சனி, 3 ஜூன், 2017

சென்னை சில்க்ஸ்.. அக்கம் பக்கத்து வீடுகளில் விரிசல்.. பெரும் அச்சத்தில் மக்கள்

நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு
 Gajalakshmi  : சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவது குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 31ம் தேதி அதிகாலையில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்துக்கு ஆளானது. 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டடத்திற்குள் தீ மென்மேலும் பரவி வருவதால் நேற்று முதல் ஜா கட்டர் என்னும் ராட்சத எந்திரம் மூலம் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் 7வது மாடியை இடிக்க முடியாததால் 6வது மாடியில் இருந்து இடிக்கும் பணி தொடங்கியது.
கட்டட இடிபாடு கழிவுகள் உள்பக்கமாகவே விழும் வகையில் இடிபாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே மாலை நேரமாகிவிட்டதால் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மீண்டும் இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு கட்டட இடிபாடு பணிகள் காரணமாக தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

ஏற்கனவே 4 நாட்கள் வியாபாரம் இல்லலாத நிலையில் விரைவில் இடிக்கும் பணியை முடித்து கடைகள் திறந்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடிகளில் விரிசல் மேலும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் போது பலத்த சத்தத்துடன் கட்டுமானப் பொருட்கள் சிதறுவதால் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் இடிக்கத் தொடங்கியது முதலே தங்கள் வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். போக்குவரத்தும் சீராகவில்லை இதோடு தியாகராய நகர் மேம்பாலத்தில் இன்னும் போக்குவரத்து திறந்து விடப்படவில்லை.
இதே போன்று தியாகராய நகர் பகுதியை சுற்றி போடப்பட்ட போக்குவரத்து மாற்றமும் இன்னும் அமலில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். கெடுபிடிகள் சென்னை சில்க்ஸ் கட்டட நகைப் பெட்டகம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட தெருக்களில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அந்த வழியாக அனுமதிக்கப்படுவதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைவதாக தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: