வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம் ! கர்நாடகாவில் !

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா கட்டி. இவரது 6 வயது மகன் திம்மண்ணா 1–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 3–ந் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிறுவன் திம்மண்ணா, அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.
கிணற்றின் 160 அடி ஆழத்தில் திம்மண்ணா சிக்கி கிடந்தான். திம்மண்ணாவை உயிருடன் மீட்க ஆழ்குழாய் கிணற்றின் அருகே ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் குழி தோண்டும் பணி இரவு பகல் பராமல் நடைபெற்று வந்தது. மேலும் மண்டியாவை சேர்ந்த விவசாயி மஞ்சேகவுடா மற்றும் மதுரை சேர்ந்த மணிகண்டனின் ரோபாட் மூலம் திம்மண்ணாவை மீட்கும் முயற்சி நடந்தது.

160 அடி ஆழத்தில் கிடக்கும் சிறுவனின் மீது மண் சரிந்து விழுந்ததால் ரோபாட் மூலம் சிறுவனை மேலே தூக்க முடியாமல் போனது. அத்துடன் 160 அடிக்கு குழி தோண்ட இன்னும் 2 நாட்கள் ஆகும். இதனால் சிறுவனை உயிருடன் மீட்கும் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்தது. நேற்று முன்தினமே சிறுவன் மீது கிடந்த மண்ணை அள்ளும் போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்தது. அப்போதே சிறுவன் இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், நேற்று சிறுவன் திம்மண்ணா உயிர் இழந்து விட்டதாக டாக்டர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். என்றாலும், சிறுவனின் உடலை மீட்க தொடர்ந்து குழி தோண்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மீட்பு பணியை நிறுத்தும் படியும் தனது மகனின் உடலை பார்க்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. தனது 2 மகள்களை காப்பாற்ற வேண்டும். எனவே நிலத்தை தோண்ட வேண்டாம் என்று அதிகாரிகளின் கால்களை பிடித்து அனுமந்தா கட்டி கதறி அழுதார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்கலங்கி நின்றார்கள்.
அனுமந்தா கட்டிக்கு மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் ஆறுதல் கூறினார்கள். மேலும் அவரிடம் தோண்டப்பட்ட நிலத்தை மூடி தருவதாகவும் உறுதி அளித்தார்கள். இதன்படி நிலத்தை தோண்டி சிறுவனின் பிணத்தை மீட்கும் பணி இன்று 5–வது நாளாக நீடித்தது.

கருத்துகள் இல்லை: