தமிழக அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்க, 2019 ஜன., முதல், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தற்போது, பல நிறுவனங்களும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றன. அந்த வரிசையில், ஓட்டல்களில், உணவு பொருட்களை பார்சல் வாங்க வருவோர், பாத்திரங்கள் எடுத்து வந்தால், 5 சதவீதம் தள்ளுபடி வழங்க, ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர், எம்.ரவிகூறியதாவது:தமிழக அரசுடன் இணைந்து, ஓட்டல்களில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ய உள்ளோம். இதற்காக, 100 ரூபாய்க்கு மேல், உணவு பொருட்கள் பார்சல் வாங்குவோர், சாம்பார், ரசம் போன்றவற்றை வாங்க,
பாத்திரங்கள் எடுத்து வந்தால், 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.ஓட்டல்களில், ஐந்து பேர், 10 பேர் சாப்பிட கூடிய அளவிற்கு, 'கேரியர்' எனப்படும், பார்சல் பாத்திரங்கள் இருக்கும். அதற்கு, 'டிபாசிட்' தொகை செலுத்தி விட்டு, அந்த பாத்திரங்களில், பொருட்களை வாங்கிச் செல்லாம். திரும்ப வந்து, பாத்திரத்தை வழங்கி விட்டு, டிபாசிட் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். இது, இம்மாதத்திற்குள், அனைத்து ஓட்டல்களிலும் அமலுக்கு வரும். இதன் வாயிலாக, ஓட்டல்களில், பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக