திங்கள், 12 டிசம்பர், 2016

அதிமுக சட்ட விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக முடியாது?

ஆர்.மணி அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைக் கொண்டு வருவதற்கான பிரம்மப் பிரயத்தனத்தில் தமிழ் நாட்டின் பல ஊடகங்களும் இன்று ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பசி நோக்காமல், கண் துஞ்சாமல் இந்த தியாக வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய ஊடகங்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை கவனிக்க மறுத்தும், தவறியும் வருகின்றன. அதுதான் அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள். இதன்படி சசிகலா தற்போதைக்கு அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக வர முடியாது என்பதுதான் யதார்த்தம்.
எம்ஜிஆரால் துவக்கப் பட்ட அஇஅதிமுக வின் சட்டதிட்ட விதிகள் 1.11.1976 ல் பெரியளவில், விரிவாக உருவாக்கப்பட்டது. அதற்கு கடைசியாக திருத்தங்கள் அதாவது amendment மேற்கொள்ளப் பட்டது 5.2.2007-ல். AIADMK Rules and Regulations 2007 ... இதில் Section 30 (5) என்ன சொல்லுகிறது என்றால், Those who want to contest for the post of office bearers in the Organization should have been members of the party for 5 years without any break. The General Secretary is vested with the power to relax this.
அதாவது அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள் பிரிவு 30, உப பிரிவு 5 ன் படி கட்சியின் நிருவாகிகள் பதவிக்கு வர போட்டியிடுபவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக தொடர்ந்து ஐந்தாண்டுகள் இருந்திருக்க வேண்டும். இதற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 11 பேர் டிசம்பர் 19, 2011 ல் ஜெயலலிதாவால் அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். அப்போது சசிகலா அஇஅதிமுக வின் நிர்வாக குழு அதாவது executive committee உறுப்பினராகவும் இருந்தார். 2012 மார்ச் 28-ல் சசிகலா மன்னிப்புக் கடிதம் எழுதினார். அது அன்றைய தினமே ஊடகங்களில் வெளி வந்தது. ஏப்ரல் 1 ம் தேதி அதிகாரபூர்வமாக மீண்டும் ஜெயலலிதாவுடன் அவரது போயஸ் தோட்ட வீட்டில் இணைந்தார். ஆனால் எப்போது மீண்டும் சசிகலா அஇஅதிமுக வில் உறுப்பினராக ஆனார் என்பது பற்றி எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை. நிச்சயமாக ஏப்ரல் 1, 2012 க்குப் பிறகுதான், அவர் அஇஅதிமுக வில் உறுப்பினராகச் சேர்ந்திருக்க முடியும். அப்படியென்றால் 2017 ஏப்ரலுக்கு முன்பாக சசிகலா பொதுச் செயலாளராக முடியாது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருமே ஒவ்வோர் முறையும் போட்டியின்றித்தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். இதில் தேர்வு முறை என்பது, அதாவது electoral college என்பது கிளைச் செயலாளர், பொருளாளர் மற்றும் தலைவரிலிருந்து, எம்எல்ஏ க்கள் எம் பிக்கள் வரையில் வாக்களித்துதான் பொதுச் செயளாரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதில் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஒருவர் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் கொண்டு வந்ததே, திடீரென்று கட்சிக்குள் புற்றீசல் போல ஊடுருபுபவர்களால் கட்சி சிதைக்கப்படாமல் இருக்கத்தான். மேலும் நிர்வாகி எனும்போது அதில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும்தான் அடக்கம் என்றே பொருள் கொள்ளப் படுகிறது.
இதற்கு விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே போன்று தேர்தல்களில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னமான இரட்டை இலையை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்யும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் சமீபத்திய 4 இடைத் தேர்தல்களில் ஜெவின் கைநாட்டுடன் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆகவே முக்கியமான இந்த அதிகாரங்களை ஜெ தன் வசமே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
இன்று அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் காலமாகி விட்டார். அப்படியென்றால் எப்படி விதிவிலக்கு கொடுக்கப்பட முடியும்? இதனையும் மீறி வேறு ஒரு நடைமுறையை கடைபிடிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அதாவது கட்சியின் அவைத் தலைவர் தலைமையில் பொதுக் குழுவைக் கூட்டி அஇஅதிமுக வின் சட்ட, திட்ட விதி 30, உப விதி 5 க்கு திருத்தம் கொண்டு வந்து அதன்படி சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல. காரணம் இந்த விதி தெளிவாகவே இந்த திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது என்றே சொல்லுகிறது.


ADMK bylaw couldn't allow Sasikala to become as Gen Sec?
வேறு வழிகளில் ஏதாவது தில்லாலங்கடி வேலைகள் செய்து சசிகலா வை பொதுச் செயலாளராக ஆக்க முடியாதா?
'முடியும். அதனை செய்யக் கூடியவர்கள்தான் தற்போது சசிகலா வை கட்சியில் ஆதரித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் அப்படிச் செய்தால் கண்டிப்பாக விவகாரம் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். காரணம் அவ்வளவு சுலபத்தில் ஒரு கட்சியின் சட்ட திட்டங்களில் சொல்லப் பட்டிருப்பவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு தனி நபருக்காக காரியங்களை நிகழ்த்த முடியாது. தேர்தல் கமிஷனும் இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன,' என்கிறார் அஇஅதிமுக வில் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியிலிருந்து வரும் முன்னாள் எம்எல்ஏ ஒருவர்.
சரி. யார் இந்த விவகாரத்தை நீதிமன்றங்களுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எடுத்துச் செல்லுவது? 'பொது மக்கள் செல்ல முடியாது. அஇஅதிமுக வின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள சிலர், அந்தமான், டில்லி, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள அஇஅதிமுக உறுப்பினர்கள் சிலர் இதுபற்றி சிந்தித்து வருவதாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் பணியிலும் தற்போது ஓரங்கட்டப் பட்டிருக்கும், 'வானளாவிய அதிகாரத்திலிருந்த' அந்த முக்கியப் புள்ளி ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது' என்கிறார் அந்த முன்னாள் எம்எல்ஏ.
சசிகலா உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கிய 11 நாட்களில், டிசம்பர் 30, 2011 ல் சென்னையை அடுத்த வானகரத்தில் அஇஅதிமுக பொதுக் குழு நடந்தது. அதில் பேசிய அப்போதய அமைச்சர் கே.பி. முனுசாமி, 'அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார், வீசியெறிந்தால் சாணி' என்று பேசினார். ஆனால் அந்தப் பொதுக் குழுவில் ஜெயலலிதா பேசியதுதான் முக்கியமானது ...
"தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியை சேர்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே எங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லுபவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல அத்தகையவர்களின் பேச்சை கேட்டு நம்பி அதன்படி செயல்படுகின்ற கட்சி காரர்களுக்கும் மன்னிப்பே கிடையாது!''
- இதுதான் ஜெயலலிதாவின் டிசம்பர் 30, 2011 பேச்சு ...
2011 டிசம்பரில் கட்சியிலிருந்து தூக்கியெறியப் பட்ட சசிகலா 2016 டிசம்பரில் அஇஅதிமுக வை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார். காலம் தான் எத்தகைய வியக்கத்தக்க கோலங்களைப் போடுகிறது!  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: