செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

IAS IPS மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு ஆங்கிலம் தேவையில்லை !

புதுடில்லி:நாடு முழுவதும், மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், முதல்நிலை தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
'முதல்நிலை தேர்வின், திறனறித் தேர்வு - 2ம் தாளில் இடம்பெறும், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியல் அல்லது கிரேடு தயாரிக்க சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு, 2015ல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் அறிவித்தார்.   இது  இந்தி வெறியர்களால் தூண்டப்பட்டது. சுருங்கி வரும் உலகில் ஆங்கிலம் தெரியாமல் உலக நடப்பு, அறிவியல், மேலாண்மை போன்றவற்றை இந்திகார அதிகாரிகள் எப்படி அறிவார்கள்? இந்தி பேசாத மாநிலங்களில் இவர்கள் எப்படி குப்பை கொட்டுவார்கள்? இது அப்பட்டமான இந்தி திணிப்பு. மேலும் இந்தி பேசுபவர்களுக்கு அதிகப்படியான சலுகை, இந்தி பேசாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆங்கிலம், இந்தி இரண்டும் நல்லது. ஆங்கிலம் வேண்டாமெனில் இந்தி வெறியர்கள் தமிழ், தெலுங்கு போன்ற வேறு ஏதேனும் ஒரு பிராந்திய மொழியையும் கற்கட்டும். மத்திய அரசு பணிக்கு ஏதேனும் இரண்டு மொழிகள் கட்டாயம் என்று இருக்க வேண்டும். அதில் ஆங்கிலம் அவசியம். இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் சும்மா விடக்கூடாது. முளையிலேயே இந்தியை விரட்டுங்கள் இல்லையேல் அலுவலக நடை முறையில் இல்லாத மற்ற மொழிகள் மெல்ல சாகும்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, தேர்வுகளை யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில், 'சிசாட்' என, அழைக்கப்படும், இரண்டு திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த திறனறித் தேர்வு இரண்டாம் தாளில், மொத்தம், 80 கேள்விகள் கேட்கப்படும். அதில், ஆங்கில மொழிப்புலமை குறித்த, எட்டு கேள்விகள் இடம் பெறுகின்றன. 'இந்தக் கேள்விகள் எல்லாம், ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு சாதகமானது; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதனால், ஆங்கில மொழிப்புலமை பகுதியை, ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒரு வாரத்தில் தீர்வு:இதையடுத்து, இந்த யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னைக்கு, ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என, கடந்த வாரம், மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜ்யசபாவில், நேற்று பூஜ்ஜிய நேரத்தில், இந்த பிரச்னையை எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ், ''யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னையை விரைவாக தீர்ப்பதில், மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. இந்த விஷயத்தில், ஏற்கனவே அளித்த உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்குகிறது.
பிரச்னையை தீர்க்க, கால அளவு நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.அவருக்கு ஆதரவாக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.இதற்கு பதிலளித்த,மத்திய பார்லி., விவகாரத் துறை இணையமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து, இந்தப் பிரச்னை தொடர்பாக, சபையில், மூன்று முறை பதில் அளிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சுமுகமாக தீர்க்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீர்வு காணப்பட்ட உடன், சபைக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு, ஜாவடேகர் கூறினார்.
உடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னைக்கு, எட்டு நாட்களில் தீர்வு காணப்படும் என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் உறுதி அளித்தார். 12 நாட்கள் கடந்தும், இன்னும் தீர்வு காணப்படவில்லை' என, குற்றம் சாட்டினர்.முன்னதாக, இந்த தேர்வு பிரச்னை தொடர்பாக, உரிமை தீர்மானம் கொண்டு வரவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீஸ், சபை தலைவர் ஹமீது அன்சாரியின் பரிசீலனையில் இருப்பதாக, துணைத் தலைவர் குரியன் கூறினார்.
தகுதி பட்டியல்:இதையடுத்து, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், லோக்சபாவில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில், 'சிசாட்' எனப்படும் திறனறித் தேர்வு - 2ம் தாளில், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோரின், தகுதிப் பட்டியல் தயாரிப்பு அல்லது கிரேடு தயாரிப்பில் சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியோர், 2015ல், மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, ஜிதேந்திர சிங் கூறினார்.
அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த உடன் எழுந்த, பிஜு ஜனதா தளத்தின் மகதாப் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ் ஆகியோர், 'சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு, விளக்கம் தர வேண்டும்' என்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ''நீங்கள் என்ன கோரினீர்களோ, அது நிறைவேற்றப்பட்டு உள்ளது,'' என்றார்.இதற்கிடையே, யு.பி.எஸ்.சி., நடத்தும் முதல்நிலைத் தேர்வு திட்ட மிட்டபடி இம்மாதம் 24ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை: