வியாழன், 25 ஜனவரி, 2018

மொழிப்போர் தினம் ஜனவரி 15.. அனுசரிக்கப்படவேண்டிய நாள் ...மாறாக 25 அல்ல.

Shalin Maria Lawrence : நடராசன் -தாளமுத்து
சரியாக சொன்னால் தமிழ்நாட்டில் மொழிப்போர் தினம் அனுசரிக்கப்படவேண்டிய நாள் ஜனவரி 15 மாறாக 25 அல்ல.
இந்த மாநிலத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த கிளர்ச்சிகள் இரண்டு நிலைகளை கொண்டது. பொதுவாக 1965 களில் நடந்த இரண்டாம் நிலை போராட்டங்களைதான் ஊடகங்கள் அதிகமாக பேசி இருக்கின்றன.ஆனால் அதற்கு முன்பே 1938 ஆம் ஆண்டில் தான் இந்த மாநிலம் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தன் முதல் எழுச்சியை கண்டது.
1938 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் ஹிந்தி பாடத்தை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.
இந்த சட்டத்தால் சுயமரியாதை தமிழர்கள் கொதித்து போனார்கள். அங்கங்கே கொந்தளிப்புகள் இருந்தாலும் அராசங்கத்திற்கு எதிராக யார் முதலில் குரல் எழுப்புவது என்கிற தயக்கம் இருந்தது.

அத்தகைய சூழலில் அதிகம் கொதித்து போன ஆதி தமிழர்கள் (ஆதி திராவிடர்கள்) போராட்டத்தை முன்னெடுத்து செல்ல துணிந்தனர்.
பெரியாரின் வழியில் அன்னை மீனம்பாள் மற்றும் தந்தை சிவராஜ் போராட்டங்களை ஆரம்பித்து தலைமை தாங்கி வழி நடத்த ஆரம்பித்தனர் .இவர்களின் பின்னால் ஹிந்தி எதிர்ப்பு போரில் பல தலித் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறைசென்றனர்.
இதை குறித்து அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சுப்பராயன் சொன்னது "ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்".
ராஜாஜி உதிர்த்த முத்துக்கள் "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்"
இவ்வாறாக போராட்டத்தில் பங்கேற்ற தலித்துகளை அசிங்கப்படித்தினார்கள்.
சென்னையின் பூர்வகுடியான நடராசன் என்கிற மாணவர் வடசென்னை சார்பாக போராட்டத்தை முன்னெடுத்து சென்று கைது செய்யப்பட்டார்.
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் விடுதலை என்கிற நிபந்தனையை உதறி தள்ளினார்.
சிறையிலேயே கொடூரம் தாங்காமல் ஜனவரியில் 15 ,1939 இல் மரணமடைந்தார் நடராசன்.
மொழிப்போரில் மரணமடைந்த முதல் தியாகி அய்யா நடராசன்.
அவருக்கு பின் அதேபோல் சிறைக்கு சென்று மூன்று மாதங்கள் கழித்து உயிரை நீத்த தியாகி அய்யா தாளமுத்து.
இதில் தாளமுத்து வேறு, நடராசன் என்பவர் வேறு.
ஆனால் இன்றைய இளம் வயதினர் பலருக்கும் தாளமுத்து நடராசன் என்பது ஒரே ஆள் என்கிற ஒரு நினைப்பு இருக்கிறது.
இது நினைப்பு மட்டும் அல்ல இது அரசியல் கட்டமைத்த ஒரு பிம்பமும் கூட.
நடராசரை பின்னுக்கு தள்ளியது ஒருவகை அரசியல்.
நடராசன் ,தாளமுத்து இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தமிழ் தாத்தா ,தமிழ் மாமா என்று இன்னொரு வகையினரை முன்னுக்கு தள்ளியது இன்னொரு மகா அரசியல்.
ஓரு சிறு அரசியல்வாதியின் தந்திரத்தை மிஞ்ச ஒரு பெரு அரசியல்வாதி தயாராக இருக்கிறான்.
ஒரு சமூகத்தின் முயற்சிகளை, முன்னெடுப்புகளை மறுதலிப்பதன் மூலம் அந்த சமூகத்தை ஒன்றுக்கும் உதவாதவர்கள் போல் சித்தரித்தது எந்த அரசியல் என்பதை என்னால் துணிந்து மறக்க இயலவில்லை.
மொழிப்போரும் தலித் எழுச்சி தான் .
தலித்தியம் என்பது இது போன்று மறைக்கப்பட்ட உண்மைகளை வெளி கொனருவதுதானெ ஒழிய நீங்கள் பொய்யாக கட்டமைப்பதுபோல் ஜாதி வெறி கிடையாது.
பிகு : கீழே உள்ள புகைப்படம் ஹிந்தி எதிர்ப்பு முதல் நிலை போராட்டத்தின் மீனம்பாள் அவர்கள் நடத்திய முதல் பொது கூட்டத்தினுடையது. படத்தில் இருப்பவர்கள் மீனம்பாள் ,சிவராஜ், அண்ணா.
மற்றும் இன்னொரு படத்தில் இருப்பவர் தியாகி நடராசன்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: