புதன், 31 மே, 2017

சென்னை ஐ .ஐ.டி. முற்றுகை! பதற்றம்!

மாணவர் அமைப்பினர் சென்னை ஐ .ஐ.டி. முற்றுகை! பதற்றம்!
மின்னம்பலம் : கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் என்ற மாணவர்களின் அமைப்புக்கு ஐ.ஐ.டி நிர்வாகம் அங்கீகாரம் அளிக்க மறுத்து தடை விதித்தபோது, அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது முதல் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் அரசியல் எல்லைக்குள் நுழைந்துவிட்டது. தற்போது சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் மத்திய அரசின் மாட்டிறைச்சி தொடர்பான உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுக்கறி திருவிழா நடத்தியதில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவர் ஐ.ஐ.டி. உணவு விடுதியில் ஏ.பி.வி.பி. மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள முற்போக்கு இயக்கங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய அரசு கடந்த மே 26ஆம் தேதி 1960ஆம் ஆண்டு மிருகவதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தில் புதிதாக 2 சரத்துகளைச் சேர்ந்தது. அதில், இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்தும், இறைச்சிக்காக மாடுகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்களின் உணவு உண்ணும் உரிமையைப் மத்திய அரசு தடுக்கிறது என்பதால் நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தத்தை தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மே 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் மாட்டுக்கறி திருவிழா நடத்தினர். இதில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு நடந்து ஒரு தினத்துக்கு பிறகு நேற்று மே 30ஆம் தேதி சூரஜ் என்ற மாணவர் மாட்டுக்கறி திருவிழாவில் கலந்துகொண்டதற்காக ஐ.ஐ.டி.யில் உள்ள ஜெயின் விடுதில் மதிய உணவு சாப்பிடும்போது மனிஷ்குமார் என்ற மாணவரும் அவருடன் மேலும் 7 மாணவர்கள் சேர்ந்துகொண்டு சூரஜ்ஜை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சூரஜ்ஜுக்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆய்வு மாணவர் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து மே 31ஆம் தேதி புரட்சிகர மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், சென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் அமைப்பினர் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் அறிந்த சென்னை மாநாகர போலீஸ் கிண்டி ஐ.ஐ.டி. வளாகம் முன்பு பாதுகாப்புக்காக போலீஸாரைக் குவித்தனர். அது மட்டுமல்லாமல், கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்திலும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் செல்ல ஐ.ஐ.டி. வளாகம் முன்பு 6 போலீஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ம.க.இ.க.வின் மாணவர் அமைப்பான புரட்சிகர மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணி அமைப்பினர் இன்று மே31ஆம் தேதி காலை 11:00 மணிக்கு 75 பேர் அந்த அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளர் சாரதி தலைமையில் போராட்ட பதாகைகளுடன் வந்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டு ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஐ.ஐ.டி. வளாகத்தில் பதற்றம் நிலவியது.
இந்த போராட்டத்தின் போது, பு.மா.இ.மு. சென்னை மாவட்ட செயலாளர் சாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது மக்கள் உரிமையை மீறுகிற செயல். மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் நடத்திய மாட்டுக்கறி திருவிழாவில் கலந்துகொண்ட சூரஜ் என்ற மாணவர் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மாணவர்கள் 8 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சூரஜ் மீது தாக்குதல் நடத்திய அந்த 8 மாணவர்கள் மீது ஐ.ஐ.டி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சூரஜ்ஜுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். பெரியார் பிறந்த மண்ணில் இந்துத்துவா சக்திகளை தலையெடுக்கவிட மாட்டோம் என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பு.மா.இ.மு. அமைப்பினரை போலீஸார் குண்டுகட்டாகத் தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்த பெண்களை, மகளிர் போலீஸ் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அப்போது போராடிய ஒரு பெண்ணின் கையை ஒரு பெண் போலீஸார் கையை முறித்தார். மேலும், இந்த போராட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் கலந்துகொண்டனர். போலீஸார் அந்த சிறுவர்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். போலீஸாரின் நடவடிக்கையைப் பார்த்த சிறுவர்களில் சிலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இறுதியாக போலீஸார் பு.மா.இ.மு. அமைப்பைச் சேர்ந்த 75 பேர்களைக் கைது செய்தனர். கைதானவர்களில் 21 பேர் பெண்களும் 14 பேர் சிறுவர்களும் அடங்குவர்.
அதே நேரத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் 20 பேர் ஐ.ஐ.டி. வளாகம் முன்பு மாட்டுக்கறி சாப்பிட்டபடி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு. மற்றும் த.பெ.தி.க. அமைப்பைச் சேர்ந்தவர்களை மைலாப்பூரில் உள்ள வள்ளுவன் வாசுகி திருமணமண்டபத்தில் சிறைவைத்தனர்.
இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர், இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில், ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், பாஜக அரசு மாட்டிறைச்சி தொடர்பான உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி திருவிழாவில் கலந்துகொண்ட மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மௌனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டிக்கிறோம் என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பட்டிணம்பாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் சிறைவைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 8 பேர் சென்னை மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசு மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும் தமிழக முதலமச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரும் பட்டிணம்பாக்கம் சமுதாயக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 138 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் 80க்கும் மேற்பட்டோர் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள்ளேயே பேரணியாக வந்து வாயிலின் முன்பு அமர்ந்து மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரஜ்ஜின் மருத்துவ செலவை ஐ.ஐ.டி. நிர்வாகமே ஏற்க வேண்டும். தாக்குதல் நடத்திய மாணவர்களை நீக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி. டீன் சிவக்குமாருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், மாணவர் சூரஜ் மீதான தாக்குதல் குறித்து ஐ.ஐ.டி.நிர்வாகம் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஐ.ஐ.டி. மாணவர் சூரஜ் மீதான தாக்குதல் குறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய மாணவர் மனிஷ் குமார் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல, தாக்குதலில் காயமடைந்த சூரஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் தொடர்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் ஐ.ஐ.டி. வளாகத்தில் பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஐ.ஐ.டி. வளாகத்தில் பதற்றம் நிலவியது

கருத்துகள் இல்லை: