வியாழன், 6 செப்டம்பர், 2012

300 கோடிக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா

தமிழ்-சினிமா
 அடுத்த 16 வாரங்கள் முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை தமிழர்களிடமிருந்து வசூலித்து  விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.
மின்வெட்டோடு மின் கட்டணமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. ஒரு வேளை வயிறார உண்ணுவதற்கே கடுமையாக உழைக்க வேண்டுமென்ற நிலையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செயலாகி விட்டது. யானையைக் கூட கட்டி மேய்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை. இவைதான் பெரும்பாலான தமிழக மக்களின் இன்றைய நிலை.
இத்தகைய வறண்ட தமிழகத்தில்தான் இந்த ஆண்டு முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை வசூலித்து விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.
வரும் வெள்ளிக்கிழமையை (07.09.12) தவிர்த்து விட்டால், இந்த ஆண்டு முடிய இன்னும் 16 வாரங்கள் இருக்கின்றன. இந்த மூன்றரை மாதங்களுக்குள்தான் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’, கமலின் ‘விஸ்வரூபம்’, விஜய்யின் ‘துப்பாக்கி’, சூர்யாவின் ‘மாற்றான்’, கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, முன்னணி இயக்குநர்கள் என ‘சொல்லப்படும்’ பாலாவின் ‘பரதேசி’, மணிரத்னத்தின் ‘கடல்’, கவுதம் வாசுதேவ் மேனனின் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்த 9 படங்களும் ‘ஹை பட்ஜெட்’ படங்கள். எனவே நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு நடைப்பெற்ற நாட்கள், இடங்கள், கிராபிக்ஸ் பணிகள், இசை – ஒலி சேர்க்கை, படம் தொடர்பான விளம்பரங்கள் என மொத்தமாக சேர்த்து இந்த ‘நவரத்தினங்களை’ உருவாக்கி முடிக்க குறைந்தபட்சம் ரூபாய் 300 கோடி செலவாகி இருக்கும் என உறுதியாக சொல்லலாம். துல்லியமாக கணக்கிட்டால் இதை விட அதிகமானத் தொகைதான் வரும்.
இந்த ஒன்பது படங்கள் தவிர, ‘நாடோடிகள்’ சசிகுமார் நடித்திருக்கும் ‘சுந்தர பாண்டியன் உட்பட வேறு சில நடுத்தர மற்றும் லோ பட்ஜெட் படங்களும் இந்த 16 வாரங்களில் வெளியாக காத்திருக்கின்றன. ஆக மொத்தமாக கணக்கிட்டால் எப்படியும் ரூபாய் 350 கோடி செலவாகியிருக்கலாம்.
இந்தத் தொகையை எப்படி எடுக்கப் போகிறார்கள்? செவ்வாய் கிரகத்தில் விற்றா?
இல்லை. நம்மிடம் பிக்பாக்கெட் அடித்துத்தான். அதுவும் செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31 முடிய இருக்கும் இந்த 109 நாட்களுக்குள்தான் நம் வருமானத்தில் கணிசமானவற்றை எடுத்து லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள்.
பிழைப்புக்காகவும், வீட்டுக் கடனை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடிப்பதற்காகவும் வெளிநாடு சென்றிருப்பவர்களும், வெளிநாட்டிலேயே வசிக்கும் தமிழர்களும் கூட இந்த ‘நவரத்தினங்களும்’ ஜொலிப்பதற்காக தங்கள் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் பணையம் வைக்க வேண்டும். அப்படி வைப்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் இந்தத் தயாரிப்பாளர்கள் செய்து முடித்து விட்டார்கள்.
இதற்காகவே விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். சின்னத்திரைகள், இந்த விழா நாட்களில் மேலே சொன்ன 9 படங்களையும் மையமாக வைத்தே நிகழ்ச்சிகளை ஒளி(லி)பரப்பத் தயாராகி விட்டன. இயக்குநர் பேட்டி, நடிகர்களின் நேர்காணல், நடிகைகளின் அழகுக் குறிப்புகள், புதுப்பட பாடல்கள் என வெவ்வேறு பெயர்களில் இந்தப் படங்களின் செய்திகளை வெளியிட்டு, எப்படியெல்லாம் மக்களின் மனதை ஆக்கிரமிக்கலாம் என ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
உழைக்கும் மக்களுக்கு ஓய்வு நாட்கள் என்பது மறுநாள் உழைப்பதற்கான சக்தியை தரும் பொழுதுகள் மட்டுமல்ல. சமூகரீதியில் தங்களது வாழ்க்கை பிரச்சினை குறித்து செலவிடும் நேரம்தான் அது. இந்நேரத்தைத்தான் நம் அனுமதியில்லாமலேயே ஊடகங்கள் களவாட ஆரம்பித்திருக்கின்றன.
இதற்கு ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களும், தினசரிகளும் துணை நிற்கப் போகின்றன. எந்தப் படம் தங்கள் பத்திரிகைக்கு விளம்பரம் தருகிறதோ அந்தப் படம் குறித்து அட்டைப்பட செய்திகளை வெளியிடப் போகிறார்கள். சம்பந்தப்பட்ட நடிகர் – நடிகைகளின் அரைவேக்காட்டு அபத்தங்களை சிந்தனைச் சிதறல்களாக பிரசுரிக்கப் போகிறார்கள்.
இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த 9 படங்கள் குறித்த செய்திகள்தான் நம் முகத்தில் அறையப் போகின்றன. ஒருவேளை உணவுக்காக சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இரவுப் பகலாக பணிபுரியும் தொழிலாளர்கள் வெடி விபத்தில் இறந்தாலும் அது ‘பத்தோடு பதினொன்றாக’ வெறும் செய்திதான். ஆனால், அதே சிவகாசியில் பளப்பளா தாளில் அச்சாகும் இந்த ஒன்பது படங்களின் ஜிகுஜிகு போஸ்டர் இருக்கிறதே… அது முக்கியம். அது தரும் விளம்பர வருமானம் அவசியம்.கு
எப்படி ‘கிரகம் சரியில்லை… இந்தப் பரிகாரம் செய்… அதற்கு இவ்வளவு செலவாகும்… என்னிடம் கொடுத்தால், அதை பாதி செலவில் நான் செய்துத் தருகிறேன்…’ என்று ‘நவகிரகங்களின்’ பெயரால் பொய் சொல்லி, மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஜோதிடர்கள் பணம் பறிக்கிறார்களோ – அப்படி சமூக இணையதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், பதிவுகள் போன்ற இடங்களில் ‘இந்தப் படம் சரியில்லை… இவர் நடிப்பு மோசம்… இந்த கேமரா ஆங்கிள் சுத்த ஹம்பக்… இந்தப் பாட்டு ஆஹா… இந்த காமெடி மொக்கை… படத்தில் இந்த இடம் டிவைன்… சிறுவயதில் என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நடந்தது…’ என்றெல்லாம் எழுதி, இந்த ‘நவகிரகங்களுக்கும்’  – 9 படங்களுக்கும் -  நவீன இணைய ஜோதிடர்கள் ராசிப் பலன் சொல்லி ஹிட்ஸ், லைக் என அள்ளுவதற்காக குட்டிக்கரணம் அடிக்கப் போகிறார்கள்.
பண்ணையடிமைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். நிலச்சுவாந்தார்களின் வீட்டிலும், நிலத்திலும் பொழுதெல்லாம் உழைக்க வேண்டும். இதற்காக ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்காது. இந்த உழைப்பு நேரம் போக ஒருவேளை சொந்தமாக துண்டு நிலம் இருந்தால் உழைக்கலாம். அப்போதும் அறுவடை காலத்தில் குறிப்பிட்ட மகசூலை பண்ணையார்களுக்கு கொடுத்துவிட வேண்டும்.
இப்போது பண்ணையார்கள் அல்லது நிலச்சுவாந்தார்கள் என்ற பிரிவினர், நடிகர், நடிகைகளாகவும், தயாரிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள். பண்ணையடிமைகளும் உழைக்கும் மக்களாகவும், நடுத்தர மக்களாகவும் உருமாறி விட்டார்கள்.
ஆனால் பண்ணையடிமைகள் வன்முறை அதிகாரத்தின் பிடியில் அடிமையாக இருந்தார்கள். நாமோ சொந்த விருப்பத்துடன் தமிழ் சினிமாவிற்கு அடிமையாக இருக்கிறோம். 365 நாட்களும் சினிமா குறித்து சிந்திக்கிறோம் என்பதும் ஆண்டு முழுவதும் அடிமையாக இருக்கிறோம் என்பதும் வேறு வேறு அல்ல. இந்த பண்பாட்டு அடிமைத்தனத்தை வேரறுக்காமல் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் பண்பு நம்மிடம் தோன்றவே தோன்றாது.

கருத்துகள் இல்லை: