வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி ! Gangs of ஆன்மீக கிரிமினல்களின் கொள்ளை கொலை பட்டியல் காட்சிக்கு ?

சங்கராச்சாரி
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – ந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன். ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல் கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான். இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திரன்தான்.
விரிக்கப்பட்டிருந்த ஆன்மீக கடைகளிலேயே ஈஷா யோகா கடை தான் பெரிய கடை. மொத்தம் 11 அரங்குகள். ஆனால் ஆடித் தள்ளுபடி கிடையாது, “பிக்ஸ்ட் ப்ரைஸ்” தான். தொண்டர்கள் என்கிற பெயரில் இளவயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பலவகையான ஆடுகள் ஜக்கியிடம் சிக்கியிருந்தன. இதுவரை பிடிபடாவிட்டாலும் ஜக்கியும் ஒரு நித்தி தான், எனவே இந்த பிடிபடாத நித்தியிடம் நமக்கென்ன வேலை என்று அடுத்த ஸ்டாலை நோக்கி நகர்ந்தோம், ஆனால் வேலியில் போன ஓணானை எடுத்து விட்டுக்கொண்ட கதையாக, நம்மை போகவிடாமல் தடுத்து இழுத்தனர் ஜக்கியின் ஆடுகள்.
“”நீங்க inner engineering course படிக்கலாமே” என்றார் அந்த பெண்.
உண்மையான எஞ்சினியரிங் படித்தவனுக்கே வேலை இல்லாத போது இது என்னடா இன்னர் என்சினியரிங்” என்று அதைப் பற்றி விசாரித்தோம்.
“யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை தான் இன்னர் என்சினியரிங் கோர்ஸ் சார், இதை படித்தால் பட்டம் கிடைக்கும்” என்றார்.
“சரி இதற்கு ஏன் எஞ்சினியரிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டால், நமது உடலே ஒரு பொறியியல் அமைவாக இருப்பதால் அந்த பெயரை வைத்துவிட்டார்களாம்.
பக்கத்து ஸ்டாலில் கிளிப்பச்சை நிறத்தில் பழைய ஜெட்லி பட யூனிபார்மை அணிந்து கொண்டு நின்ற ஞானோதயம் யோகா குழுவினர், “அந்த யோகா வேற, எங்க யோகா வேற” என்று 4000 ரூபாய் மதிப்புள்ள தமது யோகா பாக்கேஜ்களை வெறும் 3,999 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனது பொருள் மற்றதிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பதில் ஈஷாவினர் ஸ்டீவ் ஜாப்ஸ் ரகம் போலும்.
“எஞ்சினியரிங் கோர்ஸ் எல்லாம் இருக்கட்டும் ஜக்கி வாசுதேவைப் பற்றி உங்களிடம் சில கேள்விகளை மட்டும் கேட்க வேண்டுமே” என்றோம்.
“கேளுங்கள்” என்றார் அந்த பெண்.
“அரசுக்கு சொந்தமான வெள்ளியங்கிரி மலையை சட்டத்திற்கு புறம்பாக ஜக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே..” என்று கேள்வியை துவங்குவதற்குள்ளாகவே “இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது, நீங்க மேடத்தை பாருங்க” என்று வேறு ஒரு பெண்ணை கை காட்டியதுடன் அவரே அந்த மேடத்திடம் அழைத்துச் சென்றார். அந்த மேடம் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்பார் போலிருக்கிறது. கொலையே செய்தாலும் சிரித்தவாறு இருக்கும் ஜெசூட் பாதிரிகள் கூட இந்த விசயத்தில் ஜக்கி கோஷ்டியினரிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
அருகில் சென்றதும் “யெஸ் சார்” என்றார் அதே புன்னகையுடன்.
“சில கேள்விகள் கேட்க வேண்டும்” .
“கேளுங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
“ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறதே அதற்கெல்லாம் என்ன பதில்” .
“என்ன.. தெளிவா சொல்லுங்க” சற்று தடுமாறினார்.
“நித்தியானந்தாவை போலவே ஜக்கி மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே, ஆசிரமத்தில் சில கொலைகள் கூட நடந்திருப்பதாக கூறுகிறார்களே” என்றதும் முகத்தில் வழிந்து கொண்டிருந்த புன்னகை சடாரென்று மறைந்து பேயறைந்தது போலானார்.
“எந்த அடிப்படையில் அப்படி சொல்றீங்க” .
“பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்களே அதை வைத்து தான்” .
“பத்திரிகைகள் பலவும் எழுதும் அண்ணா, அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியுமா” .
sri-saradha-ashram“சரி அதை விடுங்க சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்றீங்க?”
“அண்ணா இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” .
“ஜக்கியை பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னா எதுக்கு அவரோட இவ்வளவு பெரிய படத்தை இங்கே மாட்டி வசிருக்கீங்க, அவர் சொல்றதை எல்லாம் எதுக்கு எங்களை கேட்கச் சொல்றீங்க” .
“அவர் சொல்றதை எல்லாம் நீங்க கேட்கணும்னு நாங்க சொல்வில்லை. யோகாவுக்கு மட்டும் தான் வரச்சொல்கிறோம்” என்றார்.
“அப்படின்னா எதுக்கு ஜக்கியோட படத்தை மாட்டியிருக்கீங்க?”
“அண்ணா தயவு செஞ்சி நீங்க போங்கண்ணா ப்ளீஸ், நீங்க யோகாவுக்கும் கூட வர வேண்டாம்” .
“வாங்க வாங்கன்னு நோட்டீஸ் அடிச்சி கூப்பிடுறீங்க வந்து ஒரு கேள்வியை கேட்டதுமே போங்க போங்கன்னு விரட்டுறீங்களே எப்படி மேடம்” என்றதும் அவர் அடுத்த வாடிக்கையாளரிடம் யோகவை விற்க போய்விட்டார்.
வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி இன்னொரு புறம் தன்னை பெரிய இயற்கை பற்றாளர் போல காட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளை விற்பதற்கும் ஒரு ஸ்டாலை போட்டிருக்கிறார். நடிகன்டா!
அடுத்த கடை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடையது. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு ஈராக் மதத்தலைவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ரவிசங்கர் கடையில் அறிவுரை பெற உள்ளூரில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஆனால் பானரில் மட்டும் hands up பொசிசனில் சிரித்து கொண்டிருந்தார். ஈயே இல்லாத கடையில் நமக்கு மட்டும் என்ன வேலை என்று அங்கிருந்து கிளம்பினோம்.
ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, யோகா, மருத்துவம், என்று சகல சரக்குகளையும் கலந்துகட்டி தள்ளிக்கொண்டிருந்த ஜக்கி, இஸ்கான், வேதாத்ரி, அமிர்தானந்த மயி போன்ற ஆன்மீக கம்பெனிகளிடையே கடுமையான நான்குமுனை போட்டி நிலவிக்கொண்டிருந்ததை கண்கூடாக காண முடிந்தது. நாம் கேள்வியேபட்டிராத மடங்களின் பெயர்களில் எல்லாம் காவி உடை கசங்காத ‘ஆன்மீகவாதிகள்’ அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு அரங்கில், கும்பமேளாவிற்கு வரும் அகோரிகளின் படங்களை மாட்டி ஒரு பெண் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார், “இவங்களை பத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்ல எல்லாம் தப்புத் தப்பா சொல்றாங்க. சரியான விஷயங்களை தெரிஞ்சிக்கிறது முக்கியம். இவங்க நம்ம போல சாதாரணமானவங்க கிடையாது. சின்ன வயலிருந்தே இறைவனோட ஐக்கியப்பட்டு இருப்பவங்க. அவங்க உடலை ஒரு பொருட்டா மதிக்கறதில்லை அதனால, உடல்மீது துணி இருப்பதோ இல்லாததோ உணர்வதில்லை. அவங்க போதை மருந்து அடிக்கிறாங்கன்னு அவதூறு சொல்றாங்க. அந்த மருந்தை நாம அடிச்சா அது போதை தரலாம். ஆனா, ஆண்டவனோட இணைந்திருக்கிற அவங்களை ஒண்ணும் செய்யாது.
அவங்க செத்த பொணத்தை சாப்பிடறாங்கன்னா அதுக்கும் காரணம் இருக்கு. அவங்க எல்லா பொணத்தையும் சாப்பிடறது இல்ல. சில பேரு செத்த பிறகு அவங்களுக்கு முக்தி கிடைக்கணும்னு இறைவன் கட்டளைப்படி அந்த பொணத்தை மட்டும் தேடி சாப்பிடுவாங்க.
அகோரிகள்
அகோரிகள் பற்றிய உண்மைகள்
கும்பமேளாவில கலந்து கிட்டு அவங்க குளித்த தண்ணீரில் குளிக்க நிறைய மக்கள் கூடுவாங்க. நாம எல்லாம் கங்கையில குளிச்சா நம்ம பாவங்கள் கரைஞ்சு கங்கை அழுக்காகிடும். அகோரிகள் குளிச்சாங்கன்னா, அந்த கங்கை சுத்தமாகிடும்” என்றார். இது தெரியாமத்தான் கங்கையை சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சரா போட்டு பல நூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறது மோடி அரசு. நூறு அகோரிங்கள பிடிச்சுப் போட்டு அன்றாடம் கங்கைக்குள்ள குதிக்க வெச்சா தானா சுத்தமாக போகுது.
“இன்னும் சில பேரு இவங்களால என்ன பலன்னு கேக்கிறாங்க. இவங்கதான் நம்ம நாட்டுக்கே பாதுகாப்பு. அன்னிய படையெடுப்பு வரும் போது இவங்க முன்னணியில் இருந்து சண்டை போடுவாங்க. அதைப் பார்த்து மக்களும் தைரியமா சண்டை போடுவாங்க” என்றார்.  இதன்படி இனி இராணுவத்தை கடாசிவிட்டு அகோரிங்கள மட்டும் அதிகம் உருவாக்கி பயற்சி கொடுத்தால் இந்தியா அமெரிக்காவிக்கே பெப்பே காட்டும் போல.
அடுத்தது, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (ISKON) குழு. இவர்களுடைய பக்தி நூல்களில் உள்ள படங்களை எல்லாம் குழந்தைகள் பார்த்தால் ஒருவேளை பயப்படக்கூடும். அவை கடவுள் படங்கள் என்று கூறப்பட்டாலும் வேற்றுகிரகவாசிகளை போலவே விகாரமாக இருக்கும். இதன் ஸ்தாபகர் பிரபுபாதா கூட அப்படி தான் இருப்பார். அவர் இப்போது உயிருடன் இல்லை.
நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான் என்று இந்த இந்து கம்பெனிகள் அனைத்தும் எவ்வளவு வெளிப்பூச்சு பூசிக்கொண்டாலும் அரங்கிற்குள் ஒரே அடிதடி ரகளை தான். “மற்ற ஆன்மிக சரக்குகள் எல்லாம் சரியானவை அல்ல, பிரபுபாதா தான் கடவுளை அடைவதற்கான சரியான வழியை காட்டியுள்ளார்” என்று கூறினார்கள். “மற்ற ஹிந்து அமைப்புகள் எல்லாம் ஹிந்து தர்மத்தை காக்கவில்லை, ஹிந்து மக்களை சரியாக வழி நடத்தவில்லை, பிரபுபாதா வெறும் நாற்பது ருபாயை வைத்துக்கொண்டு, நன்கொடையாக கிடைத்த ஒரு பயணச்சீட்டில் அமெரிக்காவிற்கு போய் சேர்ந்தார். குடியும் கூத்துமாய் சீரழிந்து கிடந்த அந்த ஹிப்பிகளை எல்லாம் சொற்பொழிவுகளின் மூலமும், பஜனையின் மூலமும் நல்லவர்களாக மாற்றியதோடு தனது சீடர்களாகவும் மாற்றினார்” என்றார் அங்கிருந்த தொண்டர். பிறகு “பார்ப்பனர்கள் எப்படி வேத காலத்திலிருந்து அறிவாளிகளாகவும், வேதங்கள் அறிந்தவர்களாகவும் இருந்தனர்” என்று பார்ப்பன அடிமைத்தனத்தை போற்றிப் புகழ்ந்தார். பார்ப்பன அடிமைப்புத்தி கீழிருந்து மேலே வரை வைரஸ் போல தாக்கியிருக்கிறதே என்கிற வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்து, அய்யாவழி ஸ்டால். அய்யா வைகுண்டர் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு அய்யா வழிபாடே முழுமையாக பார்ப்பனமயமாகியிருக்கிறது. “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து தானே இந்து மதத்திலிருந்து வெளியே வந்தார்” என்றோம் அந்த ஸ்டாலில் இருந்தவரிடம்
amirtha“அப்படியில்லை நீங்கள் தவறாக படித்திருக்கிறீர்கள். அவர் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டார்” என்று அதிர்ச்சி கொடுத்தார். மேலும் “பத்து அவதாரங்களும் அவர் தான், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் அவர் ஏற்கனவே பாடல்களாக பாடியுள்ளார்” என்று கூறி சில பாடல்களையும் பாடினார். மட்டுமின்றி கொஞ்சம் கூட சிரிக்காமல் “இந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்ததும் அவர் தான்” என்றார். வள்ளலார் பற்றி பேசிய போது, “வள்ளலார் எல்லாம் உண்டு களித்து உறங்கிய ஒரு சாதாரண மனிதர்” என்றும், “எங்கள் அய்யா தான் கடவுளின் அவதாரம்” என்றும் கூறிக்கொண்டிருந்த போது “இன்னொரு அய்யாவழிக்காரர் வந்து இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசினால் இந்து தர்மத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று அவரை அமுக்கினார். பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த அய்யா வழிபாட்டையும் பார்ப்பனியம் செரித்து விழுங்கிவிட்டது.
“எட்டும் இரண்டும் பத்து” என்ற தலைப்பில் வள்ளலாரின் படம் போட்டு தனியாக ஒரு மடம் இருந்தது. “நீங்க தனியா யோகா எல்லாம் படிக்க வேண்டாம். வாழ்க்கையே ஒரு யோகமாக இருந்தா போதும். ஜோதி மார்க்கமா இறைவனை தரிசிக்கலாம்னு உலகத்துக்கு சொன்னவர் வள்ளலார். எல்லோரும் ஞானம் பெறலாம் என்பதுதான் இதற்கு பொருள். இந்த உண்மையை மத்தவங்க எல்லாம் வெளியே சொல்றது இல்லை. ரகசியமா வைச்சிக்கிறாங்க” என்றார்.
“அப்போ, அங்க ஈஷா யோகோ, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற கடைகளில் யோகா பேக்கேஜ் வாங்க சொல்றாங்களே” என்று கேட்டால்,
“அதெல்லாம் தேவையே இல்லை. அவங்க எல்லாம் வியாபாரத்துக்காக இப்படி செய்றாங்க.”
அப்போதுதான் அந்த கடையில் ஞானசற்குரு சிவ செல்வராஜ் என்பவரின் படம் மாட்டியிருப்பதைப் பார்த்தோம். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை, “இவை போன்ற ஞான ரகசியங்களை மேலும் விரிவாக தெரிந்து கொள்ள படித்து அறிந்து கொள்ள, ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளிய ஞான நூற்கள்” என்று 25 தமிழ் நூல்கள், 3 ஆங்கில நூல்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போல பன்னாட்டு வலைப்பின்னல் அமைக்க முடியாத உள்ளூர் வியாபாரி இவர் என்று புரிந்து கொண்டு நகர்ந்தோம். யார் கண்டது, அடுத்த கண்காட்சியில் இவரும் கூட சர்வதேச பிரபலமாக ஆகியிருக்கலாம். மைனர் நித்தியெல்லாம் குருவாக உலாவரும் போது ஞானசற்குருவுக்கு என்ன குறைச்சல்?
அடுத்து அம்மா அமிர்தானந்தமாயியின் அரங்கிற்கு சென்றோம். அங்கிருந்தவர் ஆன்மீக சிரிப்புடன் வரவேற்றார். அம்மாவைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்த வாக்கியங்களை நம்மிடமும் கொட்டத் தயாரானார். அதற்குள் “எங்களுக்கு தெரியாத சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க சார்” என்றோம்.
“சொல்லுங்க சார் என்ன கேள்வி”.
“அம்மா அமிர்தானந்தமயி ஒரு சாமியார் தானே?”
“ஆமாம்.”
“வெறும் சாமியாரா அல்லது கடவுளின் உருவமா?”
“கடவுளின் அவதாரம் தான் அம்மா.”
sankarachari“சரி அவர் தான் கடவுள் என்றால் கடவுளுக்கு எதற்கு எஞ்சினியரிங் காலேஜ், ஸ்கூல், கோடிக்கணக்கில் பணம் எல்லாம்” என்றதும் ஒரு கணம் திகைத்து நின்றார். பிறகு ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு “எல்லாம் மக்களுக்காக தான், மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தான் அம்மா எல்லாவற்றையும் செய்கிறார்” என்றார்.
“சரி மக்கள் படிப்பதற்கு என்றால் சும்மா படிக்க வைக்கிறாரா பீஸ் வாங்குகிறாரா?”
“பீஸ் தான்.”
“கடவுளுக்கு எதுக்கு பீஸ், ஃபிரீயா படிக்க வைக்கலாமே” என்றதும் கொஞ்சம் டென்ஷன் ஆனார்.
“சார் இங்கே ஆன்மீகத்தை பற்றி மட்டும் பேசுங்க, வேற விஷயங்களை பேசணும்னா எங்களோட சென்னை ஆபீஸ் விருகம்பாக்கத்தில் இருக்கு அங்கே போய் கேளுங்க” என்றார்.
“என்ன மேடம் ஒருத்தர் படத்தை காட்டி இவர் தான் கடவுள்னு சொல்றீங்க, நீங்க சொல்றதை கேட்கிற நாங்க சரி கடவுளுக்கு காசு எதுக்குங்கன்னு ஒரு கேள்வியை கேட்டா இங்கே பதில் சொல்ல முடியாது, எங்க ஆபீசுக்கு வந்து கேளுங்கிறீங்க, பதில் சொல்ல முடியலைன்னா எதுக்கு இப்படி மார்க்கெட்டிங் பன்றீங்க” என்றதும்.
“சார் உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது நீங்க எதுவானாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கங்க” என்றார். சரி எல்லா பிராடு கம்பெனியும் இப்படி தான் பேசும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மேலே நடந்தோம்.
அடுத்து வந்தது வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை. “உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்” என்றோம் ஸ்டாலில் நின்றிருந்தவரிடம்.
“நாங்க கொடுக்கிற பயிற்சி இப்போ அண்ணா யுனிவர்சிடில ஒரு பாடமாவே ஆகியிருக்கு, இதுக்கு பட்டம் இருக்குங்க. எங்களுடையதில் மூன்று பிரிவுகள் இருக்குங்க ஒன்னு தியானம், இரண்டு உடற்பயிற்சி, மூணு காயகல்பம்” என்று விரிவான விளக்கம் அளித்தார்.
“சரிங்க சார் இதனால என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீரும்?”
“என்ன பிரச்சினைகள்னு சொல்லுங்க.”
“உதாரணத்திற்கு இப்போ மின்கட்டணம் உயர்ந்துகொண்டே போகுது, விலைவாசி அதிகரிக்கிறது. இதை எல்லாம் மூச்சு பயிற்சியின் மூலம் எப்படி சரி செய்ய முடியும்?”
மற்றவர்களை போல இவர் சளைக்கவில்லை, டென்ஷனும் ஆகவில்லை உடனடியாக பதிலளித்தார்.
“மின்கட்டணம் உயர்வதற்கு யார் காரணம், நீங்க தான் காரணம். எதுக்கு அளவுக்கு அதிகமா கரண்ட் யூஸ் பன்றீங்க, குறைவா பயன்படுத்துங்க. அல்லது அதுக்கு ஏத்தமாதிரி பொருளாதாரத்தை அதிகமா ஈட்டிக்கொள்ளுங்கள். அதிகமான நேரம் வேலை செய்ங்க, முடியலைன்னா அளவை குறைச்சிக்கங்க. எட்டு இட்லி சாப்பிடுறீங்கன்னு ரெண்டு இட்லியை குறைச்சிக்கிடுங்க. பிரச்சினை வெளியே இல்லை நம்மகிட்ட தான் இருக்கு, நாம தான் இப்படி எதையாவது அட்ஜெஸ்ட் செஞ்சிக்கனும்” என்றார். நாம் அவரிடம் தர்க்கம் எதுவும் செய்யாமல் ஒரு புதிய மாணவனை போல கேட்டுக்கொண்டிருந்தோம்.
பிறகு வேதாத்ரி மகரிஷியை பற்றி கூறினார். “அவர் 24 முறை அமெரிக்காவுக்கு போனார், ” என்று அதை 24 முறைக்கு மேலேயே சொல்லியிருப்பார்.
“சரிங்க ஏன் எல்லா சாமியார்களும் அமெரிக்காவுக்கே போறாங்க. இந்த நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்காங்க அவங்களுக்கு ஆன்மீகத்தை போதிக்கலாமே” என்றோம்.
“அமெரிக்காவிலிருக்கும் சீடர்கள் அழைக்கும் போது தட்ட முடியுமா அதற்காக தான் போனார். மற்றவர்கள் எல்லாம் எதற்கு போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
அமெரிக்காவிற்கும், பெருநகரங்களுக்கும் போகும் மகரிஷிக்கள் ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் வருவதே இல்லையே என்று கேட்டதும், அவங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எகத்தாளமாக கேட்டார். சரிதானே, ஆன்மீக பிசினெசில் ஏழைகளுக்கு இடமில்லையே!
கண்காட்சியில் ஆங்காங்கே சங்கராச்சாரியின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன, மேலும் அவர் தான் இந்த விழாவை துவக்கி வைத்துள்ளார். நாம் சில கடைக்காரர்களிடம் பேசினோம்.
“என்னங்க இதை இந்து ஆன்மீக கண்காட்சின்னு சொல்றீங்க ஆனா ஜெயேந்திரர் மாதிரி கிரிமினல் கேஸ்ல மாட்டினவரை எல்லாம் வச்சு விழாவை துவக்கியிருக்கீங்க, அதோட அவர் படத்தையும் அங்கங்கே தொங்க விட்ருக்கீங்களே” என்றதற்கு
“அவா தான் அதை பன்னான்னு இன்னும் ப்ரூப் ஆகலையே, இருந்தாலும் இப்படி செய்திருக்கப்பிடாது தான். எல்லாத்திலயும் ஃபிஃப்டி ஃபிஃப்டி தான் இருக்கா, பாதி பேர் ஆதரிக்கிறா, பாதி பேர் எதிர்க்கிறா. இதுல நாம என்ன செய்ய முடியும்” என்றார்.
jayendrasaraswathiswamyvr4மற்றொருவர் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோட முடிவு குருமூர்த்தி இருப்பார்,அவராண்ட கேளுங்க” என்றார்.
“அப்படின்னா இதுல உங்களுக்கு பங்கில்லையா” என்றோம்.
“நான் எப்படி பொறுப்பாக முடியும்?”
“அவரை அழைத்தது தவறு என்பதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா?”
“அதை பத்தி இப்போ பேச முடியாது” என்று கிளம்பினார்.
அடுத்து சிருங்கேரி மடத்தில் உள்ளவரிடம் பேசினோம்.
“நீங்க சொல்றது சரி தான், ஆனா என்ன பண்றது யாரை அழைக்கலாம் கூடாதுன்னு தீர்மானிக்கிறவங்க பெரிய ஆட்களாக இருக்காங்க” என்றார்.
“அவரை அழைத்ததை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உடன்பாடு இல்லை தான்.”
“அப்படின்னா நீங்க இதை எதிர்க்க வேண்டாமா?”
“நான் எப்படி சார் எதிர்க்கிறது” என்றவர், “இல்லை இன்னும் முடிவு தெரியாத பிரச்சினையை பற்றி நாம பேச முடியாது” என்று நழுவினார்.
இந்து ஆன்மீக சேவை வழங்கும் இத்தகைய ‘உத்தமர்’களைக் கொண்டு நடத்தப்படும் ஆன்மீக சேவைக் கண்காட்சி இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தோம்.
(தொடரும்)
- வினவு செய்தியாளர்கள்.
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2  வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !vinavu.com 

கருத்துகள் இல்லை: