சோனியாவின் திடீர் கோபாவேசத்திற்குக் காரணம் பிரணாபின் அட்வைஸ்?
நிலக்கரி சுரங்க ஊழல் முறைகேடுகள் தொடர்பாக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.
இந்த நிலையில் முக்கியப் பிரச்சினைகளில் பெரும்பாலும் மெளனமாகவே இருக்கும் சோனியா காந்தி தற்போதைய சுரங்க மோசடி விவகாரத்தில் கோபாவேசமாக காணப்படுகிறார். பாஜகவினருக்கு தகுந்த பதிலடி கொடுங்கள் என்று தனது கட்சியினருக்கு உத்தரவிடுகிறார், பாஜகவுக்கு இதே பொழப்பாப் போச்சு என்று கோபத்துடன் கருத்துக் கூறுகிறார். அவரது இந்த திடீர் கோபாவேசப் பின்னணியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
தற்போது சோனியா காந்தி இரட்டை முனைத் தாக்குதலை பாஜக மீது அவிழ்த்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவினர் கூறும் புகார்களுக்கு அங்கேயே அதிரடியாக தகுந்த பதிலடி கொடுங்கள் என்று காங்கிரஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, மக்களிடம் நேரடியாக சென்று பாஜகவினரை அம்பலப்படுத்துங்கள் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதைச் சொல்லியதோடு நில்லாமல் அவரே ராஜஸ்தான் மாநிலம் பார்மருக்கு சமீபத்தில் நேரில் சென்று மக்களை சந்தித்தார் என்பது நினைவிருக்கலாம்.
பாஜகவினருக்கு எதிரான இந்த திடீர் போரில் சோனியா காந்தியே நேரடியாக களத்தில் இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பாஜகவை நாடாளுமன்றத்திலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி நேரடியாக சந்தித்து வீழ்த்தும் திட்டமே இது என்றும் கூறப்படுகிறது.
சோனியாவின் இந்தத் திடீர் ஆவேசம் காங்கிரஸாரையே கூட ஆச்சரியப்படுத்தியுள்ளதாம். ஆனால் சோனியாவின் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் பிரணாப் முகர்ஜி என்கிறார்கள். பிரணாப் முகர்ஜியிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே அதிரடி அரசியலுக்கு மாறியுள்ளார் சோனியா என்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கிய பின்னர் 2 முறை பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார் சோனியா காந்தி. வெள்ளிக்கிழமை இரவு கூட அவர் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூட்டத்தை முடித்த பின்னர் இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சி எப்படிச் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு சோனியாவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்துள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல பிரதமரும் கூட குடியரசுத் தலைவரை ஒருமுறை சந்தித்துள்ளார். ஆனால் அந்த சந்திப்பு குறித்த செய்தியே வரவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியிலும் சரி, 2வது ஆட்சியிலும் சரி முக்கியப் பிரச்சினைகள் எழும்போதெல்லாம் பிரணாப் முகர்ஜிதான் கை கொடுத்து வந்தார். இப்போது சுரங்க ஊழல் மோசடியால் காங்கிரஸின் பெயர் பெருமளவில் கெட்டு வரும் நிலையில் மறுபடியும் பிரணாபின் உதவியை காங்கிரஸ் நாடியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சியில் பிரணாப் அளவுக்கு நல்ல ஆலோசனைகளைத் தரக் கூடிய தலைவர் யாரும் இல்லை. எனவே சோனியா காந்தியே நேரடியாக இறங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவர் சற்று துணிச்சலான முடிவுகளை, பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையின்படி எடுக்க ஆரம்பித்திருப்பதாக கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக