முதலில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிக்கு வருவோம். இவர்கள் வெளியிடும் தொலைக்காட்சி விளம்பரத்தை பலரும் பார்த்திருக்கலாம். அமிதாப் பச்சன், ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருவார். கட்டடம் பாழடைந்திருக்கும். எனவே மழைக் காலத்தில் கூரை ஒழுகும். மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகத்தின் மீது விழும் மழைச் சாரலை கைகளால் துடைப்பார்கள். அமிதாப்பின் மனம் வேதனைப்படும்.
உடனே புதிதாக ஒரு கட்டடத்தை கட்ட முடிவு செய்வார். இதற்காக தனது பழைய மாணவனான பிரபுவை தேடிச் செல்வார் (இந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் திலிப்பும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் நடித்திருப்பார்கள். ஆனால், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆசான், அமிதாப்தான்).
வசதியாக வாழும் பிரபு, தனது ஆசிரியரை வரவேற்பார். மனைவி, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவார். ஒன்றாக அமர்ந்து பழைய ஆல்பத்தை புரட்டி மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள். கை கழுவும்போது எப்படி பிரபுவிடம் உதவி கேட்பது என தயக்கம் எழும். மவுனமாக அமிதாப் விடைபெறுவார். சோர்வுடன் தனது பள்ளிக்கு திரும்புவார். அங்கு பார்த்தால், பிரபு, வல்லுனர்களின் உதவியுடன் புதிதாக ஒரு கட்டடத்தை கட்டிக் கொண்டிருப்பார். நெகிழும் அமிதாப், கண் கலங்குவார். பிரபு அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்.
இந்த விளம்பரம் அப்படியே கிருஷ்ணன் - குசேலன் புராணக் கதையின் நவீன வடிவம். இதற்கும் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அட்சய திருதி என்று ஒரு நாளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் அனைத்து நகைக்கடை உரிமையாளர்களும், ’இந்த நாளில் குண்டுமணி தங்கம் வாங்கினாலும் அது பெருமளவு பெருகும்’ என கதை விடுகிறார்களே… அந்த கதையின் மூல விதை இந்த கிருஷ்ணன் – குசேலன் கதைதான். ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை அன்று சொல்லப்பட்டு வரும் இந்தக் கட்டுக்கதையை நாள்தோறும் விளம்பரமாக ஒளி(லி)பரப்பித்தான் செய்கூலி சேதாரம் இல்லாமல் கல்யாண் ஜுவல்லர்ஸ் தன் சுரண்டலை நியாயப்படுத்தி வருகிறது. இதையேதான் புரட்சி என்றும் மார்தட்டுகிறது.
இது நிழல். இப்போது நிஜத்துக்கு வருவோம்.
2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கர்நாடக மாநிலத்தில் கல்வி கற்காதவர்களின் எண்ணிக்கை 67.04 சதவிகிதம். இதில், பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் படிக்காதவர்கள். அதேபோல், 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி, கர்நாடக மாநிலத்தில் 54 ஆயிரத்து 529 ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன.
பெங்களூரு அருகில் இருக்கும் கேவிபுரம் (Gavipuram) பள்ளியும் இதில் ஒன்று. 5ம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில்தான் ரஜினி காந்த், 1954 முதல் 1959 வரை படித்தார். பள்ளியின் இன்றைய நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாதி கட்டடம் இடிந்து விட்டது. மீதி, இடியும் தருவாயில் இருக்கிறது.
எனவே புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என பகுதி மக்கள், அரசுக்கு மனு கொடுத்தார்கள். ரஜினியின் வீட்டை நோக்கி படையெடுத்தார்கள். ரஜினிக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களில் உயிருடன் இருப்பவர்கள் சென்னை போயஸ் கார்டனுக்கு ‘பேரகன்’ செருப்பே தேயும் அளவுக்கு (இதுவும் ஒரு விளம்பரம்தான்!) நடையாய் நடந்தார்கள். ரஜினியின் தரிசனம் மட்டுமல்ல, சிங்கிள் டம்ளரில் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தேவைப்பட்ட தொகை, ரூபாய் ஒன்னரை கோடிதான். இது, இவர் வாங்கும் சம்பளத்தில் வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால், பெங்களூருவில் சொத்துக்களாக வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் செலுத்துபவர், தான், படித்தப் பள்ளிக்கு ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பின்னே தன் மனைவி நடத்தும் ‘த ஆஷ்ரம்’ பள்ளி வழியாக மாதந்தோறும் கணிசமான அளவில் லாபம் வருகிறது. இது கல்விச் சேவை. இதன் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றலாம். வருமான வரித்துறையை ஏய்க்க, தனது பள்ளிக்கே நிதியும் வழங்கலாம். அதே போல் பெரிய தொகையாக சம்பளம் கிடைத்ததால், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் கல்வியின் அருமை குறித்து உணர்ச்சிகரமாக வசனம் பேசி நடித்தது போல் நடிக்கவும் செய்யலாம். சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்து ஆரம்பப் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்தால் என்ன லாபம் கிடைக்கும் சொல்லுங்கள்?
கடைசியில் மாநில அரசே, இந்தப் பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டித் தர முன்வந்திருக்கிறது. மாநில கல்வித் துறை ரூபாய் 81.5 லட்சமும், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளு மன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முறையே ரூ.20 லட்சம் மற்றும் ரூ.25 லட்சமுமாக தருவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. மீதி தொகைக்கு கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் பொறுப்பு ஏற்றிருக்கிறது.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 2) அன்று பூமி பூஜை போடப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்திலேயே பல அரசுப் பள்ளிகள் இதே நிலையில்தான் இருக்கின்றன. சில இதை விட மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, இந்த ஒரு பள்ளிக்கு மட்டும் மாநில அரசு புதிதாக கட்டடம் கட்ட முன்வந்ததற்கு ஒரே காரணம், இது ரஜினி படித்த பள்ளி என்பதுதான். ரஜினியின் பெயர் ‘கெட்டு’ விடக் கூடாது என்பதும்தான். மாநில அரசை ஆள்வது பாரதீய ஜனதா கட்சி. ரஜினியோ அத்வானியின் விசுவாசி. ஒருவேளை நாளைக்கே ரஜினி தேர்தல் பரப்புரையில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வந்து விட்டால் இந்த செய் நன்றி உதவுமே என்பது பா.ஜ.க கணக்கு.
இப்போது சொல்லுங்கள். விளம்பரங்களில் ‘சவுண்ட் விடும்’ கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்துவது வெறும் காமெடிதான் என்பதை நிரூபித்த ரஜினிக்கு நாம் நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்? ரஜினியின் செல்வாக்கு ஒரு அரசையே ஒரு இடிந்த பள்ளிக் கூடத்தை கட்டவைக்கிறது என்றால் சும்மாவா?
இதையும் பாருங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக