திங்கள், 3 செப்டம்பர், 2012

மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது



பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.
சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.
பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.
இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.

மாயா ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் சேய் நல மருத்துவர். 2002 இல் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மாயாவை அமைச்சராக்கி அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கினார் மோடி.
தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட பல அர்ப்பணிப்புணர்வு மிக்க வழக்குரைஞர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சியால், நரோதா பாட்டியா வழக்கின் புலன் விசாரணையை உச்சநீதிமன்றம் தனது நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்த பின்னர்தான் விசாரணை நகர்ந்தது.
அமைச்சராக இருந்த மாயாவை போலீசு பாதுகாப்புடன் தலைமறைவாக அனுப்பி வைத்தார் மோடி. தன்னை மவுன்ட் அபுவில் தங்க வைத்து மோடி பாதுகாத்தாரென்று தெகல்கா வீடியோவில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான் பஜ்ரங்கி. நரோதா பாட்டியா வெறியாட்டம் நடக்கும்போது, அங்கிருந்தபடியே மாயா கோத்னானி பலமுறை முதல்வர் அலுவலகத்துடன் தொலைபேசியில் பேசி, தங்கள் சாதனைகளை லைவ் ரிலே செய்திருக்கிறார்.
சாட்சி சொல்லிய பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், நீதி பெறுவதற்காக தம் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த வழக்கில் சாட்சி சொன்ன முசுலீம் மக்கள். இன்னமும் மோடியின் குஜராத்தில், அதே நரோதா பாட்டியாவில் குடியிருந்தபோதிலும், எள்ளளவும் அச்சமின்றி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பெண்களின் தைரியம்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தீஸ்தா சேதல்வாத்.
அதுமட்டுமல்ல, கலவரத்தில் ஈடுபட்ட காலாட்படையினரை மட்டுமின்றி, அதற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களையும் தண்டித்திருப்பது இத்தீர்ப்பின் சிறப்பம்சம் என்கிறார் தீஸ்தா.
கோத்ரா படுகொலையினால் ஆத்திரம் அடைந்த இந்துக்களின் எதிர்வினைதான் குஜராத் படுகொலை, என்ற வாதத்தை தனது தீர்ப்பில் நிராகரித்திருக்கிறார் நீதிபதி திருமதி. ஜியோத்ஸ்னா யாக்னிக்.  இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.
நரோதா தீர்ப்பு கூறும் செய்தியாக பா.ஜ.க கூறுவது என்ன? மோடியைப் பற்றி அவதூறு செய்தவர்களின் வாயை இத்தீர்ப்பு அடைத்திருக்கிறதாம். மோடி அரசின் நடுநிலையை நிரூபித்திருக்கிறதாம். ஆனால் இதை கோத்னானியும், பாபு பஜ்ரங்கியுமல்லவா சொல்ல வேண்டும்?

கருத்துகள் இல்லை: