சனி, 3 ஜூன், 2017

கனடாவில் தமிழிலும் தேசிய கீதம் .. தமிழுக்கு மற்றொரு மகுடம்!

மின்னம்பலம் :தமிழ்மொழி' ஒரு செம்மொழி. தமிழர்களும் உலகளவில் மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் வியாபாரத்துக்காகவும், வேலைக்கும் சென்று நிரந்தரமாக அங்கு குடியேறியுள்ளனர். பல நாடுகளில் தமிழர்களின் உழைப்பை, ஒவ்வொரு நாடுகளும் கொண்டாடி, அவர்களுக்கு ஆட்சித்துறையில் நல்ல பதவிகள் தருவது , நிறைய அங்கீகாரங்கள் தருவது இயல்பு. அப்படி ஓர் அங்கீகாரத்தை 'கனடா' நாடு அளித்திருக்கிறது.
அதாவது வருகிற ஜூலை -1ஆம் தேதி, கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு வாசிக்கப்பட தமிழில் தேசிய கீதத்தை வெளியிட்டுள்ளது, கனடா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் ஈழத்தமிழர்கள் அதிகம் பேர் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அவர்களின் கலாசார பண்டிகைகளை கொண்டாடும் வகையில் நாட்டின் பொதுஅறிவிப்புகளை அடிக்கடி தமிழில் வெளியிட்டு, உலகத் தமிழர்களை கெளரவப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சுதந்திர தினத்துக்காக, தமிழ் மொழியுடன் சேர்த்து மொத்தம் 12 மொழிகளில் தேசிய கீதத்தை வெளியிட்டுள்ளது, கனடா அரசு. அதில் குறிப்பாக தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் உட்பட 12 மொழிகளில் தேசிய கீதத்தை வெளியிட்டிருக்கிறது, கனடா அரசு.
முன்னதாக கனடா நாட்டின் தேசிய கீதமானது பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முதன்முறையாக தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் எழுதப்பட்டு, பாடல் பதிவு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் தேசிய கீதத்தை, கனடாவுக்காக, கவிஞர் கந்தவனம் என்பவர் எழுதியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: