திங்கள், 22 ஜனவரி, 2018

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்: மாணவர்கள் எச்சரிக்கை!

மின்னம்பலம்: பொங்கலுக்கு முன் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை, பொங்கலுக்குப் பின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது எனத் தமிழக மக்கள் பிரச்சினை மேல் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு, ஜனவரி 20 முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பொதுமக்கள் கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அமைச்சர்கள் கூறும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்குப் பேருந்துக் கட்டண உயர்வா என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜனவரி 22) கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
சென்னையில் கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை முடித்துக்கொண்டு மனிதச் சங்கிலி மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

"பேருந்துக் கட்டண உயர்வால் கூலி வேலை செய்யும் ஏழை மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குறைந்தபட்சக் கட்டண உயர்வு அறிவித்திருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் 2 மடங்காகக் கட்டணத்தை உயர்த்தியது, ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்: மாணவர்கள் எச்சரிக்கை!தமிழ்நாடு அரசு பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் வாங்குவதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் கட்டணத்தை உயர்த்த கமிட்டி அமைத்து ஆலோசித்துவருவதையும் நிறுத்த வேண்டும். சேவைத் துறையின் இந்தக் கட்டண உயர்வால் அனைத்து மக்களுக்குமே பாதிப்பு என்பதால், ஜல்லிக்கட்டு, நீட் போராட்டங்களைப் போல இதற்கும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். அதனால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்."

கருத்துகள் இல்லை: