க், கழுத்தில் பச்சை நிற அடையாள அட்டையுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘என்ன, சட்டமன்ற விசிட்டா?’’ என்றதும், உற்சாகத்துடன் ஆமோதித்தார். கொண்டுவந்திருந்த சூடான மெதுவடைகளைத் தட்டில் பரப்பியவர், நமது நிருபர் அளித்திருந்த சட்டமன்றச் செய்தித் துணுக்குகளில் பார்வையை ஓடவிட்டார். ‘‘இதில் கூறப்படாத சில தகவல்களைக் கூறுகிறேன்... கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
‘‘கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் சட்டசபை வளாகத்தை அமைத்திருக்கிறது ஆளும் தரப்பு. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தரைத்தளத்தில்தான் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது அவசரமென்றால், அறைக்கு அவர்கள் வந்து போவதற்குள் சட்டமன்ற விவாதத் தலைப்புகள் மாறிவிடும். ‘இப்படி எக்குத்தப்பாக அறைகள் ஒதுக்கியதே எதிர்க்கட்சிகளை அலைக்கழிக்கத்தான்’ என்று கொதிக்கின்றன எதிர்க்கட்சிகள். ‘ஆளும்கட்சி வி.ஐ.பி-க்களின் உதவியாளர்களை மட்டும் மன்றத்துக்குள் அனுமதித்துவிட்டு, எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை’ என்கிற புகாரும் எழுப்பப்படுகிறது.’’

‘‘சரிதான்!’’

‘‘அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகர தி.மு.க சார்பில் தக்கலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்கள். தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளரான மனோ தங்கராஜ் சட்டசபைக்கு வந்துவிட்டதால், மாவட்டத் துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர்தான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, கிறிஸ்டோபரை மறைக்கும்விதமாக மனோ தங்கராஜின் ஆதரவாளரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார் முந்திக்கொண்டு நின்றிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டோபரின் ஆதரவாளர்கள் சிலர் ததேயுவின் வேட்டியை உருவிவிட்டிருக்கிறார்கள். பிரச்னை பெரிதானதால் சம்பவ இடத்திலிருந்து ததேயு கிளம்பிவிட்டார். அன்று மாலை, கருங்கல் காவல் நிலையம் அருகே கிறிஸ்டோபரின் ஆதரவாளரான மோகன்தாஸைச் சுற்றிவளைத்த டீம் ஒன்று கடுமையாக அவரைத் தாக்கியிருக்கிறது. விவகாரம் இப்போது கொலை முயற்சி வழக்காகப் பதிவாகியிருக்கிறது.’’
மிஸ்டர் கழுகு: ரெய்டு பயம்! - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்...

‘‘தி.மு.க கூட்டணிக்குள்ளும் ஏதோ கலகமாமே?’’

‘‘ஆமாம். ‘காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமிருக்கும் தொகுதிகள் அத்தனையிலும் தி.மு.க-வே போட்டியிடலாம்’ என்று பிரசாந்த் கிஷோர் டீம் ஐடியா கொடுத்திருந்தது. அதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை இப்போதே தி.மு.க தரப்பில் நிர்பந்தித்திருக்கிறார்கள். ஆனால், ‘தோழர்கள்’ அதிருப்தி தெரிவித்து கொந்தளிக்கவே... தற்காலிகமாகத் திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் இந்தத் திட்டம் தூசிதட்டி எடுக்கப்படும் என்கிறார்கள்.’’

‘‘ஸ்டாலினைத் தொடர்புகொண்டு திருமாவளவன் பேசியதாகக் கூறுகிறார்களே... என்ன விஷயம்?’’


ராமதாஸ்

‘‘தி.மு.க-வுடன் பா.ம.க அணிசேரப்போவதாக வரும் செய்திகள் தொடர்பாக திருமா விவாதித்திருக்கிறார். அவரிடம், ‘அப்படியோர் எண்ணமில்லை. மீண்டும் ஒரு முறை ஏமாறத் தயாரில்லை’ என்று உறுதியளித்தாராம் ஸ்டாலின். அதேபோல, பா.ம.க நிர்வாகிகள் தரப்பிலும், ‘தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம். நம்மைத் தோற்கடிக்கத்தான் பார்ப்பார்கள்’ என்று தைலாபுரத்தில் புலம்பியிருக்கிறார்கள். பெரிய மருத்துவர் மனதில் என்ன கணக்கு இருக்கிறதோ!’’


திருமாவளவன்

‘‘துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் கொங்கு மண்டல அமைச்சர் ஒருவருக்கும் மோதலாமே?’’

“கோவை வெள்ளக்கிணறு, தெலுங்குபாளையம், விளாங்குறிச்சி பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியம் 25 வருடங்களுக்கு முன்ன்ர் கையகப்படுத்தியது. பல ஆண்டுகளாகியும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகை சரிவர வழங்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவந்தது. சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புடைய அந்த நிலத்தை, பல வி.வி.ஐ.பி-க்கள் சட்டவிரோதமாகக் கிரையம் செய்திருக்கிறார்களாம். விசாரித்தபோது கொங்கு அமைச்சரின் பெயரைச் சிலர் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. நிலத்தைக் கிரையம் செய்தவர்கள் தடையில்லாச் சான்று கேட்டு வீட்டு வசதி வாரியத்தை நாடியபோதுதான், இப்படியொரு விவகாரம் இருப்பதே துறை அமைச்சரான பன்னீருக்குத் தெரிந்திருக்கிறது. ‘என்.ஓ.சி கொடுக்க முடியாது’ என்று அவர் மறுத்திருக்கிறார். அந்த நிலத்தை மீண்டும் வீட்டு வசதி வாரியம் எடுத்துக்கொள்ளவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், மாவட்ட நிர்வாகம், காவல்துறை என எந்தத் தரப்பும் இதற்கு ஒத்துழைக்கவில்லையாம். கடும் கொந்தளிப்பில் இருக்கிறது பன்னீர் தரப்பு.’’


பன்னீர்செல்வம்

‘‘சரிதான்!’’

‘‘இருபது நாள்களுக்கு முன்னர், தமிழகமெங்கும் வருமான வரித்துறை ரெய்டு நடக்கப்போவதாக தகவல் ஒன்று ஓடியது. அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் பதற்றமடைந்தார்கள். அப்போது, கிரீன்வேஸ் சாலையிலுள்ள மேலிடப் பிரமுகர் ஒருவரின் இல்லத்தில் ஏழு அமைச்சர்கள் ஒன்றுகூடி விவாதித்திருக்கிறார்கள். ‘நவம்பர் மாதத்தோட பா.ஜ.க-வைக் கூட்டணியிலிருந்து கழட்டிவிடலாம்னு தீர்மானிச்சிருக்கோம். அப்படிக் கழட்டிவிட்டோம்னா கண்டிப்பா நம்ம ஏழு பேரை சும்மாவிட மாட்டாங்க. ரெய்டு நடத்துவாங்க. ‘அவர்’ தப்பிச்சுக்குவாரு’ என்று பொடிவைத்த மேலிடப் பிரமுகர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அமைச்சரைப் பார்த்து, ‘மொதப் பொங்கல் உனக்குத்தான்யா வெப்பாங்க. ‘உண்டியல்’ வெச்சிருக்குற இடத்தையெல்லாம் மாத்திவை’ என்று எச்சரித்தாராம். இதன் தொடர்ச்சியாக, கடந்த பத்து நாள்களில், அந்த ஏழு அமைச்சர்களின் கஜானாக்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனவாம். ஒருவேளை தங்கள்மீது ரெய்டு நடத்தப்பட்டால், ‘கூட்டணியிலிருந்து வெளியேறியதால்தான் குறிவைக்கப்படுகிறோம்’ என்று அனுதாபம் தேடவும் ‘ஸ்கிரீன் ப்ளே’ தயார் செய்கிறதாம் மேலிடப் பிரமுகர் தரப்பு.’’

‘‘உஷார் பார்ட்டிகள்தான்...’’


கிருஷ்ணப்ரியா

‘‘சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கொதிப்பில் இருக்கிறாராம் சசிகலா. ‘தினகரனை ஓரம்கட்டும் நோக்கத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததே கிருஷ்ணப்ரியாதான்; அதுவே தனக்கு ஆபத்தாகவும் திரும்பியுள்ளது’ என்று சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளுக்கு போனை போட்டு மிரட்டுவது, வீட்டுக்கு வரும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவைப் போன்ற தோரணையில் மிரட்டி ஆட்டுவிப்பது என இவரது அட்டகாசம் அத்துமீறிப் போனதாம். இதுகுறித்த ஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிருஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது மன்னார்குடி வட்டாரம். சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்ததும், கிருஷ்ணப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்படும் என்கிறார்கள்” என்று கிளம்ப எத்தனித்த கழுகார்,

‘‘கோடம்பாக்கத்திலிருந்து ரிட்டயரான அந்த சினிமா நாயகன், பொழுதுபோகாமல் கட்சி ஆரம்பித்தார். தேர்தல் வரும்போது ‘என் சமுதாயத்துக்காகப் பாடுபடுவேன்’ என்று முழங்குவதும், தேர்தல் முடிந்ததும் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிடுவதும் நாயகனுக்குத் தொடர்கதை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் நாயகன். இதற்கு பிரதிபலனாக ஐந்து ‘சி’ கொடுக்கப்பட்டதாம். குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு, ஹோட்டலில் ஊசியும் மருந்துமாக ஓய்வெடுத்துவிட்டாராம். இதில் ஆளும்கட்சி படு அப்செட்! இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், மறுபடியும் ஆளும்கட்சித் தரப்புக்கு நூல்விட்டுப் பார்த்திருக்கிறார் நாயகன். எதிர்முனையிலிருந்து காது தீயும் அளவுக்கு பதில் வந்திருக்கிறது. இவரை நம்பியிருந்த கட்சி நிர்வாகிகள் பலரும் தனிக்கட்சிகளை ஆரம்பித்துவிட்டனர். இப்போது அம்போவென்று நின்றுகொண்டிருக்கிறார்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கொங்கு மண்டலத்தில் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த ஒருவர், சத்துணவுத்துறையில் வேலை வாங்கித்தருவதாக சுமார் 200 பேரிடம் பல கோடி ரூபாய் லவட்டிவிட்டாராம். இவரின் மனைவி, மைத்துனர் ஆகியோரும் தங்கள் பங்குக்குப் பல லட்சங்களைக் கறந்திருக்கிறார்கள். பணம் கொடுத்த யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இப்படி ஏமாந்தவர்கள் முன்னாள் எம்.பி-யின் வீட்டை முற்றுகையிட, மனிதர் தற்போது தலைமறைவாகிவிட்டார்!

* அடுத்த முறை சீட் கிடைக்காது என்று உறுதிபட தெரிந்துகொண்ட அமைச்சர்கள் சிலர், தங்கள் துறைசார்ந்த பிசினஸ் பிரமுகர்களிடம், ‘தேர்தல் செலவுக்கு இப்பவே பணம் அனுப்பிடுங்க’ என்று கலெக்‌ஷனை ஆரம்பித்துவிட்டார்களாம். குறிப்பாக, இரண்டு பெண் அமைச்சர்களின் வசூல் வேட்டை தூள்பறக்கிறதாம்.

* சசிகலாவின் உறவினரான திருச்சி கலியபெருமாள் டெல்டா அரசியலில் பிரபலமானவர். சில ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர், கடந்த வாரம் திருக்காட்டுப்பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் மருத்துவமனை ஒன்றை, திருச்சியில் இருந்தபடியே காணொலியில் தொடங்கிவைத்து மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

புதுச்சேரியில் வெடிக்கும் மோதல்!


மத்திய உள்துறைக்கு அனுப்பும் அறிக்கையில், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளுநர் மாளிகைதான் சிறப்பாகச் செயல்படுகிறது’ என்று குறிப்பிடச் சொல்லி புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வினி குமாருக்கு, அந்த மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தரப்பு அழுத்தம் கொடுக்கிறதாம். இரண்டு வாரத்துக்கு முன்னர் ஆளுநர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்கூட இந்த விவகாரம் வெடித்து பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் அஸ்வினி குமார். தற்போது கிரண் பேடி தரப்பின் அழுத்தம் தாங்க முடியாமல், முதல்வர் நாராயணசாமி அணிக்குத் தாவிவிட்டாராம் அஸ்வினி குமார். இந்த மோதல், புதுச்சேரி அரசியலை வெப்பமாக்கியிருக்கிறது.

விகடன்

கருத்துகள் இல்லை: