திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது .. 11 நாட்களுக்கு பின்பாக..

கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறதுமாலைமலர்: கேரளாவில் 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது.
தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.
கடல் எது? ஊர் எது? என்பது தெரியாமல் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளித்தது. பேய் மழையின் மிரட்டலை கண்டு அலறிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு களம் இறங்கியது.
பேரிடர் மீட்புக்குழுவுக்கு துணையாக ராணுவத்தின் முப்படையும், தீயணைப்புத் துறை, கடலோர காவல் படை, தன்னார்வ குழுவினர், மீனவ அமைப்புகள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க மாநிலம் முழுவதும் 5645 அவசர கால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. அவற்றில் இன்று வரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.



கேரளாவின் மலை கிராமங்களான குட்டநாடு, வயநாடு, பாண்டநாடு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இப்பகுதி படகுகள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் இங்கு ஹெலிகாப்டர் மூலமே மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இருப்போர் பலரும் தங்களின் உடைமைகளை விட்டு வர தயக்கம் காட்டுகிறார்கள். கால்நடைகள், வீட்டு விலங்குகளை விட்டு வர மாட்டோம் என பலர் மீட்புக் குழுவிடம் கூறி ஹெலிகாப்டரில் ஏறமறுத்த சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து மாநில அரசு இப்பகுதியில் தவிக்கும் மக்களை போலீஸ் துணையுடன் மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தவிக்கும் முதியவர்கள், நோயாளிகள் பலரும் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மீட்டு வருகிறோம்.
இது தவிர நிலச்சரிவிலும் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்.
11 நாட்களுக்கு பிறகு கேரளாவில் நேற்று மழை சற்று ஓய்ந்தது. இதையடுத்து ரெட் அலர்ட் என்ற பலத்த மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது. இன்றும், நாளையும் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையே பெய்யுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் நேற்று நிவாரணப் பணிகள் வேகம் பிடித்தது. சமூக ஆர்வலர்களின் துணையுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.
மழை குறைந்ததாலும், அணைகளில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கியது. கொச்சி, ஆலுவா, திருச்சூர், காலடி, நெடும் பாச்சேரி பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி கிடந்த சாலைகள் வெளியே தெரிந்தன.


இதுபோல வீடுகளின் முதல் தளம் வரை தேங்கி நின்ற வெள்ளமும் வடிந்து கீழ் தளத்தின் வாசல் தெரியும் அளவிற்கு குறைந்தது.
வீடுகளில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கிய தகவல் அறிந்து முகாம்களில் தங்கிய பெண்கள் பலரும் அவர்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கினர்.
அவர்களின் வீடுகளில் முழங்கால் அளவிற்கு சேறும், சகதியும் சேர்ந்திருப்பதாகவும், அவற்றை அகற்றிய பின்னரே அங்கு குடியேற முடியும் எனவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
கேரளா முழுவதும் இப்படி சுமார் 10 லட்சம் பேர் தவித்தபடி உள்ளனர்.
கேரளாவில் இயல்பு நிலை திரும்புவது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிரூபர்களிடம் கூறியதாவது:-


இதுவரை அனைத்து மீட்புக்குழுவினர் மூலம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 ஆயிரத்து 734 நிவாரண முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணிகளை தொடங்க உள்ளோம். வெள்ளத்தால் சேதமான வீடுகள் சுகாதார ஊழியர்கள் மூலம் சீரமைக்கப்படும். நோய் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு போக்குவரத்து இன்றியமையாதது. இப்போது வெள்ளம் வடிந்து வருவதால் பிரதான சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய ஊர்களுக்கு கேரள அரசு பஸ்களை இயக்க தொடங்கி உள்ளோம்.
மாநிலத்தில் உள்ள 221 பாலங்கள் சேதமடைந்துள்ளது. 59 பாலங்கள் இன்னும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இவற்றை வேகமாக சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடிவடைந்து இப்பாலங்கள் வழியாகவும் போக்குவரத்து தொடங்கும்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டனர். அவர்களின் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீட்புப்பணிக்கு பயன் படுத்தப்பட்டன. இதில் பலரது கட்டு மரங்கள் சேத மடைந்துள்ளது. அவற்றிற்கு உரிய இழப்பீடை மாநில அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: