சனி, 3 ஜூன், 2017

கலைஞர் வைரவிழா மலரை ரசித்து பார்க்கும் காட்சி வெளியானது


திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாள்விழா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு அகில இந்திய அளவிலான அனைத்துக்கட்சித் தலைவர்கள் நாளை ஜூன் 3ஆம் தேதி சென்னைக்கு வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியிடம், சட்டப்பேரவை வைரவிழா மலரை அவரது வீட்டிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன், வைரவிழா மலரைத் தயாரித்த முரசொலி செய்தி ஆசிரியர் சேது உட்பட ஆசிரியர்கள் குழுவினர் ஆகியோர் நேரில் சென்று கண்பித்தனர். சுமார் 274 பக்கங்கள் கொண்ட வைரவிழா மலரில் கருணாநிதி சட்டசபையில் பேசிய பேச்சுகள், அவரது சாதனைகள் போன்றவைகள் உள்ளன. விழா மலரை மு.க.ஸ்டாலினும், கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனும் ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்காண்பித்தபோது, அதை மிகவும் ரசித்துப் புன்னகைத்தபடியே கண்டு மகிழ்ந்தார் கருணாநிதி. அப்போது, அவரால் சரியாக பேச முடியாத காரணத்தால் புன்னகை முகத்துடன் இருந்தார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வைர விழா மலரைக் கருணாநிதி பார்த்து ரசித்தது கண்டு ஸ்டாலின், சண்முகநாதன் மற்றும் முரசொலி ஆசிரியர் குழுவினர் ஆகியோர் மிகவும் சந்தோசமடைந்தனர்.

டாக்டர்கள் அறிவுரையின்படி, கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் தொண்டர்கள் www.wishthalaivar.com என்ற இணைய தளம் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள்விழா வாழ்த்து தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் இன்று ஜூன் 2ஆம் தேதி மதியம் 2 மணி வரை சுமார் 45 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாள்விழாவிற்கான ஏற்பாடுகள் வெகுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை: