சனி, 8 செப்டம்பர், 2012

அண்ணா வளைவு இடிந்து, ஜெயலலிதா தலையில் வீழ்ந்தது!

Viruvirupu
சென்னை அண்ணா நகரிலே உள்ள அண்ணா வளைவிளை அகற்ற உத்தரவிட்டு, அகற்ற முயற்சித்து, அதில் தோல்வியடைந்து, அதன்பின் அகற்றத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது தமிழக அரசு. “அகற்ற முயன்றோம். முடியவில்லை” என்று காரணம் சொல்லியிருந்தால், கௌவரவமாக போயிருக்கும்.
ஆனால், யாருக்கும் எதுவும் தெரியாது என்ற கதையாக, “அண்ணா வளைவு, நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னம் என்பதால், அதை அகற்ற வேண்டாம் என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறார்” என்று தமாஷ் பண்ணலாம் என அந்த அதிகாரி ஐடியா கொடுத்தாரோ, அல்லது முதல்வருக்கே தோன்றிய பிரகாச ஐடியாவோ தெரியவில்லை. தற்போது சொல்லப்பட்டுள்ள காரணம் அதுதான்!
இந்த ‘தமாஷ் காரணம்’, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாய்ப்பாக போயிருக்கிறது.
“வளைவை அகற்ற வேண்டாம் என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறார் என்பது இருக்கட்டும். நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்?” என்று கேட்டிருக்கிறார் அவர்.

கருணாநிதியின் அறிக்கையில், “யாரோ ஒரு அமைச்சர் உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது. அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத் தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில் முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா?
ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று வந்ததே? அப்போதே முதல்வர் அதனை அகற்றத் தேவையில்லை என்று அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசு பணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச் சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்ற பிறகு, அந்தப் பணியை நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?
இழப்பு மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால் பகுதி இடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது. அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டுமென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதை முன்னர் இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு இருக்குமா என்பதும் சந்தேகம்” என்று கூறப்பட்டுள்ளது.
அண்ணா வளைவு உடைந்து பாதசாரிகளின் தலையில் விழுகிறதோ இல்லையோ, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.-வின் தலையில் விழ சான்ஸ் உள்ளது.
ஏனென்றால், வளைவை அகற்றுகிறோம் என்று இவர்கள் பண்ணிய ஆர்ப்பாட்டங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது, அதை நிறுத்தி விட்டு அதற்கு கூறும் காரணத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம்ம மக்களோடு, வெளிப்படையாக தமாஷ் பண்ணக்கூடாது! தமாஷ் பண்ணினால், இப்போது சிரிக்க மாட்டார்கள், தேர்தலில் வாக்களிக்கும்போது சிரித்து விடுவார்கள்!

கருத்துகள் இல்லை: