புதன், 6 ஆகஸ்ட், 2014

தலையில் தேங்காய் உடைத்து முட்டாள்கள் வழிபாடு ! பலருக்கு மண்டையில் தையல் !


தலையில் தேங்காய் உடைப்பதா? கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் இருபால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் கொடுமை நடந்து கொண்டு வருகிறது.நூற்றுக்கணக்கானவர்களின் தலைகளில் அக்கோவில் பூசாரி தேங்காய் உடைக்கிறார். குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாண்டும் இது நடைபெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான பக்தர்களின் மண்டைகள் பிளந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது. பலருக்கு மண்டையில் தையல் போடும் அளவுக்கு விபரீதமாகியிருக்கிறது.
நரம்பியல் மருத்துவர்கள் இதுபோல் மண்டையில் தேங்காய் உடைப்பது ஆபத்தானது; மூளையைப் பாதிக்கக் கூடியது என்று கூறியுள்ளனர். பக்தி என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இந்தக் கொடுமையை அரசும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருக்கலாமா?மதுரையையடுத்த பேரையூரில் குழிமாற்றுத் திருவிழா என்று சொல்லி குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் குரல் கொடுத்தது; ‘விடுதலை’யும் கண்டித்து எழுதியது.

அதன் காரணமாக அந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு விட்டது. அதுபோலவே, கரூரில் நடக்கும் மண்டையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை அரசு தடை செய்யவேண்டும். மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ(எச்)) கூறுகிறது.

குடிமகனுக்கே அடிப்படை உரிமை என்கிறபோது, அரசுக்குக் கூடுதல் பொறுப்புண்டு என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாண்டு நடந்து முடிந்துவிட்டது என்றாலும், வருங்காலத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான இத்தகு விபரீதமான ஆபத்தான நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வரும் 13.8.2014 புதன் அன்று காலை 11 மணிக்கு கிருஷ்ணராயபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க.இராசசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: