சனி, 25 ஆகஸ்ட், 2018

சென்னையின் ஆணிவேர் நீதிக் கட்சி!... சமூக நீதிக் கட்டமைப்புக்கு வித்திட்டுச் சென்ற இவர்களின்

மின்னம்பலம்: பிரகாசு :சென்னை வாரத்தில் சென்னையின் வரலாறு தேடி...
சிறப்புக் கட்டுரை: சென்னையின் ஆணிவேர் நீதிக் கட்சி!
சர் ஏ.டி.பன்னீர்செல்வம் பூங்கா, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, சர்.பி.டி.தியாகராயர் அரங்கம், பனகல் மாளிகை, சவுந்திர பாண்டிய பஜார் (இப்போது பாண்டி பஜார்) போன்றவை சென்னையில் பிரபலமான இடங்கள். அதேபோல தியாகராய நகர், ஏ.கே.சண்முக செட்டியார் சாலை, டி.எம்.நாயர் தெரு, நடேசன் சாலை, எம்.சி.ராஜா தெரு, சைவ முத்தையா தெரு, உஷ்மான் சாலை, சுப்பராயன் சாலை போன்ற பெயர்களும் சென்னை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதுமட்டுமின்றி தியாகராயர் சிலை, பனகல் அரசர் சிலை, சுந்தரராவ் நாயுடு சிலை, நடேசன் சிலை, டி.எம்.நாயர் சிலை, முத்தையா முதலியார் சிலை போன்றவையும் சென்னையில் இருக்கின்றன. இவர்களெல்லாம் யார்? எதற்காக சென்னை முழுவதும் இவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள சாலைகளும், பூங்காக்களும், கட்டடங்களும் நிறைந்துள்ளன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
சென்னை வாரத்தை சென்னை வாழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வரலாற்றில் கலந்திருக்கும் இவர்களையும் சற்று அறிவோம். சென்னையைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் இருந்தாலும் சென்னையிலிருந்து தவிர்க்க முடியாத அடையாளம் நீதிக் கட்சியும், அதன் வரலாறும். இன்றைய தலைமுறையினர்கள் பலருக்கு நீதிக் கட்சி என்றொரு கட்சி இருந்ததே கூட தெரியாமலிருக்கலாம். ஆனால் சென்னையில் வாழும் இன்றைய இளைய தலைமுறையினர் நீதிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் சென்னையில் ஒரு நாளைக் கடப்பது என்பது கூட அரிதுதான்.
ஆம், மேலே சொல்லப்பட்ட அனைவரும் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களாக விளங்கியவர்கள். தமிழகம் கண்டிருக்கும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு அடித்தளமிட்டவர்கள் இவர்கள்.

தமிழகத்தில் தேசியக் கட்சிகளை மக்கள் புறக்கணித்து 50 ஆண்டுகளை எட்டிவிட்டது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன. அதிமுகவானது திமுகவிலிருந்து பிரிந்த கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். திமுக திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தேர்தல் அரசியலை நோக்கி நகர்ந்த கட்சி என்பதும் கூட அனைவரும் அறிவர். இதற்கு முந்தைய வரலாற்றைத்தான் பரவலாகப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். திராவிடர் கழகம் தந்தை பெரியாரால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம் அல்ல. அது நீதிக் கட்சியின் தொடர்ச்சி. நீதிக் கட்சியைத்தான் பெரியார் 1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகமாகப் பெயரை மாற்றுகிறார். 1938ஆம் ஆண்டில்தான் நீதிக் கட்சியில் பெரியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து இணைத்தனர். அதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே பலமுறை ஆட்சியில் இருந்தது நீதிக் கட்சி.
சென்னை வாரத்தில் சென்னை (மதராஸ்) மாகாணத்தின் ஆட்சியில் இருந்த, திராவிட சித்தாந்தத்தின் ஆரம்பகட்ட சிற்பிகளான நீதிக் கட்சித் தலைவர்களையும், அவர்கள் செய்த சாதனைகள் சிலவற்றையும் சுருக்கமாய் காண்போம்.

அன்றைய சென்னை மாகாணமானது ஆங்கிலேயர்களால், அவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட பகுதியேயாகும். இது மொழியின் அடிப்படையிலோ அல்லது நிலவியல் அடிப்படையிலோ உருவாக்கப்பட்டதல்ல. குமரி முதல் இன்றைய ஒரிசாவின் கஞ்சம் மாவட்டம் வரை சென்னை மாகாணம் நீண்டிருந்தது. இன்றைய ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளும் சென்னை மாகாணத்தின் அங்கங்களாக இருந்தன. அதேபோல இங்கு ஒரு மொழி மட்டும் பேசப்படவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, துளு போன்ற பல்வேறு மொழி பேசும் மக்களும் இங்கு இருந்தனர். இதன்பிறகு 1905ஆம் ஆண்டில் பீகாரும், ஒரிசாவும் தனி மாகாணங்களாக ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டன.
நீதிக் கட்சி உருவாவதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தது அன்றைய நிலையில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இருந்த சமூக சமமற்ற நிலையே. அன்றைய சூழலில் பல்வேறு துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசுத் துறைகளில் இடம் பெற்றிருந்த பார்ப்பனரல்லாத மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் பார்ப்பனர்கள் நெருக்கடி அளித்துள்ளனர். இதனை எதிர்க்கும் விதமாக நீதிக் கட்சி உருவாவதற்கு முன்பே பி.சுப்பிரமணியம், எம்.புருஷோத்தம நாயுடு என்ற இரண்டு வழக்குரைஞர்களால் தி மெட்ராஸ் நாண்-பிராமின் அசோசியேசன் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பு மக்களிடம் போதிய அளவில் நம்பிக்கை பெற்று வளர இயலாமல் போனது. இதையடுத்து 1912ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்திற்கு தஞ்சையைச் சேர்ந்த சரவண பிள்ளை, துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு போன்றோர் முக்கியக் காரணமாக இருந்தனர்.
இதன் செயலாளராக சி.நடேசனார் விளங்கினார். தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு 1912ஆம் ஆண்டில் சென்னை திராவிடர் சங்கமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் கொள்கைகளும், செயல்பாடுகளும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. சென்னை முழுவதும் கிளை அமைப்புகள் வளரத் தொடங்கின. சென்னையைக் கடந்து மதுரை போன்ற இடங்களிலும் கிளை அமைப்புகள் உருவாகின. பார்ப்பனரல்லாதோருக்கான இந்த அமைப்பு ஏன் இவ்வளவு தீவிரமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு ஒரு சிறு விளக்கத்தை அறிய வேண்டியுள்ளது.

பார்ப்பனர் ஆதிக்கம்
சென்னைப் பல்கலைக் கழகம் (University of Madras) 1857ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. தொடக்கத்தில் ஆங்கில வழிக் கல்வியை ’மிலேச்ச மொழி’ என்று ஒதுக்கிய பார்ப்பனர்கள், பின்னர் அதன் எதிர்காலத்தை உணர்ந்து அதிகளவில் கற்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்வியில் தனித்து ஆதிக்கம் செலுத்தும் பிரிவினராகப் பார்ப்பனர்கள் உருவாகினார்கள். இதன் விளைவு அரசு வேலைவாய்ப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவாக இவர்கள் உருவெடுத்தார்கள். 1892 முதல் 1904ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மாகாண சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள். இதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட உதவிப் பொறியாளர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். இதைவிட ஒரு பெரிய கொடுமையும் அப்போது நிகழ்ந்தது. 1853ஆம் ஆண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரே ஜாதியைச் சேர்ந்த 49 பேர் நெல்லூர் மாவட்ட வருவாய் துறையில் வேலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். இதுபோல 1894 முதல் 1904 வரையில் பல்வேறு அரசுத் துறைகளிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
எடுத்துக்காட்டாக, அப்போது பதவியில் இருந்த 140 டெபுட்டி கலெக்டர்களில் 77 பேர் பார்ப்பனர்கள். நீதித் துறையிலும் இதே நிலைதான் காணப்பட்டது. 1912ஆம் ஆண்டில் இருந்த 128 மாவட்ட முனிசிபுகளில் 93 பேர் பார்ப்பனர்கள். 1912ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண சட்டமன்றத்திலும் சீனிவாச அய்யங்கார் (தென் ஆற்காடு - செங்கல்பட்டு தொகுதி), வி.கே.ராமானுஜ ஆச்சாரியார் (தஞ்சை - திருச்சி தொகுதி), கே.இராம.அய்யங்கார் (மதுரை - ராமநாதபுரம் தொகுதி), சி.வெங்கட்ட ரமண அய்யங்கார் (கோவை - நீலகிரி தொகுதி), பி.வி.நரசிம்ம அய்யர் (சேலம் - வட ஆற்காடு தொகுதி), சர்.சி.பி.ராமசாமி அய்யர் (சென்னை நகரத் தொகுதி) என அரசியலிலும் பார்ப்பனர்களின் கோலோச்சம் மிகுந்தே காணப்பட்டது. அதுமட்டுமின்றி டெல்லி சட்ட சபையிலும், உச்ச நீதிமன்றத்திலும் கூட இவர்கள் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அப்போது 3.50 விழுக்காடு மட்டும்தான். எஞ்சிய திராவிட மக்கள்தான் (பார்ப்பனரல்லாதோர்) 97 விழுக்காடு.
நீதிக் கட்சியின் தோற்றம்
சமூகத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே அரசுத் துறைகளில் குவிந்தும், மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டும் இருந்த இந்த பாகுபாடுதான் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் உருவாகி வெகுண்டெழ அடிப்படையாய் இருந்தது. இந்தப் பாகுபாடுகள் குறித்து அன்றைய திராவிடர் சங்கம் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்திப் பேசி வந்தது. அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த சில பார்ப்பனரல்லாதோரும், இந்தக் கூட்டங்களில் மாலை நேரங்களில் பங்கெடுத்துத் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிப் பேசினர்.

இதே காலகட்டத்தில் நடேசனாரைப் போல தியாகராயரும், டி.எம்.நாயரும் சென்னையின் முக்கியப் புள்ளிகளாக விளங்கினர். இருவரும் நகராட்சி உறுப்பினர்களாகவும் விளங்கினர். செல்வந்தரான தியாகராயர் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன் என்ற அமைப்பு ஒன்றையும் இயக்கி வந்தார். புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய டி.எம்.நாயர் ஆண்டி செப்டிக் என்ற மருத்துவ நாளிதழ் ஒன்றை நடத்தி வந்தார். 1914ஆம் ஆண்டில் டி.எம்.நாயர் தனது நகராட்சிப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அடுத்த ஆண்டில் நடைபெற்ற சென்னை சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைக் கண்டார். இந்தத் தோல்விக்கு பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டதே காரணம் என்று அவர் கருதினார்.
அதேநேரத்தில் பெரும் செல்வந்தரான தியாகராயர் மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை மீது அமர அனுமதி மறுக்கப்பட்டு கீழே நாற்காலி ஒன்றில் அமர வைக்கப்பட்டார். இவருக்கு அனுமதியை மறுத்ததோ ஒரு பார்ப்பனர். அதுவும் இவரிடம் வேலைபார்க்கும் ஒரு பார்ப்பனர். திருவல்லிக்கேணி கோயிலுக்கு பெரும் நன்கொடைகளை வழங்கிய தியாகராயருக்கு அவரது பிறப்பை காரணம்காட்டி அவமானப்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந்த நேரத்தில் இவர்கள் இருவரையும் சந்தித்துப் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் தேவை குறித்தும், பார்ப்பனரல்லாதோர் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் நடேசனார் விளக்கிப் பேசியுள்ளார்.
இதையடுத்து இவர்கள் அனைவரும் இணைந்து சென்னை வேப்பேரியில் இருந்த எத்திராஜுலு முதலியார் வீட்டில் 1916ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதோரின் அமைப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் இராமராய நிங்கார் (பனகல் அரசர்), வரதராஜுலு நாயுடு, எம்.சி.ராஜா போன்ற பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நடைபெற்ற 20.11.1916 அன்றுதான் நீதிக் கட்சி தோன்றியது. கட்சியின் பெயர் south indian libarel party. தமிழில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் நடத்திய Justice பத்திரிகையால் ஜஸ்டிஸ் பார்ட்டி என மக்களால் அழைக்கப்பட்டது. அதைத்தான் தமிழில் மாற்றி நீதிக் கட்சி என்று அழைத்து வந்தனர்.
தென்னிந்தியாவில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாத மக்களைக் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் காணச்செய்து, அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்குவதே இந்த அமைப்பின் கொள்கை நோக்கமாக இருந்தது. இதை நோக்கியே மக்களிடம் பேசியும், பிரச்சாரம் செய்தும் வந்தனர். 1920ஆம் ஆண்டில் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி இந்திய சட்டசபைக்கும், மதராஸ் சட்டசபைக்கும் அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டத் திருத்தத்தை காந்தி எதிர்த்தார். அதனால் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் மதராஸ் மாகாணத்தில் நீதிக் கட்சி போட்டியிட்டது. ஹோம் ரூல் (பார்ப்பனர்களின் கட்சி), சென்னை மாகாண சங்கம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.
முதல் தேர்தலிலேயே வெற்றி
நீதிக் கட்சி தொடர்ந்து செய்து வந்த பார்ப்பனரல்லாதோருக்கான பிரச்சாரம் மிகப்பெரிய வலிமையை அக்கட்சிக்கு மக்களிடம் பெற்றுத் தந்திருந்தது. இதனால் தேர்தலில் சென்னை மாகாணத்துக்குட்பட்ட 127 இடங்களில் 81 இடங்களைக் கைப்பற்றி நீதிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. நீதிக் கட்சியைச் சேர்ந்த சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்குப் பிறகுதான் சமூக நீதித் திட்டங்கள் அமல்பெறத் தொடங்கின. 1921ஆம் ஆண்டில் அரசுத் துறைகளில் அனைத்துப் பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற ஆணையை இவர் பிறப்பித்தார்.

அனைத்து சமூகத்தினரும் கல்வி கற்காமல் எப்படி அரசு வேலைக்கு வரமுடியும் என்பதை உணர்ந்த சுப்பராயலு ரெட்டியார் அனைவரும் கல்வி கற்க ஒரு திட்டத்தை வகுத்தார். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கு மட்டுமே அதிகளவில் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்த நிலையை மாற்ற இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனாலும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக நெருங்கிய தொடர்பில் இருந்த பார்ப்பன அதிகாரிகள் இத்திட்டங்களை முடக்கவும் செய்தனர்.
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிலேயே சுப்பராயலு ரெட்டியார் மரணமடைந்துவிட, பனகல் அரசர் முதல்வராகப் பொறுப்பேற்றார். பழங்குடியின மக்கள், பஞ்சமர், பள்ளர் என தாழ்த்தப்பட்ட மக்களை அழைப்பது அம்மக்களை அவமானப் படுத்துவதாக இருப்பதாகக் கருதி அவர்களை ஆதி திராவிடர் என அழைக்க நீதிக் கட்சி உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. அவர்களுக்கு வீட்டுமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள் அமைத்துத் தரப்பட்டன. இந்தப் பணிகள் 1923 வரை மிகவும் வீரியமாகத் தொடர்ந்தன. அதனால் 1923ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் இரண்டாவது பொதுத் தேர்தலிலும் நீதிக் கட்சியே வெற்றி பெற்றது. பனகல் அரசர் மீண்டும் முதல்வரானார்.
நீதிக் கட்சியின் சாதனைகள்
நீதிக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய தளங்களில் சமூக நீதிப் பார்வையோடு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவக் கல்வி. நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும்தான் மருத்துவம் படிக்க இயலும். சமஸ்கிருதம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நிலையை பனகல் அரசர் தகர்த்தெரிந்தார். சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரி உருவானது. அனைவரும் மருத்துவராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் விதமாக அறநிலையைச் சட்டத்தை உருவாக்கினார்கள். அதுவரையில் கோயில் சொத்துக்களும், நகைகளும் கோயில் குருக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் 1928ஆம் ஆண்டில் நடந்த 3ஆவது பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி தோல்வியைத் தழுவியது. சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேட்சைகள் 36 இடங்களையும், நீதிக் கட்சியினர் 21 இடங்களையும் கைப்பற்றினர். சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரஸ் கட்சியின் உத்தரவுப்படி ஆட்சியமைக்க முன்வராததால் சுயேட்சைகள் ஆட்சியமைத்தனர். இவர்களை வழிநடத்த யாரும் இல்லாததால் நீதிக் கட்சியிலிருந்து சுப்பராயனை விலகச் செய்து அவரின் தலைமையில் சுயேட்சைகளை ஆட்சியமைக்கச் செய்தனர்.

இதில் இரண்டாவது அமைச்சராகப் பொறுப்பேற்றவர் எஸ்.முத்தையா முதலியார். தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு உயிர் மூச்சு அளித்தவர் இவர் என்றே சொல்லலாம். மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருந்த பார்ப்பனர்கள் அரசு வேலைகளில் முழுவதும் இருந்த நிலையை மாற்றவும், அனைத்துத் தரப்பினரும் அரசு வேலைக்கு வரவும் வழிவகை செய்து கம்யூனல் ஜி.ஓ.வை முதன்முதலில் வெளியிட்டவர் எஸ்.முத்தையா முதலியார்தான். இதுதான் வகுப்புரிமை கோட்பாடு நடைமுறைக்கு வர அடித்தளமிட்டது. இந்தக் காலகட்டத்தில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த பெரியார் தனது குடியரசு பத்திரிகையில் எஸ்.முத்தையா முதலியார் வாழ்க என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தினார்.
மேலும், சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் கோயில்களில் பின்பற்றப்பட்டு வந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. இதற்குப் பிறகு 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் நான்காவது பொதுத் தேர்தலில் மீண்டும் நீதிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. டி.எம்.நாயர், தியாகராயர், பனகல் அரசர் எல்லோரும் முன்பே இறந்துவிட்ட நிலையில், மீண்டும் புதிய தலைவர்களை புதுப்பித்துக்கொண்டே இருந்தது நீதிக்கட்சி. இவற்றுக்கெல்லாம் பிறகுதான் 1938ஆம் ஆண்டில் பெரியார் நீதிக் கட்சியின் தலைவரானார். பெண்களுக்கு முதல் முதலாக வாக்குரிமை அளிக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில்தான். முதன்முதலாகப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில்தான்.
தமிழகத்தின் சமூக நீதிக் கட்டமைப்புக்கு வித்திட்டுச் சென்ற இவர்களின் நினைவைப்போற்றும் விதமாகத்தான் கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக்காலங்களில் இவர்களுக்குச் சிலைகள் அமைத்ததோடு, பூங்காக்களுக்கும், சாலைகளுக்கும் இவர்களின் பெயர்களை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர்களது அடையாளங்களையும், வரலாறுகளையும் முழுமையாக அறிந்துகொள்ள முற்படுவோம். அதேநேரத்தில் அவர்களது அடையாளங்களை மறைக்கும் விதமாக, தியாகராய நகரைச் சுருக்கி டி-நகர் என்று அழைப்பது போன்ற இருட்டடிப்புகளையும் செய்யாமல் இருப்போம்.
நேற்றைய கட்டுரை: பாஜகவின் அதிகார மையத்தில் இருப்பது யார்?
மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.com
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: