டெல்லி: அரசியல் நீரா ராடியா விவகாரத்தில் பதிவு
செய்யப்பட்ட 5,800 தொலைபேசி உரையாடல்களின் நகல்களைத் தொகுத்து 2
மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம்
லைசென்ஸ், டாடா நிறுவனம் உள்ளிட்டவை தொடர்பாக நீரா ராடியா பேசிய டேப்
வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்று உச்ச
நீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.தங்கள் நிறுவனம் தொடர்பாக வெளியான நீரா ராடியா டேப் குறி்த்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் தரப்பிலிருந்து இந்த டேப் வெளியாகவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தந்தது. ஆனால், மத்திய அரசின் இந்த பதில் குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், டேப் விவகாரம் வெளியானது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணையை நடத்தவில்லை என்றும், இதுவரை நடைபெற்றுள்ள விசாரணையில் திருப்தி இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, நீரா ராடியாவின் இடைமறிக்கப்பட்ட 5,800 தொலைபேசி உரையாடல்களையும் நகல் எடுக்கும் பணி முடியவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், நாட்டின் பாதுகாப்புக்கு ஐயம் விளைவிக்கும் காரணிகள் இருந்தும் கூட, இடைமறிக்கப்பட்ட அனைத்து தொலைபேசி உரையாடல்களின் நகல்களையும் வருமான வரித்துறை சேகரிக்காதது கண்டனத்துக்குரியது.
தொலைபேசி உரையாடல்களை கண்டிப்பாக நகல் எடுக்க வேண்டும். ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்த அதிகாரிகள் குழுவிடம் அதைப் பெற்று, அதன் நகல்களை தகுந்த ஆதாரங்களுடன் தொகுத்து, 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை இயக்குனருக்கு (விசாரணை) உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக