செவ்வாய், 30 மே, 2017

சென்னை ஐஐடி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல்! மாட்டிறைச்சி விழா சுராஜ் மீது

சூரஜ் விகடன் :சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் கேரளாவில் நடைபெற்ற 'மாட்டிறைச்சித் திருவிழா' போன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.
சுமார் 80 மாணவர்கள் இணைந்து மாட்டிறைச்சித் திருவிழா நடத்தியுள்ளனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பேத்கர் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுராஜை தாக்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: