செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி உதவி

ஐக்கிய அரபு அமீரகம் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக 700 கோடி ரூபாய் அளித்துள்ளதாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
BBC :கேரளாவில் ஜூன் மாதத்திலிருந்து இதுவரை பெய்த பருவமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வரும் நிலையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதும் பலர் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் கேரளாவிற்கான தங்கள் நன்கொடையை அறிவித்துள்ளன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பிரனராயி விஜயன் கேரளாவிற்கு நன்கொடை அளித்தவர்களின் தகவல்களை வெளியிட்டபோது ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அபு தாபியின் முடிக்குரிய இளவரசர் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாக தெரிவித்த அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

<>பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு உதவி வரும் நிலையில் பிற நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும் சிறப்பு நிதியாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க 2600 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகள் அனைத்து தரப்பிலும் தங்களுக்கு உதவி வருவதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரளாவுக்கு எப்போதும் பங்குண்டு. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என ஷேக் முகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: