புதன், 11 ஜூலை, 2012

ஸ்டாலின் உஷார்! கனிமொழி தரப்பில் வருகிறது பிளான்!!

Viruvirupu,
தி.மு.க.-வின் ஸ்டாலின் அணி அதீத உற்சாகத்தில் உள்ளது. “சிறை நிரப்பு போராட்டம் யாருக்கு நன்மை செய்ததோ, இல்லையோ, தளபதியின் கைதான் கட்சிக்குள் ஓங்கியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது” என்று உற்சாகப்படுகிறார்கள் அவர்கள்.
கடும் அப்செட்டில் உள்ளவர்கள், அழகிரி அணியினர்தான். அண்ணன் போராட்டம் நடந்த திசைக்கே வராமல் விட்டதில், கட்சிக்கு உள்ளேயே கிண்டல் கணைகளை தாங்க வேண்டிய பரிதாப நிலை அவர்களுக்கு. மதுரையிலேயே சுரத்தில்லாமல்தான் போராட்டம் நடந்தது. அஞ்சாநெஞ்சம் அடங்கிப் போனதன் காரணம், மதுரை காவல்துறை கையில் ரெடியாக வைத்திருக்கும் சில புகார்கள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
“புகார்களும் ரெடி, புகார் கொடுக்க ‘கன் பார்ட்டிகளும்’ ரெடி. மேலிடத்தில் இருந்து சிக்னல் வரவேண்டியதுதான் பாக்கி” என்ற கிசுகிசுப்பு, மதுரை போலீஸ் வட்டாரங்களில் உள்ளது.
இம்முறை ஸ்டாலின் தரப்பு, அழகிரி ஆட்களை கணக்கில் எடுக்கவே இல்லை. அவர்கள் லேசான பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது, கனிமொழியின் மூவ்களைத்தான். சந்தடி சாக்கில் கனிமொழி வின் பண்ணிக்கொண்டு போய்விடுவாரோ என்ற பயம், ஸ்டாலினுக்கும் இருந்தது என்கிறார்கள்.

காரணம், கருணாநிதியே, கனிமொழிக்கு ஆதரவாகதான் காய் நகர்த்தினார் என்றும் கூறப்படுகிறது. ராசாத்தி அம்மாளும் தம் பங்குக்கு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரை சென்னைக்கு வரவைத்து, ரகசிய மீட்டிங்குகள் வேறு நடத்திய விபரம், ஸ்டாலினை டென்ஷன் படுத்தியிருந்தது.
போராட்டத்துக்கு முன், பிரணாப் முகர்ஜி சென்னை வந்தபோது, அவரை சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு வரவைத்தார் கருணாநிதி. அதில் புரிந்து போனது ஸ்டாலினுக்கு எல்லாமே.
பிரணாப்பை வரவேற்க தாம்பரம் வரை சென்ற ஸ்டாலின், அவருடன் சி.ஐ.டி. காலனி இல்லம் வரை வராமல், இடையே கழன்று கொண்டார். வரவேற்புக்கு சென்ற அழகிரியும், சி.ஐ.டி. காலனி பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. (அழகிரியை மத்திய அமைச்சரவையில் இருந்து தூக்க வேண்டும் என்று டில்லியில் காங்கிரஸ் தலைமை நினைக்கும் போதெல்லாம், அபயக் கரம் கொடுத்தவர் பிரணாப் முகர்ஜிதான் என்பது உள் ரகசியம்)
அண்ணனும், தம்பியும் விலகிவிட்ட நிலையில், பிரணாப் சந்திப்பின்போது கனிமொழிக்கே முக்கியத்துவம் கிடைத்தது.
இந்தப் பின்னணியில்தான் தி.மு.க.-வின் சிறை நிரப்பு போராட்டம் நடந்தது. கனிமொழி தரப்பு ஃபுல் ஸ்விங்கில் கலக்குவார்கள் என எதிர்பார்த்திருக்க, சென்னை உட்பட சில மாவட்டங்களில் மட்டுமே கனிமொழியின் ஆதரவாளர்களால் பலம் காட்ட முடிந்தது. அதைக்கூட மீடியாக்கள் பெரிதாக ஊதிக் கொடுக்காத காரணத்தால், கனிமொழி தரப்பு அப்செட்.
ஸ்டாலினின் நண்பர் ஒருவர், இப்படியான விவகாரத்தில் அனுபவசாலி. அவரது கைவண்ணத்தில், மீடியா எக்ஸ்போஸ் முழுவதும், ஸ்டாலினை நோக்கியே இருந்தது.
கனிமொழி ஆதரவு எம்.பி. ஒருவர், “தலைவர் எப்படியாவது கனிமொழிக்கு கை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். மற்றையவர்கள் (!) அதை தடுக்க முயன்றாலும், கனிமொழியும், ராசாத்தி அம்மாளும் லேசில் விட்டுவிட மாட்டார்கள். விரையில் கனிமொழிக்கு ஆதரவாக பெரிய மூவ் ஒன்றை கட்சி எடுக்கும். அந்த அறிவிப்பு வெளியாகும்போது பாருங்கள் கனிமொழியின் பவரை” என்றார்.

கருத்துகள் இல்லை: