திங்கள், 22 ஜனவரி, 2018

மே 6ஆம் தேதி 'நீட் ' தேர்வு!.. சி பி எஸ் சி பாடத்திட்டதில் மட்டுமே கேள்விகள் ,,,

மின்னம்பலம்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2018-19ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.டி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. இவற்றில் சேருவதற்கு "நீட்" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்தத் தேர்வை அறிமுகப்படுத்தியதாகக் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதன் கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் ‘நீட்’ தேர்வைச் சந்திப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, நீட் தேர்வைத் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் கடுமையாக எதிர்த்தனர். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் கடந்த கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான (2018) நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வினின்றும் விலக்களிக்கப்பட்டிருப்பது தொடர்கிறது.
மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும் கருத்தில்கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாநிலப் பாடத் திட்டங்களையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய நவாழ்வுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார்.

கருத்துகள் இல்லை: