சிவசங்கரனுக்குச் சொந்தமாக இருந்த ஏர்செல் செல்போன் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை ஒதுக்க அப்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தாமதம் செய்ததாகவும், பின்னர் அவரது நெருக்குதலால் அந்த நிறுவன பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதாகும், பங்குகள் கைமாறிய பிறகே 2004-05ம் ஆண்டில் 2ஜி லைசென்ஸ் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.
இவ்வாறு ஏர்செல் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகு மேக்சிஸ் நிறுவனம் சன் டிவின் சன் டைரக்ட் பிரிவில் ரூ. ரூ.550 கோடி முதலீடு செய்தது.
இந்தப் பணம் கைமாறிய விவகாரத்தில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தயாநிதி, கலாநிதி, சன் டிவி அலுவலகங்களில் சிபிஐ ரெய்டும் நடத்தியது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சமீபத்தில் கலாநிதி மாறனுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், அவரது சார்பில் தேவையான ஆவணங்களுடன் ஒரு பிரதிநிதி தான் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், Prevention of Money Laundering Act (PMLA) சட்டத்தின் கீழ் விரைவில் கலாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி விசாரணையை ஒத்தி வைக்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு:
இந் நிலையில் இனி 2ஜி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யார் கோரிக்கை வைத்தாலும் அதை ஏற்க முடியாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியான தொலைத்தொடர்புத் துறை முன்னாள் உறுப்பினர் (சேவைகள்) ஜி.எஸ்.குரோவரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவரை விசாரிக்க விரும்பவில்லை என்றும், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா திடீரென தெரிவித்தார்.
அதே போல குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் இதே கோரிக்கையை வைத்தனர்.
இதனால் கோபமடைந்த நீதிபதி சைனி கூறுகையில், நீதிமன்றத்தில் சுமுகமற்ற சூழ்நிலையை உருவாக்காதீர்கள். இனி 2ஜி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று யார் கோரினாலும் அதை ஏற்க மாட்டேன். இதை அனைவரும் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) மனதில் கொள்ள வேண்டும்.
சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தயாராக வராவிட்டாலோ அல்லது விசாரிக்க விரும்பாவிட்டாலோ அன்றைய தினமே, அந்த சாட்சியிடம் விசாரிக்க அடுத்தவர் தயாராக இருக்க வேண்டும் என்றார் சைனி.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் உதவி இயக்குனர் கே. ஸ்ரீவாஸ்தவாவிடம் செப்டம்பர் 10ம் தேதி குறுக்கு விசாரணையை தொடங்குவீர்களா என்று ராசாவிடம் நீதிபதி சைனி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராசா, திட்டமிட்டபடி குறுக்கு விசாரணை நடத்தத் தயார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக