வியாழன், 25 ஜனவரி, 2018

பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கலவரம் 200 வாகனங்கள் சேதம்


பத்மாவத்’ படத்துக்கு எதிரான போராட்டத்தில் 200 வாகனங்கள் சேதம்தினத்தந்தி :‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 1,900 பெண்கள் தீக்குளிக்க தயாராக இருப்பதாக கர்னி சேனா மிரட்டல் விடுத்து உள்ளது. புதுடெல்லி,< 14-ம் நூற்றாண்டில் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த ராணி பத்மாவதியை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று திரைப்படம் தயாரானது.
இந்த படத்தில் ராணி பத்மாவதி பற்றியும், ராஜபுத்திர வம்சத்தினர் குறித்தும் அவதூறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்த நிலையில் இந்த படம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் பத்மாவத் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்துக்கு எதிராக பல மாநிலங்களில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் வன்முறையில் இறங்கினர். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.


குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் பத்மாவத் படம் வெளியாக இருந்த 3 தியேட்டர்களை குறி வைத்து ஒரு மர்ம கும்பல் நேற்று முன்தினம் இரவு பயங்கர தாக்குதல் நடத்தியது. சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. இந்த தியேட்டர்களின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 30 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. மேலும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தியேட்டருக்கு வரும் சினிமா ஆர்வலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பத்மாவத் படத்தை திரையிடமாட்டோம் என்று குஜராத் மாநில தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

டெல்லி அருகேயுள்ள குருகிராம் நகரில் வன்முறையாளர்கள் ஒரு பஸ்சுக்கு தீ வைத்தனர். மீரட் நகரில் தியேட்டர் மால் ஒன்றின் மீது முகமூடி அணிந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

மும்பை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்னி சேனா அமைப்பைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் போராட்டக்காரர்கள் பத்மாவத் படம் வெளியாக உள்ள தியேட்டரின் முன்பதிவு கவுண்ட்டருக்கு தீ வைத்தனர். அங்கு சரமாரியாக பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் அந்த தியேட்டரின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது.

போராட்டக்காரர்கள் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் தடுப்புகளை குவித்து தடையை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், கர்னி சேனா அமைப்பினர் படம் வெளியாகும் இன்றைய தினத்தில் பொதுமக்கள் யாரும் தியேட்டருக்கு சென்று பத்மாவத் படத்தை பார்க்க முடியாத விதமாக மக்கள் ஊரடங்கு என்னும் புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

கர்னி சேனா அமைப்பின் சித்தூர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பத்மாவத் படத்தை திரையிட்டால் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 1,900 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று அறிவித்தார். இதையடுத்து அந்த அமைப்பின் சித்தூர் தலைவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

பத்மாவத் படத்துக்கு எதிராக வன்முறை வெடித்து உள்ளதால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களின் இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தினர் படத்தை வெளியிடமாட்டோம் என்று கூட்டாக அறிவித்து உள்ளனர். இந்த சங்கத்தினரிடம் நாட்டில் உள்ள தியேட்டர்களில் 75 சதவீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: