இலங்கையிலிருந்து, அதிபர் மற்றும் அமைச்சர்கள் தமிழகம் வருவதற்கு, சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சுற்றுலா வருபவர்களையும், விளையாட்டு வீரர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம், திருச்சி, கலை காவேரி நுண்கலைக் கல்லூரிக்கு, கலாசார விழாவுக்கு வந்த இலங்கை மாணவர்களை, திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் கட்சி யினர் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன், சென்னை வந்த இலங்கை கால் பந்தாட்ட வீரர்களை, திருப்பியனுப்புமாறு உத்தரவிட்ட தமிழக முதல்வர், நேரு விளையாட்டு மைதான பொறுப்பாளர் தாமசை, "சஸ்பெண்ட்' செய்தார்.
முற்றுகை: இலங்கையிலிருந்து, கடந்த, 2ம் தேதி, வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த, இலங்கை நாட்டவரை, தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. திருச்சி விமான நிலையத்துக்கு வந்த போது, ஒரு கும்பலால் அவர்கள் தாக்கப்பட்டனர். "தமிழகத்தில், சிங்களர்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால், யாரும் செல்ல வேண்டாம்' என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை நாட்டினருக்கு எதிரான தாக்குதலும், போராட்டங்களும் தொடர்ந்து நடப்பதால், இலங்கையிலிருந்து, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இலங்கையிலிருந்து திருச்சிக்கு, ஜனவரி மாதம் வந்த பயணிகளின் எண்ணிக்கை, 4,094. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 2,347 ஆக குறைந்துள்ளது. இந்தியாவிலிருந்து கலாசார ரீதியாகவும், விளையாடவும் இலங்கைக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் செல்கின்றனர். தாக்குதல் நிலை நீடித்தால், இலங்கையில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இவ்வாறு குறைந்தால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். தமிழகத்தில் இருந்து ஜவுளி, நகைகள் போன்ற ஏராளமான பொருட்களை இலங்கை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பிரபலமான கடைகளில் இலங்கை மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். முக்கிய நகரங்களுக்கு இலங்கை பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் அந்த ஊர்களில் ஏராளமானோருக்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளை தடுத்தால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மீனவர்கள் அதிருப்தி: தமிழ் பற்று, தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போன்ற ரீதியில் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர், மனித உரிமைக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை நாகை மாவட்ட மீனவர்கள் கண்டித்துள்ளனர். மீனவர்கள் கூறியதாவது: கடலில் மீன்பிடிக்க செல்லும் போது, எப்போது, இலங்கை கடற்படையால் இழுத்துச் செல்லப்படுவோமோ என்று தெரியாத நிலையில் கவலையிலும், குழப்பத்திலும் செல்கிறோம். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு இன்றளவும் கேள்விக்குறியாக தொடர்கிறது. இந்நிலையில், எந்தவித அரசு பொறுப்புகளும் இல்லாத அப்பாவி சிங்கள மக்கள், தங்களின் புனித பயணத்திற்காக தமிழகம் வரும்போது, மனிதாபிமானமற்ற முறையில், அவர்களை தாக்கும் செயல் தமிழக மீனவர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும். இலங்கையில், 30 சதவீத சிங்களவர்கள் கலாசார ரீதியாக தமிழர்களுடன் குடும்ப ரீதியான உறவு கொண்டுள்ளனர். வேளாங்கண்ணிக்கு
யாத்திரையாக வந்தவர்களில் தமிழர்களும் உண்டு. ஏன் இவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை. கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இருந்து, தமிழகத்திற்கு வந்த மீனவ கூட்டமைப்பில் இடம் பெற்றிருந்த சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித மோதலும் இல்லை. சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம் என்றனர். இவற்றையெல்லாம் அறியாத தமிழக அமைப்புகள், அரசியல் ரீதியான தீர்வு காண முயல வேண்டும். அல்லது, இலங்கைக்கு சென்று போராட வேண்டும். அதைவிடுத்து, இதுபோன்ற செயல்களால் தமிழக மீனவர்களுக்கு தொடர் தொல்லை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர். தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு: வர்த்தகம், சுற்றுலாவிற்காக தமிழகம் செல்ல வேண்டாம்' என, இலங்கை அரசு அறிவித்துள்ளதால், தமிழகத்தில், ஜவுளி, உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்கள், இங்கு சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதுடன், அதிகளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தி.நகருக்கு தினசரி பலர் வந்து துணிகளை வாங்கிச் செல்கின்றனர். சுற்றுலாவுக்காக வருபவர்கள் தவிர, துணி வர்த்தகர்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர். இதுகுறித்து, தி.நகரைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் கூறும்போது, ""தினசரி இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். ஊர்களுக்கு செல்லும்போது சேலைகள், குழந்தைகளுக்கான துணிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், அவர்கள் வருவது நிற்கும் பட்சத்தில் 10 சதவீதம் அளவிற்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும்,'' என்றார். இது தவிர இலங்கையைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நேரடியாக, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வர்த்தகர்கள் வருகை நின்றால், 150 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஜவுளிக்கு அடுத்தபடியாக, உணவுப் பொருட்கள் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்து பெரும் இழப்பு ஏற்படும்
தமிழகத்தில் இருந்து சர்க்கரை, அரிசி
உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போதுள்ள சூழலில், உணவுப் பொருட்கள் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கலாம்.
இதனால், சர்க்கரை நிறுவனங்கள், அவர்களை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, வர்த்தக
வாய்ப்பு குறையும் நிலை உள்ளது. மேலும், தமிழகம் வழியாக இந்தியாவின் பிற
மாநிலங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களும் வர்த்தக வாய்ப்பினை
இழப்பதாகவும் கூறப்படுகிறது.இதே போல், இலங்கையை பொறுத்த மட்டில், அங்கு, இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழக துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் தான் அதிகளவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் லாரிகள், பஸ்கள் மற்றும் ஹூண்டய், மாருதி கார்கள், டி.வி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் அதிகளவில் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை அரசின் அறிவிப்பால், தமிழகம் வழியாக நடக்கும் இந்த வர்த்தகங்கள் 190 கோடி ரூபாய் அளவிற்கு குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்பதால், சிறு வர்த்தகர்களும் பாதிக்கப்பட உள்ளனர். வர்த்தக இழப்பு என்பது கடைக்கோடி தொழிலாளர்கள் வரை பாதிக்கும் சூழல் உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விட ஐந்து மடங்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக