ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

சீமான் : இனி கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்

 இனி அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியை விட்டு விலகிய நிலையில் நாம் தமிழர் கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் இருக்கிறதா என்ற விமர்சனங்கள் வரத் தொடங்கின. வெளியேறிய கல்யாணசுந்தரம் சீமானுக்கு பதில் கொடுத்த நிலையில், கட்சியில் இருந்தும் பல நிர்வாகிகள் வலை தளங்களில் கல்யாண சுந்தரத்துக்கு மீண்டும் பதில்களை அளிக்கும் வகையில் பதிவுகளையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று சீமான் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் தேசிய இனத்துக்கான தூய்மையான அரசியலை இந்த மண்ணில் உருவாக்க கடந்த 11 ஆண்டுகளாக கடுமையான அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு இடையே பாடுபட்டு வருகிறோம். தமிழ் தேசிய இனத்தின் மக்களை அரசியல் படுத்தி அதிகாரப் படுத்தும் ஜனநாயகப் பெரும் போராக 2021 சட்டமன்ற தேர்தல் நமக்கு அமையவிருக்கிறது.

இந்நிலையில் நமது கட்டுக் கோப்பையும் கவனத்தையும் திசை திருப்புகிற பல வேலைகள் திட்டமிட்டு செயற்கையாக உண்டாக்கப்படுவதையும் அவதூறுகள் அள்ளி வீசப்படுவதையும் நாம் அறிகிறோம்.    இது அனைத்துமே 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான நமது பணிகளில் இருந்து நம்மை விலக்கி திசை திருப்புவதற்கான ஏற்பாடுகள் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த சமயத்தில் நம்மை நோக்கி வருகின்ற எல்லாவிதமான அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் நாம் பதில் அளித்துக் கொண்டே இருப்பது தேவையற்ற நேர விரயத்தை ஏற்படுத்தி தேர்தலுக்கான நமது தயாரிப்பு பணிகளை தாமதப்படுத்தும்”என்று கூறியுள்ளார் சீமான்.

மேலும் அவர், “எனவே களச் செயற்பாடுகளிலும் சமூக வலைத் தளங்களிலும் இயங்கிவரும் என்னுயிர் தம்பி தங்கைகள் இதுபோன்ற திசைதிருப்பல்களை பொருட்படுத்தாமல் எதிர்வினை என்ற பெயரில் பதிவுகளையோ காணொளிகளையோ இனிமேலும் வெளியிட வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். கட்சிப் பணிகள் குறித்த செய்திகள், அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பரப்பும் ஊடகங்களாக சமூக வலைத் தளங்களை தம்பி தங்கைகள் பயன்படுத்த வேண்டும். 2021 தேர்தல் யுத்தத்திற்கான வலிமையான நமது படையணியை தயாரிக்கின்ற மாபெரும் இனக் கடமை பணிகளில் நாம் முழுமையாக ஈடுபடவேண்டும்’ என உரிமையோடு கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளார் சீமான்.

இதன் மூலம் வெளியேறிய கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோரோடு மோதல் போக்கை கடைபிடிக்க சீமான் விரும்பவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

 

நிர்வாகிகள் விலகல்: சீமானுக்கு அரசியல் பின்னடைவா? 

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் இளைஞரணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து விலகியிருக்கிறார்கள். இதுபற்றிய விவாதங்கள் அரசியல் அரங்கிலும், நாம் தமிழர் கட்சிக்குள்ளும் நடந்துகொண்டிருக்கின்றன.

நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.10% வாக்குகளைப் பெற்றது. 2019 ல் நடந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 3.15% வாக்குகளும், நாடாளுமன்றத் தேர்தலில் 4% வாக்குகள் என ஏறுமுகத்தில் இருக்கிறது. அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10% வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் பெருமிதப்பட்டார். தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் 117 தொகுதி ஆண்களுக்கு, 117 தொகுதி பெண்களுக்கு என அறிவித்து தேர்தல் பணிகளிலும் இறங்கிவிட்டார் சீமான்.

இந்நிலையில் இந்த அடுத்தடுத்த நிர்வாகிகள் இழப்பால், நாம் தமிழர் கட்சிக்கு- சீமானுக்கு தேர்தல் ரீதியாக, அரசியல் ரீதியாக என்ன பாதிப்பு உண்டாகும் என்று அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்

“கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகிய நிர்வாகிகளின் இழப்பு என்பது நாம் தமிழர் கட்சிக்கு இழப்புதான். அவர்கள் திறமையானவர்கள், அவர்களின் விலகல் இழப்புதான்.ஆனால் தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் சாதகப் பாதகங்களை இவர்களின் விலகல் தீர்மானிக்குமா என்பதை ஆராய வேண்டியுள்ளது. கட்சியுடைய அடுத்த கட்ட வளர்ச்சி என்பது பொதுவான தேர்தல் கூட்டணிகள் எப்படி அமைகிறது, தேர்தல் களம் எப்படி இவர்களுக்கு சாதகமாக அமைகிறது, அதை எப்படி சீமான் தனக்கு சாதுர்யமாக பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.

ஆனால் பாஜக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்ற இருபெரும் தேசியக் கட்சிகள் எதிர்ப்பு என்ற புள்ளியில் சீமான் மட்டுமே தற்போது தேர்தல் களத்தில் இருக்கிறார். இதுதான் அவருக்கு பலம். மற்ற எல்லா கட்சிகளுமே ஒன்று பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு ஆகிய நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. பல கட்சிகள் பாஜகவுக்கு ஒரு அளவுகோல் காங்கிரஸுக்கு ஒரு அளவுகோல்தான் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக பாமக, கமல்ஹாசன், அமமுக ஆகிய கட்சிகள் உட்பட்ட கட்சிகள் காங்கிரசோடு கொஞ்சம் இணக்கப் போக்கோடுதான் இருக்கிறார்கள். அதேபோல கடுமையான மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற மனநிலையும் தமிழகத்தில் கட்சிகளிடம் குறைந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் பாஜக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ஆகிய தேசியக் கட்சிகளுக்கான எதிர்ப்பு நிலைக்கு என்ன ஆதரவு இருக்கிறதோ அது முழுமையாக சீமானுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உட்கட்சி அரசியலில் நாம் தமிழருக்கு சில இழப்புகள் இருந்தாலும் கட்சி நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கட்சிகளுக்கு எதிரான ஒரே கட்சியாக சீமானின் நாம் தமிழர்தான் இருக்கிறது. திமுக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு என்ற நிலையில் கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால் தேசியக் கட்சிகளுக்கு எதிரான தமிழ் தேசிய கட்சியாக நாம் தமிழர் இருப்பதால் இந்த நிர்வாகிகளின் விலகல் என்பது சீமானின் தேர்தல் பாதையில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது” என்கிறார்.

-ஆரா

கருத்துகள் இல்லை: