வெள்ளி, 2 ஜூன், 2017

28 வீத ஜி எஸ் டி.. கமலஹாசன் கடும் எதிர்ப்பு! தமிழ்,பிராந்திய மொழி படங்களின் சந்தையை இந்தி ,ஆங்கில சந்தையோடு ஒப்பிடுவது தவறு

சென்னை:அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கும், நமது படங்களுக்கும் ஒரேஅளவில் ஜி.எஸ்.டி வரி விதிப்பா என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஜுலை ஒன்றாம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில், சினிமாவிற்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகள் விலையானது தற்போதுள்ள அதிகபட்ச ரூ.120-லிருந்து, ரூ.153- ஆக உயரக் கூடும் என்று தெரிகிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அனைவரும் மத்திய நிதியமைச்சர் ஜெட்லீயை சந்தித்து பேசினார்கள். விரைவில் இது குறித்து அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள திரைப்பட வர்த்தக கழக அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.
ஒரு வரிவிதிப்பின் அடிப்படையில், அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், நமது படங்களையும் நீங்கள் ஒரே அடிப்படையில் வைக்க இயலுமா? அதே போல் இந்தியா முழுமைக்கும் பரவியுள்ள ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு எடுக்கபப்டும் ஹிந்தி படங்களுக்கும், நமது தமிழ் படங்களுக்கும் ஒரே அளவு வரிவிதிப்பு என்பதும் சரியாகாது.
ஒரு பிராந்திய மொழி சினிமாவின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்.ஆனால் உலகளாவிய அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் ஹிந்திப்படங்களுக்கும் ஒரே அளவில்வரி விதிக்கக் கூடாது.
ஒப்பீட்டு அளவில் பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு பகுதிகளில் வசித்தாலும், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான இத்தனை விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது.  
ஆனால் உலக அளவில் திரைப்படம் தொடர்பாக மிகப் பெரிய விருதுகள் மற்றும் கவுரவங்களை பெற்றுத் தருவது பிராந்திய மொழியப்படங்கள்தான் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறான சிரமங்களை அத்தனை சிறிய படங்களால் எவ்வாறு எதிர் கொள்ள முடியும்?
நீங்கள் அதிக அளவில் சம்பளம் பெறும் நடிகர்கள் என்று சிலரை சுட்டிக் காட்டலாம். ஆனால் நாங்கள் வருமான வரி வேறு தனியாக கட்ட வேண்டியுள்ளது. ஆனால் இந்தியா முழுமைக்கும் எங்களை போல மொத்தமாக 15 பேர்கள் இருப்பார்களா? அவர்களைத் தவிர மற்றவர்கள் எவ்வாறு இதனை சமாளிப்பது?
என்னைப் பொறுத்த வரை எனக்கு சினிமாதான் வாழக்கை. எனது மழலை மாறத் துவங்கியதே இங்குதான். எனவே என் வாழ்க்கை கெடாமல் இருக்க நான் போராடித்தான் ஆக வேண்டும்.
இந்த 28% ஜி.எஸ்.டி வரி விதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு எங்களுக்கு உதவுதாக சொல்லியிருக்கிறார்கள் உறுதி கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் நலமாக முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு நடிகர் கமலஹாசன் தெரிவித்தார் தினமணி

கருத்துகள் இல்லை: