வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

டாக்டர் தொல்.திருமாவளவன் ... மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பி எச் டி ..

VCK’s President Thirumavalavan now becomes Doctor; complete his Ph.D. viva voce tamileoneindia : நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். அவருடைய ஆரம்பகால அனல் பறக்கு பேச்சுகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக புயலைக் கிளப்பியவை. அதே நேரத்தில், திருமாவளவன் சிறந்த படிப்பாளியும் ஆவார்.

திருமாவளவன் முதலில் பிஎஸ்சி வேதியியல் பட்டப் படிப்பு படித்தார். பின்னர், பி.எல். சட்டப்படிப்பு முடித்தார். அதன் பிறகு எம்.ஏ. கிரிமினாலாஜி படித்தார். இதையடுத்து, அவர் தடயவியல் துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் டிபிஐ என்கிற தலித் பேந்தர் இயக்கத்தில் சேர்ந்து அரசியலில் தீவிரமானார்.

தலித் அரசியலில் தீவிரமாக செயல்பட்ட திருமாவளவன் அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு தலித் மக்களுக்காக முழு நேர அரசியல் வாதியாக மாறினார். பின்னர், தலித் பேந்தர் அமைப்பை தமிழ் அடையாளத்தோடு, சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்து தேர்தல் பாதைக்கு வந்தார்.
திருமாவளவன் இதுவரை 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ளார். இவருடைய இடையறாத அரசியல் பணிகளுக்கு இடையே அவ்வப்போது, கவிதை தொகுப்புகளும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். அண்மையில் வெளியான திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் நல்லக்கண்ணு போன்றவர்கள் திருமாவளவனின் நூலை பாராட்டியுள்ளனர்.
இதனிடையே, திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டப் படிப்பில் பகுதி நேர ஆய்வாளராக சேந்து ஆய்வுகளை செய்து வந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிஎச்டி டாக்டர் பட்டத்துக்காக மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றி ஆய்வு செய்தார். திருமாவளவனின் ஆய்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கிரிமினாலாஜி துறை பேராசிரியரும் முன்னாள் துணை வேந்தருமான சொக்கலிங்கம் நெறியாள்கை செய்தார்.
இந்நிலையில், திருமாவளவன் தனது பிஎச்டி டாக்டர் பட்டத்துகான ஆய்வேட்டை நிறைவு செய்து சமர்ப்பித்தார். அதற்கான வாய்மொழித் தேர்வு இன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த வாய்மொழித் தேர்வை திருமாவளன் நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் திருமாவளவன் டாக்டர் பட்டம் பெறுவது உறுதியாகியுள்ளது.
அரசியலில் பலரும் படிக்காமலேயே, தங்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்று தனது பெயருக்கு முன்னாள் டாக்டர் பட்டம் போட்டுக்கொள்கின்றனர். ஆனால், தலித் மக்களுக்காக போராடும் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும் மைய நீரோட்ட அரசியலில் முக்கிய தலைவராகவும் விளங்கும் திருமாவளவன் படித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை பெற்றிருக்கிறார்.
பொதுவாக இந்தியாவில் டாக்டர் என்றால் அது மருத்துவரைக் குறிப்பதாகத்தான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மருத்துவரைக் குறிப்பதற்கு பிசிசியன் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. ஆய்வாளர்களைத் தான் டாக்டர் என்று குறிப்பிடுகின்றனர். டாக்டர் பட்டதைதான் தமிழில் முனைவர் என்றும் அழைக்கிறார்கள்.
அந்த வகையில், ஏற்கெனவே வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது பிஎச்டி படித்து டாக்டராகவும் ஆகியுள்ளார். டாக்டராகியுள்ள திருமாவளவனுக்கு அவருடைய கட்சியினர் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: