செவ்வாய், 30 மே, 2017

ஜெயலிதாவின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.


இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு ஜெயலலிதாவையும், மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து அதே ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா இறந்தததால் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு சொந்தமான தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் ஜெ.வின் சொத்துகள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியது.

இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இந்த சொத்துகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் பறிமுதல் செய்யப்பட்டவுடன் அவை தமிழக அரசுக்கு சொந்தமானது என்று வருவாய் துறை அதிகாரிகளால் அறிவிப்பு பலகை வைக்கப்படும். இதைத் தொடர்ந்து அந்த சொத்துகளை தனிநபர் யாரும் வாங்க முடியாது.  tamiloneindia

கருத்துகள் இல்லை: