Viruviruppu.com
மதுரை
கிரானைட் முறைகேடு விவகாரத்தில், போலீஸிடம் சிக்கிக் கொண்ட பி.ஆர்.
பழனிச்சாமியிடம் இருந்து வெளியாகும் தகவல்களைவிட அதிக மர்மம் இருப்பது,
அழகிரி மகன் துரை தயாநிதி விவகாரத்தில்தான்! இவர் எங்கே? நிஜமாகவே
தேடப்படுகிறாரா? அல்லது ‘கவனிக்க வேண்டிய’ இடத்தின் கவனித்து விட்டார்களா?
இவைதான் மர்மங்கள்.
ஒரு விஷயம் உண்மை. மதுரை ஆட்டத்தில் பி.ஆர்.பி.
நிறுவனம்தான் பெரிய கை. துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் அந்த அளவுக்கு
பெரிய ஆட்டக்காரர்கள் கிடையாது. இதனால், துரை தயாநிதியை கைது செய்ய
வேண்டியது மிக அவசர விஷயம் அல்ல.ஆனால், துரை தயாநிதியை தேடுகிறோம், பாஸ்போர்ட்டை முடக்கி விட்டோம் என்றெல்லாம் போலீஸ் கூறுவதால்தான், இவரது விவகாரம் முக்கியமாகிறது.
துரை தயாநிதியின் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை என்கிறார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது என்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த இரண்டில் ஒன்றுதான் நிஜமாக இருக்க முடியும்.
“பாஸ்போர்ட் முடக்கப்பட்டது” என்று கலெக்டர், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய டீக்கடையில் வைத்து சொல்லியிருந்தால், “சும்மா ஜாலியாக சொன்னார்” என்று விட்டுவிடலாம். ஆனால், கோர்ட்டில் சொல்லியிருக்கிறார்கள்.
“மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை” என்று மதுரை மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. காரணம், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், “பி.ஆர். பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்யப்பட்டு பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கின்றனரா என்பதை கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இது கோர்ட் ஆவணம். இனி மறுக்க முடியாது.
அதேநேரத்தில், “பாஸ்போர்ட்டை முடக்கவில்லை” என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறியபோது, மாவட்ட நிர்வாகம் ஏன் வாய் திறக்கவில்லை? கோர்ட்டில் கூறப்பட்டது நிஜம் என்றால், ஆதாரம் காட்டியிருப்பார்களே! பாஸ்போர்ட் ஆபீஸில் இருந்து பதில் வந்திருக்க வேண்டுமே?
“துரை தயாநிதியை போலீஸ் ‘சிறப்பு குழுக்கள்’ வலை வீசித் தேடுகிறது” என்ற செய்தியும், இதே ரகம்தான்.
இவர்களது ‘சிறப்பு குழுக்கள்’ எங்கே தேடுகின்றன? நாங்கள் தருகிறோம் தகவல். துரை தயாநிதி, டில்லியில் இருக்கிறார். டில்லியில் எங்கே, யாருடைய பாதுகாப்பில் இருக்கிறார் என்பது எமக்கே தெரியும்போது, கியூ பிராஞ்சுக்கு தெரியாதா?
‘சிறப்பு குழுக்கள்’ டில்லி செல்ல டிக்கெட் கிடைக்கவில்லையா?
நிஜமான கதை, இவர்கள் துரை தயாநிதியை ‘பேப்பரில்’ தேடுகிறார்கள் என்பதுதான். அவர், பாஸ்போர்ட் சகிதம், சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்!
“மாமோவ்.. நீங்க ஜோரா தேடுங்க!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக