சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள்
மன்னிக்கவும் கொத்தடிமைகள் கொல்லப்படுவது; நீண்டநாள் நோய்வாய்பட்டவர்களின்
மரணம்போல் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.
பலமுறை பட்டாசு பலிவாங்கிய உயிர்களில் ஒரு உயிர்கூட பட்டாசு அதிபர்களின் உயிரில்லை என்பதே இது விபத்தல்ல, கொலைதான் என்பதற்கு சாட்சி.
பச்சைத் தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த உள்ளுர் அணுஉலையான பட்டாசு, தீப்பெட்டி கம்பெனிகள், விருதுநகர் மாவட்டதையே சூறையாடி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்து மக்களின் விவசாயம், கல்வி, அடிப்படையான வாழ்வாதாரம் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது.
கூடங்குளம் அணுஉலை வந்தால் எப்படி அந்தப்
பகுயில் இருக்கிற மீனவர்களின் தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு
சீர்குலைந்துபோகுமோ, அதற்கு ஒரு மிக பிரம்மாண்டமான உதாரணமாக இருக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, மற்றும் தீப்பெட்டி கந்தக தொழிற்சாலைகள்.
மற்ற எல்லா தொழில்களிலும்; குறைந்த
சம்பளம். அதிகவேலை என்று வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லாமல்தான் வேலை
செய்கிறார்கள். ஆனால், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் மிக மிக அதிகமான
வேலையும், மிக மிக குறைநத் சம்பளம் மட்டுமல்ல, உயிருக்கே உத்திரவாதம்
இல்லை.
விற்பனையில், ‘நுகர்’வோரிடம் மிக அதிகமான
பட்டாசு விலையால் கொள்ளையடிக்கிற நிறுவனங்கள். தன்னிடம் வேலை
செய்கிறவர்களுக்கு மூன்று வேளை உணவுக்கு போதுமான அளவிற்குக் கூட சம்பளம்
தருவதில்லை.
சிவகாசியில் வெடி மருந்திற்கு இருக்கிற மரியாதை, அங்கிருக்கிற மனித உயிர்களுக்குக் கிடையாது.
உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு தயாராகிறவர்களைப்போல்,
உடல் முழுவதும் வெடிமருந்துகளால் பூசப்பட்டு, வேலை’ செய்கிறவர்கள்தான் சிவகாசி பட்டாசு ஆலை கொத்தடிமைகள்.
உடல் முழுவதும் வெடிமருந்துகளால் பூசப்பட்டு, வேலை’ செய்கிறவர்கள்தான் சிவகாசி பட்டாசு ஆலை கொத்தடிமைகள்.
ஆயிரம் ஆண்டுகளாக வானம் பார்த்த பூமியாக
சிறப்பாக விவசாயம் செய்த தமிழனின் விவசாயம், விருதுநகர் மாவட்டத்தில்
பட்டாசு கம்பெனி அதிபர்களால் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கிறது.
பட்டாசு தொழிற்சாலைகள் வந்ததற்குப் பிறகுதான் அந்தப் பகுயில் விவசாயம் முற்றிலுமாக சீர்குலைந்து போனது.
இன்று நாடெங்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ்
கொடிகட்டி பறக்கிறது ஆனால், சிவகாசி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள
நிலங்களுக்கு, எந்த விலையேற்றம் இல்லாமல் மதிப்பற்று கிடக்கிறது.
50 ஏக்கர் நிலம் வைத்திருக்கிற
நிலக்கிழாரும், நிலமற்ற கூலி விவசாயியும் அங்கு ஒன்றுதான். இருவரின்
குடும்பமுமே பட்டாசு கம்பெனி அடிமைகள்தான்.
அங்கிருக்கிற சிறிய அணைகளில் தண்ணீர்
தேங்கமால் பார்த்துக் கொள்வது, ஏரி, குளங்களை பராமரிக்காமல் அவைகளை
மேடுகளாக மாற்றி குடிநீருக்கும் பிரச்சினையாக்கி செயற்கை பஞ்சத்தை
உருவாக்கியது,
இப்படி விவசாயத்தை சீர்குலைப்பதின் மூலமாக,
விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பட்டாசு
தொழிற்சாலை நோக்கி விரட்டியடித்தது..
இப்படி பல ஆண்டுகளுக்கு முன் பட்டாசு அதிபர்களுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டத்தை வீணடித்த அரசு யாருடைய தலைமையிலான அரசு?
குழந்தைகளின் கல்வியை தடுத்து, குழந்தை
தொழிலாளார் முறை உருவாவதற்கு காரணமாக இருந்த பட்டாசு, தீப்பெட்டி
தொழிற்சாலைகளுக்கு அனுமதியும் அல்லது ஆசிர்வாதமும் கொடுத்த முதல்வர் யார்?
பட்டாசு அதிபர்களுக்கு ஆதரவாகவும்,
விருதுநகர் மாவட்ட விவசாய உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ‘தொழில் நகரம்’
என்ற பெயரில் கொலை நகரமாக சிவகாசியை உருவாக்கிய அந்த புண்ணியவான் அல்லது
புண்ணியவான்கள் யாரோ, அவர்களே இந்தக் கொலைகளை செய்த, செய்கிற கிரிமனல்கள்.
மண்ணையும் மக்களையும் கொன்று நடத்தப்படுகிற மனிதாபிமானம் அற்ற இந்த தொழிலை முற்றிலுமாக தடை செய்யவதுதான் இதற்கு ஒரே தீர்வு.
அணுஉலையை எதிர்த்து தீவிரமாக
போராடுவதைப்போல், பட்டாசுக் கம்பெனிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும்
வரைபேராடுவதுதான் விருதுநகர் மாவட்ட உழைக்கும் மக்களுக்கும், மண்ணுக்கும்
நாம் செய்கிற விடிவு.
மக்களை பட்டாசு நெருப்பிலிருந்தே காப்பாற்றாத இந்த அரசு, அணுஉலை ஆபத்திலிருந்து எப்படி காப்பாற்றும் என்று நாம் கேட்பது போலவே,
படுகொலைகள் செய்கிற பட்டாசு
நிறுவனங்களுக்கு எதிராக போராடி அவைகளை நிறுத்த முடியாத நம்மால், ஆபத்து
நிறைந்த அணுஉலையை மட்டும் எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று சிவகாசி
மக்கள் கேட்டால் நம்மிடம் என்ன பதிலிருக்கிறது?
**
பட்டாசு கம்பெனி முதலாளிகள் என்கிற வார்த்தைக்கு பதில், அதிபர்கள் என்கிற வார்த்தையை பயன்படித்திருக்கிறேன். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்…? இருந்தாலும்,
சம்பளம்கூட ஒழுங்காக தராத மட்டமான முதலாளிகளை பற்றி, மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வார், ‘இவர்கள் முதலாளிகளாக இருக்கக் கூட லாய்கற்றவர்கள்’ என்று.
அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் தொழிலாளிகளை கொன்று குவிக்கிற தமிழ் முதலாளிகளுக்கு நன்றாக பொருந்துகிறது.
தமிழ் தொழிலாளியை சுரண்டும்போது, தமிழ் முதலாளி எப்படி தமிழ் உணர்வை பார்ப்பதில்லையோ,
தொழிலாளிக்கு விரோதமான போக்கை கையாளும்போதும் ஜாதி உணர்வு கொண்ட எந்த முதலாளியும் ஜாதி பாசத்தையும் காட்டுவதில்லை.
http://mathimaran.wordpress.com/
http://mathimaran.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக