வியாழன், 23 ஆகஸ்ட், 2018

தொண்டர்கள்தான் தலைவர்கள் : மு.க அழகிரி

தொண்டர்கள்தான் தலைவர்கள் : மு.க அழகிரிமின்னம்பலம் : தன்னிடம் வரும் அனைவரும் தலைவர்தான் எனக் கூறியுள்ள மு.க. அழகிரி, தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தலைவர் யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரியை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்த நிலையில், அதற்கு ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்” என்றார். அழகிரியின் இந்த பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தனது பலத்தை நிரூபிப்பதற்காக வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள்ளார் என்பதை மெரினா நோக்கி அழகிரி பேரணி ஆகஸ்ட் 16ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடம் வரை பேரணி நடத்த அழகிரி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட்23) காலை மதுரையில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி, “என்னிடத்தில் வருகின்றவர்கள் அனைவரும் தலைவர்கள் தான், எனக்கு தொண்டர்கள் தான் தலைவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தலைவர்கள் என்று யாரும் கிடையாது, பேரணியில் உண்மை தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் நிச்சயம் கலந்து கொள்வார்கள்.” என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: